பொதுவாக பிரணவ ஜபமே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் ஆரம்பத்தில் பரமபுருஷரை ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. ஶ்ரீமத் பாகவதம் (1.2.11) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
வதந்தி தத் தத்வ-விதஸ் தத்வம் யஜ் ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி சப்த்யதே
“பூரண உண்மையை அறிந்துள்ள கற்றறிந்த ஆன்மீகவாதிகள் இரண்டற்ற இப்பொருளை பிரம்மன், பரமாத்மா அல்லது பகவான் என்று அழைக்கின்றனர்.” ஒருவன் பரமபுருஷரில் முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் இதயத்தில் உள்ள பரமாத்மாவைத் தேடும் அருவவாத யோகியாக மாறும் சுபாவத்திற்கு அவன் உட்பட்டு விடுவான் (த்யானாவஸ்தித-தத்-கதேன மனஸா பஷ்யந்தி யம் யோகின:). இங்கு ஓம்கார ஜபம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் ஆன்மீக தன்னுணர்வின் ஆரம்ப கட்டத்தில், ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை ஜபிப்பதற்குப் பதிலாக, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஒருவன் ஜபிக்கலாம். ஹரே கிருஷ்ண மகா மந்திரத்திற்கும் ஓம்காரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனெனில் இவ்விரண்டுமே பரமபுருஷரின் ஒலி வடிவங்களாகும்.
ப்ரணவ: ஸர்வ-வேதேஷு. எல்லா வேத இலக்கியங்களிலும் ஓம்கார ஓசையே ஆரம்பமாக விளங்குகிறது. ஓம் நமோ பகவதே வாஸுதேவாய. ஓம்கார ஜபத்திற்கும் ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் ஜபிக்கலாம். பகவத்கீதையில் (6.11) பின்வருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள இடத்தையோ அல்லது ஆசனத்தையோ பற்றிய முன்னேற்பாடுகள் இதற்குத் தேவையில்லை:
சுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸனமாத்மன:
நாத்யுச்ரிதம் நாதிநீசம் சைலாஜின-குஷோத்தரம்
“யோகத்தைப் பயில ஒருவன் தனிமையான ஓரிடத்திற்குச் சென்று, தர்ப்பைப் புல்லை தரையில் பரப்பி, பிறகு அதை ஒரு மான்தோலாலும், மெல்லிய துணியாலும் மூட வேண்டும். இந்த ஆசனம் அதிக உயரமாகவும் இருக்கக் கூடாது, தாழ்வாகவும் இருக்கக் கூடாது. அது புனிதமான ஓரிடத்தில் அமைந்திருக்க வேண்டும்.”
ஹரே கிருஷ்ண மந்திரத்தை எவரும் ஜபிக்கலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட இடமோ அல்லது ஆசனமோ தேவையில்லை. ஶ்ரீ சைதன்ய மகாபிரபு, “ந நியமித: ஸ்மரணே ந கால:” என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். அதாவது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபிப்பதற்கு உட்காரும் இடத்தைப் பற்றிய குறிப்பிட்ட சட்டதிட்டங்கள் எதுவும் கிடையாது. “நியமித: ஸ்மரணே ந கால:” என்ற கட்டளையானது காலம், இடம் மற்றும் தனிநபர் (கால, தேச, பாத்ர) ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். எனவே காலத்தையும், இடத்தையும் பொருட்படுத்தாமல், எவர் வேண்டுமானாலும் இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கலாம். குறிப்பாக இக்கலியுகத்தில், பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது போன்ற பொருத்தமான ஓரிடத்தைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். ஆனால் ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை எங்கும், எப்பொழுதும் ஜபிக்கலாம். இது மிகவும் விரைவாக பலனளிக்கும்.
ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும் அதேசமயம் கட்டுப்பாட்டு விதிகளையும் ஒருவன் அனுஷ்டிக்கலாம். இவ்வாறாக அமரும் பொழுதும், ஜபிக்கும் பொழுதும் ஒருவன் தன் உடலை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இது நல்ல ஜபத்திற்கு உதவியாக இருக்கும்; இல்லையெனில் ஒருவன் உறங்கிவிடக் கூடும்.
ஸ்ரீமத்-பாகவதம் 7.15.31 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆