ஹரே கிருஷ்ண என்பது வீடுதோறும் இப்போது அறியப்படுகிறதென்றாலும் அதன் பொருள் என்னவென்பதை அனேகமாக யாரும் அறிந்திலர். இது உச்சாடனம் செய்பவர்களை மெய் மறக்கச் செய்வதற்கான முறையா? உண்மை நிலையிலிருந்து தப்பிப்பதற்கான வழியா? அல்லது உயருணர்வை எழுப்பவல்ல உண்மையான தியான முறையா? இந்தச் சிறு கட்டுரையில் (1966ல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது) ஶ்ரீல பிரபுபாதா அவர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தின் உட்பொருளை விளக்குகிறார்கள்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் எழும் பரமான ஒலி அதிர்வு நமது பரமான உணர்வைப் புதுப்பிப்பதற்கான உன்னத வழிமுறை. உயிர் வாழும் ஆத்மாக்களாகிய நாம் ஆரம்பத்தில் கிருஷ்ண உணர்வுள்ளவர்களாக இருந்தோம். ஆனால் பன்னெடும் காலமாக நமது உணர்வில் ஜடமாசு படிந்து வந்துள்ளது. நாம் தற்போது வசிக்கும் ஜடச்சூழல் மாயை எனப்படும். மாயா என்றால் இல்லாதது. இந்த மாயை என்பது என்ன? நாமெல்லோரும் ஜட இயற்கையின் எஜமானர்களாகவிருக்க விரும்புகிறோம். இதுவே மாயை. ஏனெனில் உண்மையில் இயற்கையின் கடுமையான விதிகளின் பிடியிலிருப்பது நாமே. ஒரு வேலையாள் தன் சக்திவாய்ந்த எஜமானனைப்போல் செயற்கையாக நடக்க முயற்சிக்கும் போது அவன் மாயையிலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜட இயற்கையின் வளங்களை நம் நலனுக்காகக் பயன்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால் உண்மையில் மேலும் மேலும் அதன் இடற்பாடுகளில் சிக்கிக் கொள்கிறோம். எனவே, இயற்கையை வெல்லும் கடினமான போராட்டத்தில் நாம் ஈடுபட்டிருந்தாலும், முன்பை விட இப்போது அதிக அளவில் நாம் அதை நம்பியிருக்கிறோம். ஜட இயற்கைக்கு எதிரான இந்த மாயைப் போராட்டம் நிறுத்தப்படுவதற்கான வழி நித்யமான நமது கிருஷ்ண உணர்வை புதுப்பித்துக் கொள்வதே.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மந்திரம் இந்தப் பரிசுத்தமான மூல உணர்வைப் புதுப்பிப்பதற்கான உயர் வழி. இந்தப்பரமான அதிர்வை உச்சாடனம் செய்து நமது உள்ளங்களிலுள்ள சந்தேகங்களையெல்லாம் போக்கிக் கொள்ளலாம். “நான் காண்பதற்கெல்லாம் நானே ராஜா” என்ற அடிப்படையில் இந்த சந்தேகங்களெல்லாம் எழுகின்றன.
கிருஷ்ண உணர்வு மனத்தின் மீது செயற்கையாகத் திணிக்கப்படுவதல்ல. அது உயிர் ஜீவனின் பூர்விக இயல்பின் சக்தி. இந்தப்பரமான அதிர்வு நம் காதில் விழும் போது இந்த உணர்வு நம்மில் மீண்டும் எழுகிறது. இந்த மிக எளிய தியான முறை இந்த யுகத்திற்கு உகந்ததெனப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது ஆன்மிக தளத்திலிருந்து வரும் ஒரு பரமான ஆனந்தம் நம்முன் ஏற்படுவதை நாம் உணரலாம். கீழான விலங்கின நிலையில் இருந்தது போலவே, ஜட நோக்கின் பாற்பட்ட இந்த வாழ்விலும் புலன் நுகர்ச்சியிலிருந்து சற்று உயரும் போது ஜடச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான வழியை மனத்தின் துணைக்கொண்டு சிந்தித்து அறிய முயற்சிக்கிறோம். இந்தச் சிந்தனை நிலையிலிருந்து சற்று உயரும் போது புத்திசாலியானவன் எல்லாக் காரணங்களுக்கும் காரணமான உன்னத காரணத்தை உள்ளும் புறமும் அறிய முயற்சிக்கிறான். புலன்கள், மனம், புத்தி ஆகிய நிலைகளைக் கடந்து உண்மையான ஆன்மிக தளத்தை ஒருவன் அடையும் போது, அவன் பரமான தளத்தில் இருக்கிறான். இந்த ஹரே கிருஷ்ண மந்திரம் ஆன்மிகத் தளத்திலிருந்து கீர்த்தனம் செய்யப்படுகிறது. எனவே இந்த ஒலியதிர்வு புலன்கள், மனம், புத்தி ஆகிய நிலைகளைக் கடந்து உண்மையான ஆன்மிக தளத்திற்கு ஒருவனைக் கொண்டு சென்று பரமான தளத்தில் நிலை நிறுத்துகிறது. எனவே மந்திரத்தின் சொற்களின் பொருளை அறியத் தேவையில்லை. மனத்தளவிலான ஆராய்ச்சியோ, புத்தி பூர்வமான முயற்சியோ இதற்குத் தேவையில்லை. ஆன்மிகத் தளத்திலிருந்து இது தானாகவே ஏற்படுகிறது. எனவே, முன் தகுதிகள் எதுவுமின்றி யாரும் கீர்த்தனத்தில் பங்கு பெறலாம். மேலும் முன்னேற்றமடையும் போது ஆன்மிக தெளிவைப் பாதிக்கும் தவறுகளைச் செய்யக்கூடாது.
ஆரம்பத்தில் பரமான ஆனந்தங்களின் எல்லாவற்றின் அனுபவமும் ஏற்படாது. அந்த ஆனந்தங்கள் எட்டு வகையானவை, (1) மௌனமாய் நின்று விடுதல் (2) வியர்த்துப் போதல் (3) மயிர்க் கூச்செறிதல் (4) குரலில் விரிசல் (5) பதற்றம் ஏற்படுதல் (6) உடல் பற்றிய உணர்வு மறைதல், (7) ஆனந்த மேலீட்டால் அழுதல் (8) தன்னை மறந்த பரவச நிலை. ஆனால், சிறிது நேரம் கீர்த்தனம் செய்தாலே ஒருவன் உடனடியான ஆன்மிகத்தளத்தை அடைகிறானென்பதில் சந்தேகமில்லை. மந்திரத்தை இசைத்த உடனேயே ஆடவேண்டுமென்ற ஆர்வமும் ஏற்படுவது இதற்கான முதல் அறிகுறி. இதை நாங்கள் நடைமுறையில் கண்டிருக்கிறோம். ஒரு குழந்தைகூட கீர்த்தனம் செய்து ஆடுவதில் பங்கு பெறலாம். ஜட வாழ்வில் சிக்கியிருப்பவன் இந்தத் துவக்க நிலையை அடைவதற்கு மிக விரைவில் உயர்த்தப்படுகிறான். கடவுளிடம் அன்பு கொண்டிருக்கும் புனிதமான பக்தன் கீர்த்தனம் செய்யும் போது கேட்பவர்கள் மிகுதியான பலனைப் பெறுகிறார்கள். எனவே, கடவுளின் புனிதமான பக்தனின் வாயிலிருந்து வரும் கீர்த்தன இசையைக் கேட்க வேண்டும். அப்போது பலன் உடனடியாகக் கிடைக்கும். கூடுமானவரை பக்தரல்லாதவர்கள் செய்யும் கீர்த்தனத்தைக் கேளாமலிருப்பது நல்லது. பாம்பின் உதடுகள் பட்ட பாலில் விஷம் கலந்திருக்கும்.
“ஹரே” எனும் சொல் கடவுளின் (கிருஷ்ணரின்) சக்தியை அழைக்கிறது. கிருஷ்ண, ராம என்ற சொற்கள் பிரபுவாகிய கடவுளை அழைப்பவை. கிருஷ்ண, ராம ஆகிய இரண்டும் உன்னதமான ஆனந்தம் என்பதைக் குறிக்கும். ஹரா என்பது இறைவனின் பரமானந்த சக்தி. ஹரா என்பது அழைக்கும் போது ஹரே என்று மாறுகிறது. (விளி வேற்றுமை). கடவுளின் பரமானந்த சக்தி கடவுளை அடைவதில் நமக்கு உதவுகிறது.
ஜட சக்தியாகிய மாயையும் பிரபுவின் பல்வேறு சக்திகளில் ஒன்றாகும். உயிர்களாகிய நாமும் பிரபுவின் விளிம்பிலுறை சக்தியே. பௌதிக சக்தியை விட உயர்ந்தவர்களென்று வர்ணிக்கப்பட்டுள்ளது. உயர் நிலை சக்தி கீழ் நிலை சக்தியுடன் தொடர்பு கொள்ளும் போது பொருந்தாத ஒரு நிலை ஏற்படுகிறது. ஆனால் விளிம்பிலான உயர்நிலை சக்தி உயர்நிலை சக்தியான ஹராவோடு தொடர்பு கொள்ளும் போது அது தனது வழக்கமான ஆனந்த நிலையில் இடம் பெறுகிறது.
ஹரே, கிருஷ்ண, ராம ஆகிய மூன்று சொற்களும் மா மந்திரத்தின் பரமான வித்துகள். கீர்த்தனம் பிரபுவாகிய கடவுளையும் அவரது சக்தியையும் அழைக்கும் ஆன்மிக அழைப்பு. கட்டுப்பட்ட ஆத்மாவைக் காப்பாற்றுவதற்கான அழைப்பு. கீர்த்தனம் செய்வது ஒரு குழந்தை தன் தாயின் உதவியை நாடி அழைப்பதை முற்றிலும் ஒத்தது. அன்னை ஹரா தந்தையான இறைவனின் கருணையை பக்தன் பெறுவதில் உதவுகிறாள். உண்மையான ஆர்வத்துடன் இந்த மந்திரத்தைக் கீர்த்தனம் செய்யும் பக்தனுக்கு பிரபுவாகிய இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. பூசல்களும், பொய்மையும் நிறைந்த இந்த யுகத்தில் ஆத்மஞானம் பெறுவதற்கு இம்மந்திரத்தை விடச் சிறந்த பயனுள்ள சாதனம் வேறெதுவுமில்லை.
தன்னையறியும் விஞ்ஞானம் 5.2
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆