
தமிழில் சித்திரை, வைகாசி என்று மாதங்கள் இருப்பதைப் போன்று, சமஸ்கிருதத்திலும் மாதங்கள் உண்டு. அவற்றில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுவது தாமோதர மாதம் (கார்த்திகை மாதம்) (தமிழில் வரும் கார்த்திகை மாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது). சிறப்புமிக்க இம்மாசம், ஆண்டுதோறும் அக்டோபர் / நவம்பர் காலகட்டத்தில் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
தாமோதர மாத (கார்த்திக் மாத) மகிமைகளில் சில
கார்த்திக் மாதத்தில் மேற்கொள்ளப்படும் விரதங்கள் அதிக பலனைக் கொடுக்கக்கூடியவை; தூய்மைப்படுத்தும் விரதங்களில் அவை தலைசிறந்ததாகக் கருதப்படுகின்றன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கார்த்திக் மாதம் மிகவும் பிரியமானதாகும். மாதங்களில், பகவான் கிருஷ்ணர் மார்கஷீர்ஷ மாதமாகத் திகழ்வதைப் போல, ஸ்ரீமதி ராதாராணி அதற்கு முந்தைய மாதமான கார்த்திக் மாதமாகத் திகழ்கிறார். இது ராதாராணியின் மாதம் என்பதால், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும்.
கார்த்திக் விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எல்லாப் பாவங்களும் இதயத்திலிருந்து ஓடிவிடும். மற்ற விரதங்களை நூறுமுறை அனுஷ்டிப்பதால் வரும் பலன், கார்த்திக் விரதத்தை ஒருமுறை அனுஷ்டிப்பதால் அடையப்படும். கார்த்திக் விரதத்தை முறையாகப் பின்பற்றினால், மந்திரங்களை உச்சரிப்பது, தீர்த்த யாத்திரை செல்வது போன்றவற்றைக் காட்டிலும் இலட்சக்கணக்கான மடங்கு அதிகப் பலனை அடையலாம். இம்மாதத்தில் விருந்தாவனத்தில் தாமோதரரை வழிபடுவோர் எளிதில் கிருஷ்ண பக்தியை அடைய முடியும். கார்த்திக் மாதத்தில் கிருஷ்ணரை விருந்தாவனத்தில் வழிபட்ட துருவ மஹாராஜர் அவரது தரிசனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. (ஸ்ரீல சநாதன கோஸ்வாமி அவர்கள் அருளிய ஹரி பக்தி விலாஸ் புத்தகத்திலிருந்து)
விருந்தாவனத்தில் கார்த்திக் மாதம்
கார்த்திக் மாதம் முழுவதையும் (குறைந்தபட்சம் சில நாட்களாவது) விருந்தாவனத்தில் கழிப்பது மிகவும் சிறந்ததாகும். உலகிலுள்ள பக்தர்கள் அனைவரும் கார்த்திக் மாதத்தின்போது விருந்தாவனத்திற்கு வந்து பலன் பெற வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். அதற்கேற்ப, ஒவ்வொரு வருடமும் கார்த்திக் மாதத்தின்போது இஸ்கான் சார்பில் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு சத்சங்க வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
தாமோதர பூஜை
கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் . அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆






