தேவரிஷி ஶ்ரீ நாரதர் கூறுகிறார்: ‘மன்னரே! நந்தராஜர் கம்ஸனுக்குரிய வரியைச் செலுத்தவும், தன் ஆருயிர் நண்பரான வசுதேவரின் நலம் அறியவும், தனக்குத் திருக்குமரன் உதித்த நற்செய்தியை அவரிடம் பகிர்ந்து கொள்ளவும் மதுரா நகருக்குச் சென்றிருந்தார். அதேசமயம், கம்ஸனால் ஏவப்பட்ட கொடிய அரக்கியான பூதனை, குழந்தைகளைக் கொல்வதையே நோக்கமாகக் கொண்டு நகரங்கள், இல்லங்கள் மற்றும் பசுத் தொழுவங்கள் எங்கும் அலைந்து திரிந்து, இறுதியாக ஆயர்கள் அதிகம் வாழும் திருவாய்ப்பாடியான கோகுலத்தை வந்தடைந்தாள். அவள் பெருமூச்சு விடும்போது பன்றியைப் போல ‘கர்கர்’ என்ற பயங்கர ஒலி எழுந்தது. கோகுலத்தின் எல்லையை நெருங்கியதும், அவள் தன் மாயா சக்தியினால் திவ்யமானதொரு எழில் உருவத்தை எடுத்தாள். பதினாறு வயது நிரம்பிய பேரழகியாக வடிவெடுத்த அவளது தேக ஒளியானது சசிதேவி, சரஸ்வதி, லக்ஷ்மி, ரம்பை, ரதி ஆகியோரின் அழகையும் மங்கச் செய்யும் வண்ணம் அத்தனை வசீகரமாக இருந்தது. அவள் நடந்து வரும்போது, கம்பீரமாக உயர்ந்த அவளது மார்பகங்கள் தெய்வீக ஒளியுடன் அசைந்தாடின.
அவளது பேரொளியைக் கண்ட ரோஹிணி தேவியும் யசோதா பிராட்டியும்கூடத் தங்கள் பொலிவை இழந்தனர். அவள் வந்த வேகத்தில் பால கோபாலனைத் தன் மடியில் அள்ளி அணைத்துக் கொண்டாள். உள்ளத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு குழந்தையைக் கொஞ்சுவது போலக் குலாவிய அந்த மகா கொடூர அரக்கி, ஹலாஹல விஷம் தடவப்பட்ட தன் முலைக்காம்பைக் குழந்தையின் திருவாயில் வைத்தாள். இதைக் கண்டு பெருங்கோபம் கொண்ட அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனான ஶ்ரீ ஹரி, அவளது முலைப்பாலோடு சேர்த்து அவளது பிராணனையும் (உயிரையும்) உறிஞ்சிக் குடித்தார். இதனால் அவளது மார்பில் சகிக்க முடியாத கடுமையான வேதனை உண்டாகவே, “விடு! விடு!” என்று அலறியவாறு அவள் கத்தினாள்; குழந்தையுடனேயே இல்லத்திற்கு வெளியேயும் ஓடினாள். முற்றம் தாண்டி வெளியே சென்றதும் அவளது மாயா ரூபம் மறைந்து, தன் உண்மையான கோர வடிவம் வெளிப்பட்டது. அவளது கண்கள் பிதுங்கி வெளிவந்தன; உடல் முழுவதும் வெளிறிப் போனது; அழுதுகொண்டே நிலத்தில் சரிந்து வீழ்ந்தாள்.
அவள் எழுப்பிய மரண ஓலமானது ஏழு உலகங்களிலும், ஏழு பாதாளங்களிலும் பாய்ந்து பிரம்மாண்டம் முழுவதும் எதிரொலித்தது. சமுத்திரம் சூழ்ந்த பூமியே நடுநடுங்கியது. அங்கு ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. மன்னரே! பூதனையின் அந்தப் பிரம்மாண்டமான சரீரம் ஆறு கோஸ் (1 கோஸ் (கோசம்) = தோராயமாக 2 மைல்கள் 6 கோஸ் என்பதுசுமார் 12 மைல்கள் (6 x 2 = 12 மைல்கள்) ஆகும்) கொண்டதாகவும், இரும்பைப் போன்ற வலிமையோடும் இருந்தது. அவள் மலை போல் சரிந்து விழுந்ததால் அவளது முதுகின் கீழ் அகப்பட்ட பெருவிருக்ஷங்கள் யாவும் நொறுங்கித் தூளாயின. அந்தப் பயங்கரமான அரக்கியின் அசுர உடலைக் கண்ட ஆயர்கள், இவளது மடியில் சிக்கிய நம் குழந்தை ஒருவேளை உயிரோடு இருக்காதோ என்று பரஸ்பரம் அச்சத்துடன் பேசிக் கொண்டனர். ஆனால் அந்த அற்புதப் பாலகனோ, அவளது மார்பின் மீது அமர்ந்து கொண்டு, எவ்வித பயமுமின்றி ஆனந்தமாக விளையாடிச் சிரித்துக் கொண்டிருந்தான். பூதனையின் பாலைக் குடித்துவிட்டு அழகாகக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான். அந்த நிலையில் அவனைக் கண்ட யசோதையும் ரோஹிணியும் கோபியர்களுடன் ஓடிவந்து, குழந்தையை வாரித் தங்களது மார்போடு அணைத்துக் கொண்டு அளவற்ற வியப்பில் ஆழ்ந்தனர். குழந்தையை மீட்டெடுத்த கோபியர்கள் முறைப்படி அவனுக்கு திருஷ்டி கழித்து ரக்ஷை (காப்பு) செய்தனர். யமுனை நதியின் புனிதமான மண்ணை அவனது திருமேனியில் பூசி, யமுனை தீர்த்தத்தைத் தெளித்து, பசுவின் வாலினால் அவனைச் சுற்றித் திருஷ்டி கழித்தனர். பின்னர் கோமூத்திரமும், பசுவின் குளம்படி மண்ணும் கலந்த புனித நீரால் அவனுக்குத் திருமஞ்சனம் (நீராட்டு) செய்வித்து, கீழ்க்கண்ட கவச மந்திரத்தைப் பாடினர்.
அதன் பிறகு, குழந்தையான ஶ்ரீ கிருஷ்ணருக்குப் பரிபூரணப் பாதுகாப்பு அளிக்க, தாய் யசோதையும் ரோஹிணியும் முதிய கோபியர்களுடன் இணைந்து பசுவின் வாலைச் சுழற்றி மங்கள சைகை செய்தனர். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.19)
பாலகன் கோ ஜலத்தால் (பசுவின் சிறுநீர்) தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, பசுக்கள் நடமாடியதால் எழுந்த மங்களகரமான தூசுகள் குழந்தையின் திருமேனியில் பூசப்பட்டன. பின்னர், பரம்பொருளின் பல்வேறு திருநாமங்களை உச்சரித்து, அவனது உடலின் பன்னிரண்டு துவாதச அங்கங்களில் பசுவின் சாணத்தைத் தடவினர். நெற்றியில் திலகமிடுவது போலவே இந்த வழிபாடும் நெற்றியிலிருந்து துவங்கப்பட்டது. இவ்விதமாகக் குழந்தைக்கு தெய்வீகப் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. (ஶ்ரீமத் பாகவதம் 10.6.20)
கோபியர்கள் முதலில் தங்கள் வலது கையில் சிறிது நீர் எடுத்துக்கொண்டு ஆசமன முறையைச் செய்தனர். பின்னர் ந்யாஸ-மந்திரத்தினால் தங்களது கரங்களையும் சரீரத்தையும் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அதற்குப் பிறகு அதே மந்திர அதிர்வுகளைக் குழந்தையின் திருமேனியிலும் ஆவாஹனம் செய்து பொறித்தனர். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.21)
(தங்கள் குழந்தையான கிருஷ்ணரின் பாதுகாப்பிற்குரிய உன்னத வழிமுறைகளைப் பின்பற்றிய கோபியர்கள், பின்வரும் கவச மந்திரத்தைக் கூறி அவனைக் காத்ததாக ஶ்ரீ சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித்து மகாராஜனிடம் விவரித்தார்:) அஜர் உனது திருவடிகளைக் காக்கட்டும்; மணிமான் உனது முழங்கால்களையும், யக்ஞர் உனது தொடைகளையும், அச்யுதர் உனது இடுப்பின் மேல்பகுதியையும், ஹயக்ரீவர் உனது வயிற்றுப் பகுதியையும் காக்கட்டும். கேசவர் உனது இதயத்தையும், ஈஸர் உனது மார்பையும், சூர்யதேவன் உனது கழுத்தையும், விஷ்ணு உனது கரங்களையும், உருக்ரமர் உன் திருமுகத்தையும், ஈஸ்வரர் உன் சிரசையும் (தலையையும்) காக்கட்டும். சக்ரீ உன்னை முன்புறமிருந்தும்; கதாயுதத்தை ஏந்தியுள்ளதால் கதாதரி எனப்படும் ஶ்ரீ ஹரி உன்னைப் பின்புறமிருந்தும் காக்கட்டும். கோதண்ட வில்லேந்திய பகவானும், வாளேந்திய அஜனரும் உனது இரு பக்கங்களையும் காக்கட்டும். பாஞ்சஜன்யம் எனும் சங்கினை ஏந்திய பகவான் உருகாயர் எல்லாத் திசைகளிலிருந்தும் உன்னைக் காக்கட்டும்; உபேந்திரர் உன்னை மேலிருந்தும், கருடாழ்வார் உன்னைத் தரையிலிருந்தும் காக்கட்டும்; பரமபுருஷராகிய பகவான் ஹாலாதாரர் (பலராமர்) உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து காக்கட்டும். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.22)
ரிஷீகேஸர் உன் இந்திரியங்களையும் (புலன்களையும்), நாராயணர் உன் பிராண வாயுவையும் காக்கட்டும். ஶ்வேதத்வீபத்தின் நாதர் உன் இதயத்தின் மையத்தையும், யோகேஸ்வரரான பகவான் உன் மனதையும் காக்கட்டும். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.23)
பகவான் ப்ரிஸ்னிகர்பர் உன் புத்தியையும், பரமபுருஷர் உன் ஆத்மாவையும் காக்கட்டும். நீ விளையாடும் போது கோவிந்தனும், உறங்கும் போது மாதவனும் உன்னைக் காக்கட்டும். நீ நடக்கும் போது வைகுண்ட நாதரும், அமரும் போது ஶ்ரீதேவியின் மணாளனான பகவான் நாராயணரும் உன்னைக் காக்கட்டும். அவ்வாறே, நீ வாழ்வின் போகங்களை அநுபவிக்கும் போது, துஷ்ட கிரகங்களின் பயங்கர எதிரியான பகவான் யக்ஞபுக் எப்பொழுதும் உன்னைக் காக்கட்டும். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.24)
குழந்தைகளின் பரம எதிரிகளான தாகினிகள், யாதுதானிகள், குஷ்மாண்டங்கள் போன்ற சூனியக்காரிகளும்; பூதங்கள், பிரேதங்கள், பிசாசுகள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், விநாயாகர்கள் போன்ற துர்தேவதைகளும்; நினைவாற்றலை இழக்கச் செய்தும், சித்தபிரமை (பித்து) பிடிக்கச் செய்தும், துர்க்கனவுகளை விளைவித்தும், எப்போதும் உடலுக்கும், பிராணனுக்கும், புலன்களுக்கும் துன்பம் தரக் காத்திருக்கும் கொடரா, ரேவதி, ஜ்யேஷ்டா, பூதனை, மாத்ருகா போன்ற மாயக்காரிகளும், தீய நட்சத்திரங்களைப் போலக் குழந்தைகளுக்குப் பெருந்துன்பத்தை விளைவிக்கின்றன. ஆனால், அகிலேசான பகவான் விஷ்ணுவின் திருநாமம் ஒலிக்கும் மாத்திரத்தில் அவை யாவும் அச்சமடைந்து திசையறியாது ஓடி மறைந்துவிடும் என்பதால், பகவானின் நாம உச்சாரணத்தைக் கொண்டே அவற்றை வேரறுக்க முடியும். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.25)
ஶ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தாய் யசோதையின் தலைமையிலான அந்த கோபியர்கள் அனைவரும் தூய்மையான தாய்மைப் பாசத்தினால் பிணைக்கப்பட்டிருந்தனர். இவ்விதம் பாலகனுக்குரிய ரக்ஷா மந்திரங்களை ஓதி முடித்த பின், யசோதா பிராட்டி குழந்தைக்குத் தன் முலைப்பால் ஊட்டி, அவனை மெத்தென்ற படுக்கையில் துயில வைக்கப் படுக்க வைத்தாள். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.26)
அதே நேரத்தில், நந்தராஜர் முதலான கோபாலர்கள் மதுராவிலிருந்து கோகுலத்திற்குத் திரும்பி வந்தனர். வழியில் பூதனையின் பயங்கரமான உடலைக் கண்டு அவர்கள் அனைவரும் நடுக்கமுற்று கவலையடைந்தனர். பின்னர் ஆயர்கள் கோடாலிகளால் அவளது பிரம்மாண்ட உடலைத் துண்டு துண்டாக வெட்டி, யமுனை நதிக்கரையில் பல சிதைகளை அடுக்கு அவளது உடலைத் தகனம் செய்தனர். என்னே ஆச்சரியம்! பூதனையின் சரீரம் முற்றிலும் புனிதமடைந்து விட்டிருந்தது. அவளது உடல் வெந்து எரியும்போது, அதிலிருந்து எழுந்த புகையானது ஏலக்காய், லவங்கம், சந்தனம், அகில் ஆகியவற்றின் நறுமணம் கமழ்வதாக இருந்தது. ஆஹா! தன்னைக் கொல்ல வந்த பூதனைக்கும் உன்னத மோக்ஷத்தை (ஆன்மீக உலகத் தாயின் பதவியை) அருளிய அந்த ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர, நாம் வேறு யாரைச் சரணடையப் போகிறோம்?
பஹுலாஸ்வன் கேட்டான்: ‘தேவரிஷியே! குழந்தைகளைக் கொல்லும் கொடிய அரக்கியான பூதனை, தன் முற்பிறவியில் யாராக இருந்தாள்? இவளது மார்பில் நஞ்சு இருந்தது மட்டுமன்றி, உள்ளத்திலும் கள்ளக் கருத்து நிறைந்திருந்தது அல்லவா? அப்படியிருக்க, இவளுக்கு இத்தகைய உன்னதமான ஆன்மீக மோக்ஷ கதி எவ்வாறு வாய்த்தது?’
ஶ்ரீ நாரதர் கூறினார்: ‘முற்காலத்தில் மகாபலி சக்ரவர்த்தியின் யாகசாலையில் வாமன பகவானின் பேரெழில் வாய்ந்த உத்தம வடிவைக் கண்ட பலியின் புதல்வியான ரத்தினமாலை, அவர் மீது அளவற்ற புத்திர வாத்ஸல்யம் (தாய்மைப் பாசம்) கொண்டாள். “எனக்கும் இத்தகையதொரு அழகான மகன் கிடைத்தால், மழலைச் சிரிப்பு சிந்தும் அந்தக் குழந்தைக்கு நான் பாலூட்டி மகிழ்வேனே!” என்று தன் உள்ளத்திற்குள் சங்கல்பம் செய்துகொண்டாள். மகாபலி பகவானின் உன்னத பக்தன் என்பதால், வாமன பகவான் அவளது உள்ளக் கருத்தை அறிந்து, “உன் மனவிருப்பம் நிறைவேறும்” என்று வரமளித்தார். ஆனால், அதே வாமன பகவான் பின்னர் மகாபலி சக்ரவர்த்தியை வென்று அவனது செல்வங்கள் யாவற்றையும் கவர்ந்த போது, இந்த ரத்தினமாலை கோபமுற்று, “இவனுக்குப் பாலில் விஷம் கலந்து கொடுப்பேன்” என்று எண்ணினாள். அந்த ரத்தினமாலையே துவாபர யுகத்தின் இறுதியில் பூதனை என்ற பெயருடன் அரக்கியாகப் பிறந்தாள். ஶ்ரீ கிருஷ்ண பகவானின் திருமேனி ஸ்பரிசத்தால் அவளது அந்த இருவேறு விருப்பங்களும் ஒரே நேரத்தில் நிறைவேறின. மிதிலை மன்னா! ஶ்ரீ கிருஷ்ண பகவானின் இந்த பூதனை மோக்ஷ சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பகவானிடம் தூய்மையான பிரேமை பக்தி கிட்டும்; அதுமட்டுமன்றி தர்ம, அர்த்த, காம எனப்படும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூவகைச் செல்வங்களும் தடையின்றி சித்திக்கும் என்பதில் ஐயமுண்டோ?’
ஶ்ரீ கர்க ஸம்ஹிதை — அத்தியாயம் 13
கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்
கௌடீய வைஷ்ணவ ஆச்சார்யர்களில் முதன்மையானவரான ஶ்ரீல பக்திவினோத தாகூர், பூதனையை நம் இதயத்தில் குடிகொண்டிருக்கும் “பொய்யான ஆன்மீக குருவிற்கு” ஒப்பிடுகிறார். வெளிப்பார்வைக்கு பூதனை கிருஷ்ணரின் நல்வாழ்விற்காகப் பாலூட்ட வந்த தாயைப் போலத் தோன்றினாலும், அவளது உண்மையான நோக்கம் கிருஷ்ணரை மாய்ப்பதே ஆகும். அதுபோலவே, போலி குருமார்கள் ஜீவன்களுக்கு கிருஷ்ணபக்தியை வளர்க்க உதவுவது போலத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஜீவன்களைப் பௌதிக புலனுகர்ச்சி விஷயங்களிலேயே உழல வைப்பதால், அவர்கள் பூதனைக்கு நிகரானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
பூதனை வஞ்சக நோக்கத்துடன் கிருஷ்ணரை அணுகிய போதிலும், அவள் செய்த “பாலூட்டும் தாய்மைத் தொண்டை” மட்டுமே கருணைக் கடலான கிருஷ்ணர் கணக்கில் எடுத்துக் கொண்டார். அதன் விளைவாக, உடனடியாகப் பூதனைக்குத் தன் ஆன்மீக உலகத்தில் (கோலோக பிருந்தாவனத்தில்) தாய்க்குச் சமமான உன்னத நித்திய ஸ்தானத்தை (தாத்ரி பதவி) அருளி ஆட்கொண்டார்.
பூதனையைக் கிருஷ்ண பரமாத்மா வதம் செய்த இந்த உன்னத லீலையைக் கேட்பவர்கள், திண்ணமாக ஶ்ரீ கோவிந்தனின் மீது அனன்ய பக்திப் பற்றினை அடைவார்கள். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.44)
– ஸ்ரீல பக்திவிநோத தாகூர் / சைத்ன்ய சிக்ஷாம்ருதம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆