ஶ்ரீ கர்கர் கூறினார்: ‘சௌனகரே! நான் ஶ்ரீ கிருஷ்ணரின் சிறந்த திவ்ய சரித்திரத்தை விவரித்துக் கூறினேன். இதை பக்தியோடு கேட்பவன் பெரும் பாக்கியசாலி ஆகிறான். அவனுக்கு பரம புருஷார்த்தம் (வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம்) நிச்சயம் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஶ்ரீ சௌனகர் கேட்டார்: ‘முனிவரே! பகவான் கிருஷ்ணரின் மங்களகரமான சரித்திரம் அமுதத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறந்த இனிப்புப் பலகாரம் போன்றதாகும். இதை நேரடியாக உங்கள் வாயால் கேட்டு நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் ஆனோம். தவச்செல்வரே, நல்லவர்களில் சிறந்தவரான பஹுலாஸ்வ மன்னன் ஶ்ரீ கிருஷ்ணரின் பரம பக்தர். அவரது மனதில் எப்போதும் அமைதி நிறைந்திருந்தது. இதற்குப் பிறகு அவர் நாரத முனிவரிடம் எந்த விஷயத்தைக் கேட்டார் என்பதை எங்களுக்குக் கூறியருளுங்கள்.
ஶ்ரீ கர்கர் கூறினார்: ‘சௌனகரே! அதன் பின் மிதிலை மன்னன் பஹுலாஸ்வன் மகிழ்ச்சியும் அன்பும் ஒன்றுசேரப் பெற்று பரவசமடைந்தார். தர்ம சிந்தனை கொண்ட அவர், முழுமுதற் கடவுளான ஶ்ரீ கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி நாரதரிடம் கூறினார்.
பஹுலாஸ்வன் கூறினார்: ‘முனிவரே! தாங்கள் மிக உயர்ந்த புண்ணியம் செய்துள்ளீர்கள். உங்களுடைய சேர்க்கையால் நானும் பெரும் பாக்கியம் பெற்றவன் ஆனேன். ஏனெனில், பகவானுடைய பக்தர்களின் சேர்க்கை கிடைப்பது மிகவும் அரியது, கடினமானது. அற்புதமாக பக்தர்களிடம் அன்பு காட்டும் கண்ணன், தன் இளம்பருவத்தில் செய்த விசித்திரமான லீலைகளை எனக்குக் கூறியருள வேண்டும்.
ஶ்ரீ நாரதர் கூறுகிறார்: ‘மன்னா! நீ ஶ்ரீ கிருஷ்ணருக்குப் பிடித்தமான தர்மத்தைக் கடைப்பிடிப்பவன். நீ கேட்ட கேள்வி மிகவும் சிறப்பானது. நிச்சயம் நல்லவர்களின் சேர்க்கை எல்லோருக்கும் நன்மையை அதிகமாக்கும்.
ஒருமுறை ஶ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திர நாள் அன்று, நந்தராஜனின் மனைவியான யசோதா, கோப-கோபியர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து, அந்தணர்கள் கூறியபடி மங்களகரமான காரியங்களைச் செய்தார். அச்சமயம் அழகிய குழந்தையான ஶ்ரீ கிருஷ்ணருக்குச் சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டது. உடலின் உறுப்புகளில் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அவரை மடியில் எடுத்துக் கொண்ட தாய், மலர்ந்த தாமரை போன்ற அவருடைய அழகிய கண்களுக்கு மை தீட்டினார். கழுத்தில் புலிநகம் சேர்ந்த சந்திரஹாரம் என்ற மாலையை அணிவித்தார். தேவதைகளை வணங்கி அந்தணர்களுக்குச் சிறந்த தானங்களை வழங்கினார். அதன் பின் யசோதா தன் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தார். அந்த நல்ல நாளில் வந்திருந்த ஒவ்வொரு கோபியையும் வரவேற்றார். அந்த மங்களகரமான மாளிகையில் அன்று ஏராளமான கோபர்கள் தொடர்ந்து வந்து போய்க்கொண்டிருந்ததால், அவர்களுக்குச் சேவை செய்வதிலேயே யசோதா மூழ்கியிருந்தார். இதனால் அவரால் தன் குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்க முடியாமல் போனது.
அதே நேரம், பாவாத்மாவான கம்சன் அனுப்பிய ஒரு அரக்கன் அங்கு வந்தான். அவன் பெயர் உத்கசன். அவன் வண்டியில்—பால், தயிர்ப் பானைகள் வைக்கப்பட்டிருந்த வண்டியில்—உட்கார்ந்தான். குழந்தையின் தலையில் அந்தச் சக்கரத்தைத் திருப்பி வீழ்த்தும் முயற்சியில் அவன் ஈடுபடலானான். இதற்குள் ஶ்ரீ கிருஷ்ணர் அழுகையோடு தன் திருவடிகளால் (கால்களால்) அந்தச் சகடத்தை (வண்டியை) உதைத்தார். அந்தப் பெரிய வண்டி தூள்தூளாக நொறுங்கியது; அந்த அரக்கனும் இறந்து கீழே விழுந்தான். அத்தகைய நிலையில், அவன் தன் வாயுமயமான உடலை விட்டுவிட்டு, மாசற்ற தெய்வீக உடலைப் பெற்றான். அவன் ஶ்ரீ கிருஷ்ணரை வணங்கி, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக விமானத்தில் அமர்ந்து, பகவானுடைய சொந்தத் தாமமான (திருத்தலமான) கோலோகத்திற்குச் சென்றுவிட்டான்.
அச்சமயம் வ்ரஜ வாசிகளான கோப-கோபியர் அனைவரும் ஒன்றாக அங்கு வந்து, அங்கிருந்த சிறுவர்களிடம், “வ்ரஜ குமாரர்களே! இந்தச் சகடம் (வண்டி) தானாகவே விழுந்துவிட்டதா? அல்லது யாராவது இதைத் தள்ளி வீழ்த்தினார்களா? எப்படி இதற்கு இந்த நிலை வந்தது? நீங்கள் அறிந்தால் கூறுங்கள்,” என்று கேட்டனர்.
சிறுவர்கள் கூறினர்: “தொட்டிலில் தூங்கிய இந்த பாலகன், பால் குடிப்பதற்காக அழுதபடியே தன் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய கால் அந்த வண்டியின் மேல் மோதியது. அதனாலேயே இந்த வண்டி கவிழ்ந்துவிட்டது.”
வ்ரஜ பாலகர்களின் இந்தப் பேச்சில் கோப-கோபியருக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. அவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து, “மூன்று மாதமே ஆன இந்தச் சிறிய குழந்தை எங்கே? இவ்வளவு கனமான இந்த வண்டி எங்கே?” என்று யோசிக்கலானார்கள். குழந்தைக்கு ஏதோ பாலக்ரஹம் (குழந்தைகளைத் தாக்கும் தீய சக்தி) பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் யசோதாவிற்குத் தோன்றியது. ஆகவே, அவர் குழந்தையைத் தன் மடியில் ஏந்தியவாறு, அந்தணர்கள் மூலம் முறைப்படி கிரகசாந்தி பூஜைகளைச் செய்வித்தார். அதில் அந்தணர்களுக்குச் சிறந்த தானங்களை வழங்கி, அவர்களைத் திருப்தியடையச் செய்தார்.
பஹுலாஸ்வன் கேட்டான்: “முனிவரே! உத்கசன் எனும் இந்த அரக்கன், முற்பிறவியில் எத்தகைய புண்ணிய காரியங்களைச் செய்ததன் பலனாக பகவான் கிருஷ்ணரின் திருவடி ஸ்பரிசத்தைப் (தொடுதலைப்) பெற்று, அக்கணமே முக்தியை அடைந்தான்?”
ஶ்ரீ நாரதர் கூறினார்: “மிதிலேஷ்வரா! அந்த உத்கசன் முற்பிறவியில் ஹிரண்யாக்ஷனுடைய மகனாக இருந்தான். ஒருநாள் அவன் லோமஷ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கிருந்த மரங்களை உடைத்துப் பொடியாக்கியபடி இருந்தான். மஹா பலசாலியான உத்கசனின் இந்தச் செயலைக் கண்ட அந்தண ரிஷிகள் கோபமடைந்து, ‘மூட மதியாளனே, நீ உடலற்றவனாகப் போவாய்’ என்று சாபமளித்துவிட்டனர். அந்த கர்ம பலனால், அவனுடைய சரீரம் பாம்பு தன் தோலை உரிப்பது போலக் கீழே விழுந்தது. அதைக் கண்ட அந்த அரக்கன் முனிவரின் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான்.”
உத்கசன் கூறினான்: “முனிவரே! தாங்கள் கருணைக் கடலானவர், எனக்கு அருள் புரியுங்கள். நான் தங்களுடைய பெருமையை அறியாமல் தவறு செய்துவிட்டேன். எனக்கு என் உடலை மீண்டும் தந்தருளுங்கள்.”
ஶ்ரீ நாரதர் கூறுகிறார்: “மன்னா! அவனுடைய அந்த வேண்டுதலால் முனிவர் மனம் மகிழ்ந்தார். அவர் பிரம்மாவின் நூறு ஆயுள்களைக் கண்டவர்—அதாவது நூறு பிரம்மாக்கள் தோன்றி அழியும் காலம் வரை வாழும் நீண்ட ஆயுளை உடையவர். அத்தகைய சாதுவின் கோபம்கூட வரமாக மாறிவிடுகிறது என்றால், அவருடைய வரத்தைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?”
லோமஷ முனிவர் கூறினார்: “சாக்ஷுஷ மன்வந்தரம் வரை உன் உடல் வாயுமயமாகவே (உருவமில்லாமல்) இருக்கும். அதன்பின், வைவஸ்த மன்வந்தரத்தில் (28-வது துவாபர யுகத்தின் முடிவில்) பகவான் கிருஷ்ணரின் திருவடி ஸ்பரிசத்தால் உனக்கு முக்தி கிடைக்கும்.”
ஶ்ரீ நாரதர் கூறுகிறார்: “மேற்கூறிய வரமாக மாறிய சாபத்தின் காரணமாக, லோமஷ முனிவரின் பெருமையால் உத்கசனும் பகவானுடைய பரமபதத்தை அடையும் தகுதியைப் பெற்றுவிட்டான். வரமும் சாபமும் அளிப்பதில் பூரண சுதந்திரம் உடைய அத்தகைய சிறந்த சாதுக்களுக்கு என் நமஸ்காரங்கள்.”
ஶ்ரீ கர்க ஸம்ஹிதை — அத்தியாயம் 14
கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்
சகடாசுரனை நமது இதயத்தில் குடிகொண்டிருக்கும் கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஶ்ரீல பக்திவிநோத தாகூர் ஒப்பிடுகிறார். பகவான் கிருஷ்ணர் தொட்டிலை (வண்டியை) உதைத்தபோது, அதன் இரண்டு சக்கரங்களும் கழன்று விழுந்தன. அதே போன்று, நாம் பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்தால், பிறப்பு மற்றும் இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரமும் நம்மை விட்டு முழுமையாகக் கழன்றுவிடும் என்று ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீல பக்திவிநோத தாகூர் / சைத்ன்ய சிக்ஷாம்ருதம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆