இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.
மஹாராஜாவான ஶ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் “அரக்கன் மதுவை அழித்ததால் ‘மதுசூதனன்’ என்ற திருநாமம் பெற்றவரே! ஶ்ரவண மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்மாவே, தயைகூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாகச் சொல்லுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.
முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், “மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்!” என்று விரத மகிமையை எடுத்துரைத்தார்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறுதல்:-
இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந்த ஏகாதசி திதியின் மகிமையைக் கேட்பவர் “அஶ்வமேத யாகம்” செய்த பலனை அடைவர்.
துவாபர யுகத்தின் தொடக்கத்தில், “மஹிஷ்மதிபுரி” என்னும் ராஜ்யத்தை “மஹிஜித்” என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அனைத்து வளங்களும் சுகங்களும் அந்த நாட்டில் இருந்தாலும், அரசன் உற்சாகமின்றி, ஊக்கமில்லாமல் கடமையே என்று ஆட்சி செய்து வந்தான். ஏனென்றால், அரசனுக்குப் பின் ஆட்சி செய்ய ஆண் வாரிசான புத்திரன் இல்லை என்ற சோகம் அவனை வாட்டி வதைத்தது. திருமணத்திற்குப் பின் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்குப் “புத்திரன்” மட்டும் இல்லையெனில், இந்த உலக வாழ்க்கை மட்டுமின்றி எவ்வுலக வாழ்க்கையிலும் ஆனந்தம் கிட்டாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
புத்திரன் என்ற சொல்லுக்கு “நரகத்திலிருந்து காத்து விடுதலை அளிப்பவர்” என்று அர்த்தம். ஆகையால் இல்லறத்தார் தங்கள் வாழ்க்கை பரிபூரணமாகப் “புத்திரன்” பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். நல்மகனை ஈன்றெடுத்து, நல்ல பயிற்சியும் அளித்து, ஒரு தலைசிறந்த நல்ல புத்திரனாக அவனை உருவாக்குவது தந்தையின் கடமையாகவே இருக்கிறது. அக்கடமையைச் சரிவர நிறைவேற்றுவோர் புத்திரனால் “பு” என்ற நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவார்கள். இந்த நியதியானது “சரணாகதி” என்று சரணடைந்த பக்தர்களையோ அல்லது நானே (ஶ்ரீ கிருஷ்ணர்) அனைத்துமாக இருப்பவன் என்று சரணாகதி அடைந்த பக்தர்களையோ கட்டுப்படுத்தாது. ஏனெனில் கிருஷ்ண பரமாத்மாவான நானே அவர்களுக்கு மகனாகவும் பெற்றோராகவும் அமைகிறேன் என்று கூறினார்.
மேலும், சாணக்கியர் கூறுகிறார்:
உண்மை (சத்யம்) என் அன்னை, ஞானம் (அறிவு) என் தந்தை, என் தர்மம் (தொழில்) என் சகோதரன், கருணை என் நண்பன், அமைதி என் மனைவி, மன்னித்தல் என் புத்திரன். ஆக சத்யம், ஞானம், தர்மம், கருணை, அமைதி, மன்னிப்பு ஆகிய இவை ஆறும் எனது குடும்பத்தினர் என்று கூறுகிறார்.
ஸ்லோகம்:-
“சத்யம் மாதா, பிதா ஞானம்
தர்மோ ப்ராதா தயா சகா
சாந்தி பத்னீ க்ஷமா
புத்ரா ஷடேதே மம பந்தவா!!!”
என்று ஸ்லோகத்தில் சாணக்கியர் கூறியிருக்கிறார்.
இறைவனின் பக்தர்களிடம் உள்ள இருபத்தாறு முக்கிய குணங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுவது “மன்னித்தல்” என்னும் நற்பண்பு. எனவே, பக்தர்கள் இந்த நற்பண்பைக் கூடுதல் முயற்சி மேற்கொண்டு தங்களிடம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மன்னித்தல் என்னும் புத்திரன்:-
இந்த ஸ்லோகத்தில் சாணக்கியர் கூறுவது, “க்ஷமா” அதாவது “மன்னித்தல்” தனது புத்திரன் என்று கூறுகிறார். அதற்கு பக்தர்கள் இறைவனை அடைய வேண்டி துறவு பாதையில் இருந்தாலும், புனிதமான ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு “மன்னித்தல் என்னும் நண்பனான புத்திரனை” அடைய வேண்டி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மஹிஜித்தனுக்கு வாரிசு:-
அரசன் மஹிஜித்தனும் தனக்கு வாரிசு அமைய வேண்டி நெடுங்காலம் கடினமான பூஜை, ஆராதனை, பிரார்த்தனை எல்லாம் செய்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல, ஆண்டுகள் பல கழிந்து சென்றன. எதுவும் பலனளிக்கவில்லை. அரசனின் கவலை பல மடங்கு அதிகரித்தது.
ஒருநாள் தனது அமைச்சரவையைக் கூட்டி, “ஞானத்தில் சிறந்த சான்றோர்களே! இப்பிறவியில் நான் ஒரு தவறும் செய்யவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக கேடு விளைவித்துச் சேகரித்த சொத்துக்களும் எனது கருவூலத்தில் இல்லை. தெய்வம், தேவர்கள் அல்லது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தானத்தை அபகரித்ததும் இல்லை. அரசனின் கடமையாக ராஜ்ஜியங்களை வெல்வதற்காகப் போர் புரிந்தபோதும், இராணுவ விதிமுறைகளை மீறாமல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுப் போர் புரிந்துள்ளேன். எனது நாட்டின் குடிமக்களை எனது குழந்தைகளாகத்தான் நினைத்து அவர்களை இன்று வரை நான் பாதுகாத்து வந்துள்ளேன். எனது சொந்தங்கள், உற்றார், உறவினர் சட்டத்தை மீறி இருந்தால், விசாரித்து அதற்குரிய தண்டனையை பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக அளித்துள்ளேன். என் எதிரி மென்மையானவராகவும் பக்திமானாகவும் இருந்தால், அவரை வரவேற்று உபசரித்துள்ளேன். ஒரு நேர்மையான அரசனுக்குரிய அனைத்து தர்மங்களையும் தவறாது கடைப்பிடித்து அரசாளும் எனக்கு ‘ஏன் ஆண் வாரிசு இதுவரை பிறக்கவில்லை?’ என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஆகையால், பூமியில் இருமுறை பிறவி எடுக்கும் புனித ஆத்மாக்களே! கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டு, வேதங்கள் காட்டும் வழியில் வாழும் எனக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருப்பதற்கான காரணத்தைத் தயைகூர்ந்து தெரிவியுங்கள்” என்றான் மன்னன்.
இதைக் கேட்ட அரசனின் அமைச்சர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். அவர்களுக்கும் இதற்கான சரியான விடை கிடைக்காததால், தவத்தில் சிறந்த மஹரிஷிகளின் ஆஶ்ரமத்தை அணுகி அவர்களிடம் அரசனின் கேள்விக்கான விடையைத் தேடினர். அவர்களின் முயற்சியின் நிறைவில் உத்தமமான, தூய, தெய்வீக, தம் உள்ளத்தில் மனநிறைவு கொண்ட, கடும் உபவாச விரதத்தை மேற்கொண்டு இருக்கும் மஹரிஷி ஒருவரின் ஆஶ்ரமத்தை அடைந்தனர்.
யார் அந்த மஹரிஷி?:-
ஐம்புலன்களையும் அடக்கி, சினத்தை வெற்றி கண்டு, தனது தொழில் தர்மத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்று, நான்கு வேதங்களிலும் அபார ஞானமும், நிகரில்லாத தம் தவ வலிமையினால் பெற்ற வரத்தால் பிரம்மாவின் ஆயுளுக்கு நிகராகத் தனது ஆயுளையும் விருத்தி செய்த “மஹாமுனி லோமச ரிஷியின் ஆஶ்ரமம்” ஆகும்.
மஹாமுனி லோமச முனிவர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானியாவார். ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், அவரது உடலில் இருந்து ஒரு முடி வெளியே விழும். (ஒரு கல்பம் என்பது பிரம்மாவிற்கு 12 மணிநேரமாகும்; அதாவது 4,320,000,000 வருடங்கள்). அத்தகைய தவசிரேஷ்டரைக் கண்ட மகிழ்ச்சியினால் அமைச்சர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தைத் தெரிவித்தனர். மஹரிஷியின் தரிசனத்தின் சாந்நித்தியத்தில் கட்டுண்ட அமைச்சர்கள், மெதுவாக மீண்டு, மஹரிஷியிடம் மிகவும் பணிவாக – “நாங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாக்கியத்தால், இன்று தங்களது தரிசனம் கிடைக்கப் பெற்றோம்” என்றனர்.
மஹரிஷி லோமசர் அமைச்சர்களின் விநயத்தைக் கண்டு, அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்னை ஏன் பாராட்டுகிறீர்கள்?” என்று வினவினார். “உங்கள் பிரச்சினைதான் என்ன? என்பதை முதலில் கூறுங்கள். கட்டாயம் என்னால் இயன்றவரை அதைத் தீர்க்க வழி சொல்கிறேன்” என்றார்.
“எங்களைப் போன்ற மஹரிஷிகள் மற்றவர்களுக்கு உதவுவதே தலையாய கடமையாகும். அதில் சந்தேகம் வேண்டாம்!” என்றார்.
பகவான் மஹாவிஷ்ணுவின் மீது கொண்ட அபார பக்தியின் விளைவால், லோமச மஹரிஷி அனைத்து நல்ல குணங்களையும் பெற்றிருந்தார். ஶ்ரீமத் பாகவதம் (5.18.12) ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. அதாவது,
யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சனா
ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரா:
ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத் – குணா
மனோரதேனாஸதி தாவதோ பஹி:
மொழிபெயர்ப்பு:
முழுமுதற் கடவுளான வாசுதேவர் மீது மாசற்ற பக்தியில் வளர்ச்சியடைந்திருப்பவரிடம் மேன்மைக்குணங்களான சமயதர்மம், ஞானம், துறவு போன்றவையும் வெளிப்படுகின்றன. மாறாக பக்தித் தொண்டு செய்யாது பௌதீகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவனிடம் நற்குணங்கள் ஏதும் இருப்பதில்லை. இவன் யோக ஸித்திப் பயிற்சியில் சேர்ந்தவனாகவோ அல்லது தனது குடும்பத்தையும் உறவினர்களையும் காப்பதற்கு நேர்மையான முயற்சி உடையவனாக இருந்தாலும், அவன் அவனது சுய மனயூகத்தினால் விரட்டப்படுவதோடு, பகவானின் புறச்சக்தியின் தொண்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டியவனாகிறான். இம்மனிதனிடம் என்ன நற்குணம் இருக்க முடியும்?
ஏனெனில், அவர்களின் மனமானது மாய வெளித்தோற்றமான ஆதாயத்தின் (லோகாயத சுகங்களின்) மீது லயித்துள்ளது என்று அமைச்சர்களுக்கு உபந்யாசம் செய்தார் லோமச மஹரிஷி.
அமைச்சர்கள் லோமசரிடம் சிக்கலைக் கூறுதல்:-
லோமச முனிவரின் அமுத மொழியைக் கேட்ட அரசனின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் மஹரிஷியிடம், “தவசிரேஷ்டரே! எங்களை ஆட்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை தெரியாமல், அதைத் தேடி அலைந்து, கடைசியில் தங்களது ஆஶ்ரமத்தைக் கண்டு தங்களிடம் அதற்கான விடையை வேண்டி வந்தோம்” என்றார்கள்.
“இவ்வுலகில் தங்களைத் தவிர யாராலும் இந்தச் சிக்கலைத் தீர்க்க இயலாது” என்றார்கள்.
மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தைப் பற்றி லோமசரிடம் கூறினார்கள் அமைச்சர்கள்.
அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்ட மஹரிஷி, சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து, மஹிஜித்தின் (மன்னன்) முந்தைய பிறவியைப் பற்றி அறிந்துகொண்டார்.
அரசனின் முற்பிறவி:-
உங்கள் அரசன் தன்னுடைய முற்பிறவியில் வணிகனாகப் பிறந்திருந்தார். அப்பிறவியில் செல்வம் எத்தனை இருந்தாலும் போதாது என்ற பற்றாக்குறை மனப்பான்மையால் பாவச்செயல்கள் புரிந்தான். வர்த்தகத்தில் மேலும் பொருள் ஈட்டுவதற்காக நிறைய கிராமங்களுக்குப் பயணம் செய்தார். அப்படி பயணம் புரிகையில், துவாதசி நாளன்று அதாவது ஜேஷ்ட மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசிக்கு மறுநாள் மதிய வேளையில், அங்குமிங்கும் அலைந்ததால் தாகம் ஏற்பட்டு, நீர்ச்சுனையைத் தேடி, கடைசியில் கிராமத்தின் எல்லையில் ஒரு அழகிய குளத்தைக் கண்டார். ஓடிச் சென்று நீர் அருந்தும் வேளையில், ஒரு பசுவானது புதிதாக ஈன்ற கன்றுக்குட்டியுடன் அங்கு வந்தது. அவ்விரண்டு ஜீவன்களும் மதிய வெப்பத்தின் தாக்கத்தால் தாகம் மேலிட நீர் அருந்தவதற்காக அங்கு வந்தன. இவ்விரண்டு ஜீவன்களும் நீர் அருந்த முற்பட்டபோது, உங்கள் அரசன் மிகவும் கோபத்துடனும் முரட்டுத்தனத்துடனும் அவைகளை விரட்டிவிட்டு, சுயநலத்துடன் தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். தாகத்தில் தவித்த பசுவையும் கன்றுக்குட்டியையும் துரத்திய செயல், மன்னனை இப்பிறவியில் ஆண் வாரிசு இன்றி தவிக்கும்படி நேர்ந்தது. அரசன் முற்பிறவியில் செய்த நல்ல செயல்களின் பலனாக இப்பிறவியில் தொல்லையில்லாத அமைதியான ராஜ்ஜியத்தை ஆளும் தகுதியைப் பெற்றான் என்றுரைத்தார்.
இதைக் கேட்ட அரசனின் அமைச்சர்கள், தங்கள் மன்னன் முற்பிறவியில் செய்த பாவத்திலிருந்து விடுபட வழியைக் கேட்டனர்.
அதைக் கேட்ட லோமசர், “ஶ்ரவண மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ என்றழைக்கப்படுகிறது. இவ்விரதத்தை நாட்டின் மன்னன் உட்பட மக்கள் அனைவரும் விதிமுறைப்படி கடைப்பிடியுங்கள். நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், இரவில் கண்விழித்து பகவான் கிருஷ்ணரின் புகழைப் பாடுதல், ஶ்ரீமத் பாகவத பாராயணம், புராணம் படித்தல் என்று விரதத்தைச் சரியாக அனுஷ்டியுங்கள். மறுநாள் நீங்கள் பெற்ற விரத பலன்களை அரசருக்கு அளித்திடுங்கள். கட்டாயம் அவருக்கு ஆண்மகன் பிறப்பான்” என்று உபாயம் கூறினார் லோமச மஹரிஷி.
மகரிஷி கூறிய வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர்கள், மஹரிஷி லோமசரிடம் தத்தமது வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு மன்னனின் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினர்.
மஹிஷ்மதிபுரி பட்டணத்திற்குச் சென்ற பின், மன்னனிடம் சென்று லோமச மஹரிஷி கூறியதைத் தெரிவித்தார்கள். அதன்பின் அனைவரும் பக்திச் சிரத்தையுடன் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தனர்.
இவ்விரதத்தின் பலன்களை அரசருக்கு அளித்தார்கள். இவ்விரதத்தின் மகிமையால் அரசி அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள்.
இந்த ஏகாதசி “புத்ரதா ஏகாதசி” என்றும், புத்ர சந்தான பிராப்தியை வழங்கும் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பருப்பு மற்றும் தானிய வகைகளைத் தவிர்த்து உபவாசம் மேற்கொள்ள வேண்டும்.
“கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமைகளை இந்த ஏகாதசி தினத்தன்று கேட்பவர்களும் படிப்பவர்களும் நிச்சயம் தங்களது பாவங்கள் நீங்கப்பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, இப்பிறவியின் முடிவில் சொர்க்கத்தை அடையும் பாக்கியமும் பெறுவர்” என்று கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்குச் சொல்லி முடித்தார்.
பிரஹ்ம வைவர்த்த புராணம், ஶ்ரவண மாதம் சுக்ல பட்ச ஏகாதசியான “பவித்ரோபன புத்ரதா ஏகாதசி” மஹிமை படலம் நிறைவுற்றது.
இன்றைய தினத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சன்னதிக்குச் சென்று, பூரண சரணாகதியுடன் அவரை ஆராதித்து, மனமுருகி பிரார்த்தனை செய்து அவரைச் சரணடைவோமாக!!!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆