ஒருமுறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார், “ஓ ஜனார்த்தனா! வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? அந்த ஏகாதசியைக் கடைபிடிப்பது எப்படி? மேலும், இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப் பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள்.”
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், “ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஷ்ட முனிவர் பகவான் ராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.
நீண்ட காலத்திற்கு முன், ஒரு சமயம் பகவான் ராமச்சந்திரர் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார், ‘ஓ மரியாதைக்குரிய முனிவரே! நான் ஜனகராஜரின் மகளான சீதையைப் பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவுசெய்து ஒருவரின் எல்லாப் பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.’
ராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஷ்டர் கூறினார், ‘எனதன்பு ராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கிறது. உன்னுடைய கேள்வி மனித சமுதாயத்திற்கே பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதாலேயே ஒருவர் தூய்மையடைந்து எல்லா மங்களங்களையும் அடையத் தகுதி பெறுகிறார். இருந்தும் சாதாரண மக்களின் நலனுக்காக நான் ஒரு சிறந்த விரதத்தைப் பற்றி உனக்குக் கூறுகிறேன்.
வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி “மோஹினி ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் மங்களகரமானது. இந்த ஏகாதசியைக் கடைபிடித்தால் ஒருவருடைய பாவ விளைவுகள் நீங்கி, அவர் ஜட துன்பங்கள் மற்றும் மாயையின் பிடியில் இருந்து விடுபடுகிறார். இப்பொழுது நான் விளக்கும் இந்த ஏகாதசியின் உன்னதமான மகிமையைப் பற்றி கவனமாகக் கேள்.
புண்ணிய தீர்த்தமான சரஸ்வதி நதிக்கரையில், அழகிய நகரமான பத்ராவதி, த்யுதிமனா என்ற அரசனால் ஆளப்பட்டு வந்தது. ஓ பகவான் ராமா! இந்த அரசன் சந்திர வம்சத்தில் பிறந்தவன்; அவன் பணிவும் நேர்மையும் உடையவன். அங்கு பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தரான தனபாலா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தொழில் தர்மத்தால் ஒரு வைசியர். சாதாரண மக்களின் நலனுக்காக இந்த பக்தர் தர்மசாலைகள், பள்ளிகள், விஷ்ணு கோயில்கள், இலவச மருத்துவமனைகள், அகலமான சாலைகள் மற்றும் சந்தைகளைக் கட்டினார்.
அவர் மக்களுக்காக நீரும் உணவும் அளிக்க ஏற்பாடுகள் செய்தார். குளிர்ந்த குடிநீருக்காகக் கிணறுகளையும், தூய நீருக்காகக் குளங்களையும் தோண்டினார். பூக்களுக்கும் பழங்களுக்கும் தோட்டம் அமைத்தார். இதுபோன்று அவர் தன் செல்வத்தை மக்களின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்தித் தன் பெயரின் உண்மையான அர்த்தத்தை நிலைநாட்டினார்.
எப்பொழுதும் அமைதியாய் மற்றவர்களுக்கு உதவி செய்து, பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபட்ட இவருக்குச் சமனா, த்யுதிமனா, மேதாவி, சுக்ரிதி மற்றும் த்ருஷ்டபுத்தி என ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவருடைய மகன் த்ருஷ்டபுத்தி மிகவும் பாவப்பட்டவன். அவன் தீயவர்களுடன் பழகி மிகவும் தாழ்ந்த நிலையை அடைந்தான்.
அவன் தீண்டத்தகாத பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருந்தான். சூதாடுவதிலும், மது அருந்துவதிலும் இன்பம் கண்டான். மேலும் மற்ற உயிர்களைக் கொல்வதிலும், துன்புறுத்துவதிலும் மகிழ்ச்சி அடைந்தான். இதுபோன்று அவன் மிகக் கொடிய பாவச் செயல்களில் ஈடுபட்டான். விரைவில் அவன் ஒரு உன்னத தந்தையின் குரூரமான மகனாக மாறி, குடும்பத்திற்கே அவப்பெயராக விளங்கினான். அவன் ஒருபோதும் தேவர்களுக்கோ, விருந்தினர்களுக்கோ, முன்னோர்களுக்கோ அல்லது பிராமணர்களுக்கோ மரியாதை செலுத்தியதில்லை. அவன் எப்போதும் பாவ காரியங்களைச் செய்துகொண்டு மிகத் தாழ்ந்த வாழ்வை வாழ்ந்து வந்தான்.
இந்தத் த்ருஷ்டபுத்தி தன் தந்தையின் செல்வத்தைத் தேவையற்ற வழிகளில் செலவழித்தான். எப்போதும் தீய உணவை உட்கொண்டு மது அருந்துவதிலேயே காலத்தைக் கழித்தான். ஒருநாள், தன் மகன் ஒரு பொது இடத்தில் வெட்கமில்லாமல் ஒரு விலைமாதின் தோளில் கைபோட்டுச் செல்வதைக் கண்ட தனபாலன் மிகவும் வருந்தினார். அன்றைய தினமே அவனை வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகு த்ருஷ்டபுத்தி தன் தந்தை, தாய், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பாசத்தை இழந்தான். அவன் தன் சமூகத்திலும் மக்களிடையேயும் தாழ்த்தப்பட்டு, அனைவரும் வெறுக்கத்தக்கவன் ஆனான்.”
தன் தந்தையின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, த்ருஷ்டபுத்தி தன் சொந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் விற்றுத் தன் பாவ காரியங்களைத் தொடர்ந்தான். விரைவில் அவையும் முடிவுக்கு வந்தன. சரியான உணவு உண்ணாததால் அவன் உடல் மெலிந்து சோர்ந்து காணப்பட்டான். அவன் ஏழையானதை அறிந்த அவனது நெருங்கிய நண்பர்கள், அவனை விட்டு விலகிப் பலவாறு பழித்தனர்.
இப்போது த்ருஷ்டபுத்தி மிகவும் வெறுப்படைந்தான். அவனிடம் உணவோ பணமோ இல்லை. பசியால் மிகவும் சோர்ந்து போன அவன், “நான் இப்போது என்ன செய்வது? எங்கு செல்வது? எதைக் கொண்டு பிழைக்க முடியும்?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.
வேறு வழியின்றித் திருடுவதே பிழைப்பு என எண்ணிய அவன், ஊர் முழுவதும் திரிந்தான். சில சமயங்களில் அரசரின் காவலாளிகள் அவனைக் கைது செய்தாலும், அவனது தந்தையின் செல்வாக்கைக் கருதி அவனை விடுவித்தனர். இவ்வாறாகப் பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலையான அவன், ஒருமுறை மிகப்பெரிய திருட்டிற்காகக் கைது செய்யப்பட்டான். அவன் அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளானான். அரசர் கூறினார், “ஓ பாவப்பட்ட மூடனே! இனி நீ உன் பாவ காரியங்களால் இந்த இராஜ்ஜியத்தில் இருக்க முடியாது. உன்னை இப்போது விடுவிக்கிறேன், ஆனால் நீ இந்த நாட்டை விட்டு எங்காவது சென்றுவிடு” என்றார்.
தண்டனைக்குப் பயந்து த்ருஷ்டபுத்தி இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி ஓர் அடர்ந்த காட்டிற்குள் சென்றான். அங்கும் பசியாலும் தாகத்தாலும் வாடிய அவன், மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்டான். இவ்வாறாகப் பல ஆண்டுகள் கையில் வில்லும் அம்பும் ஏந்திய வேடனைப் போல் பாவ காரியங்களில் ஈடுபட்டு வந்தான்.
ஒருநாள், அவனது முந்தைய புண்ணியச் செயல்களின் பயனாக, அவன் கௌந்தின்ய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான். அது வைகாசி (ஏப்ரல் / மே) மாதமாகும். கௌந்தின்ய முனிவர் கங்கையில் நீராடிவிட்டு ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மனவருத்தத்துடனும் பாவ மூட்டையுடனும் இருந்த த்ருஷ்டபுத்தியின் மேல், முனிவரின் ஆடையில் இருந்து சிந்திய ஒரு துளி நீர் பட்டது. உடனே த்ருஷ்டபுத்தி தன் பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டுத் தெளிவடைந்தான். அவன் மரியாதையுடன் முனிவரிடம், “ஓ சிறந்த பிராமணரே! நான் மிகவும் பாவப்பட்ட மனிதன். நான் செய்யாத பாவமே கிடையாது. என்னைப் போன்றவர்களும் எளிமையாகக் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த விரதத்தைப் பற்றிக் கூறுங்கள். என் பாவங்களால் நான் வீடு, செல்வம், உறவினர்கள் அனைவரையும் இழந்து அறியாமை என்னும் கடலில் மூழ்கியுள்ளேன்” என்றான்.
த்ருஷ்டபுத்தியின் நிலையைக் கண்டு இரக்கமுற்ற கௌந்தின்ய முனிவர் கூறினார், “மிகக் குறைந்த காலத்தில் உனது பாவங்களை அழிக்கக்கூடிய ஒரு முறையைக் கூறுகிறேன். வைகாசி மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய மோஹினி ஏகாதசி, மலை போன்ற பாவங்களையும் அழிக்க வல்லது. நீ நம்பிக்கையுடன் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்றார்.
முனிவர் கூறியபடி த்ருஷ்டபுத்தி அந்த ஏகாதசியைக் கடைப்பிடித்தான். ஓ அரசர்களில் சிறந்தோனே! இந்த மோஹினி ஏகாதசியை அனுஷ்டித்ததால், த்ருஷ்டபுத்தி எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, ஒரு திவ்ய உடலைப் பெற்று கருட வாகனத்தில் ஏறி விஷ்ணுவின் பரமபதத்திற்குச் சென்றான்.
ஓ ராமச்சந்திரா! இந்த விரதம் ஒருவரை எல்லாவிதமான மாயையிலிருந்தும் அறியாமை என்னும் இருளிலிருந்தும் விடுவிக்கின்றது. புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாலும், தானம் அளிப்பதாலும், யாகங்கள் செய்வதாலும் கிடைக்கும் புண்ணியம், இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனிற்கு ஈடாகாது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆