பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும்பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப்பட வேண்டும்.
பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது; மாறாக, சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்களைக் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால், அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவிட வேண்டும். “இளமையில் பௌதிக சுகபோகங்களை அனுபவிப்போம், முதுமையில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம்” என்று ஒருவன் தவறாக நினைக்கக் கூடும். இத்தகைய பௌதிகமான சிந்தனையால் பயனில்லை. ஏனெனில், வயதான பருவத்தில் ஒருவனை ஆன்மீக வழிமுறையில் பயிற்றுவிக்க முடியாது.
ஆகவே, வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஒருவன் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும் (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:). இதுவே ஜீவராசிகளின் கடமையாகும். பௌதிகக் கல்வியானது இயற்கையின் முக்குணங்களால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மனித சமுதாயத்தில் மிகவும் தேவையாக உள்ள ஆன்மீகக் கல்வி உன்னதமானதாகும். நாரத முனிவரிடமிருந்து தான் உபதேசம் பெற்ற இரகசியத்தைப் பிரகலாத மகாராஜன் வெளிப்படுத்தினார். சீடப் பரம்பரையில் இடம் பெற்றுள்ள பிரகலாத மகாராஜனின் தாமரைப் பாதங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, ஆன்மீக வாழ்வின் சரியான மார்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய செயல்முறையை ஏற்றுக்கொள்வதற்கு பௌதிகத் தகுதிமுறைகள் தேவையில்லை.
பிரகலாத மகாராஜன் கூறியதைக் கேட்ட அவரது நெருங்கிய நண்பர்கள், அவர் எவ்வாறு இந்த அளவிற்குத் கற்றறிந்தவராகவும், உயர்ந்தவராகவும் ஆனார் என்று வினவினர். இவ்விதமாக இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.


கர்ப்பத்தில் பிரகலாதர் கற்றது
இரண்யகசிபு தன் ராஜ்யத்தை விட்டுவிட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றபொழுது, எல்லா அசுரர்களும் இங்குமங்குமாக ஓடி ஒளிந்தனர். அப்பொழுது இரண்யகசிபுவின் மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமொரு அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று தவறாக எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தை பிறந்த உடனேயே அதைக் கொன்றுவிட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம்.
அவர்கள் கயாதுவைச் சுவர்க்க லோகங்களுக்கு அழைத்துச் செல்லும்பொழுது, வழியில் அவர்களைச் சந்தித்த நாரத முனிவர், அவர்களைத் தடுத்து நிறுத்தி, இரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைத் தமது ஆசிரமத்தில் வைத்திருக்கத் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆசிரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டினாள். நாரதரும் குழந்தையைக் காப்பதாக உறுதியளித்துவிட்டு, அவளுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். பிரகலாத மகாராஜன் சிறு குழந்தையாகக் கர்ப்பத்தினுள் இருந்த போதிலும், நாரதரின் அவ்வுபதேசங்களைக் கேட்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஆன்மீகமான ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டதாகும். ஜீவராசியின் ஆன்மீக ரூபத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தேகாபிமானத்திற்கு மேற்பட்ட ஒருவன் பரிசுத்தனும், ஆன்மீக அறிவைப் பெறும் தகுதியுடையவனுமாவான். ஆன்மீக அறிவு எனப்படும் இது பக்தித் தொண்டாகும். இவ்வாறாகக் கர்ப்பத்தில் இருந்த பிரகலாத மகாராஜன், நாரத முனிவரிடமிருந்து பக்தித் தொண்டைப் பற்றிய உபதேசத்தைப் பெற்றார்.
உண்மையான ஓர் ஆன்மீக குருவிடம் உபதேசங்களைப் பெற்றுப் பகவானின் சேவையில் ஈடுபடும் ஒருவன், மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு, அறியாமையும், பௌதிக ஆசைகளும் அகலப் பெற்றவனாய் உடனேயே முக்தியை அடைகிறான். பரமபுருஷரிடம் தஞ்சமடைந்து எல்லா பௌதிக ஆசைகளிலிருந்து விடுபடுவதே ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். எத்தகைய பௌதிக நிலையில் இருப்பவனாலும் இந்த பூரணத்துவத்தை அடைய முடியும். பக்தித் தொண்டானது, பௌதிக செயல்களான தவம், விரதம், அஷ்டாங்க யோகம், மதச் சார்பு ஆகியவற்றைச் சார்ந்ததல்ல. இவற்றில் எதுவுமே இல்லையென்றாலும், ஒரு தூய பக்தரின் கருணையினால் ஒருவன் பக்தித் தொண்டைப் பெற முடியும்.

