(கடவுளைப் பற்றி நவீன மனிதன் கொண்டிருக்கும் கருத்துகள் பலவாகவும் வேறுபட்டவையாகவும் உள்ளன. குழந்தைகளின் கற்பனையில் கடவுள் முதியவராகத் தோன்றுகிறார். வயது வந்தவர்களில் பலர் கடவுளைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, ஒரு மனக்கருத்து, மனிதகுலம் முழுமையையும் உள்ளடக்கிய ஒன்று, பிரபஞ்சம், அல்லது தானேயாகக் கருதுகிறார்கள். இந்த சொற்பொழிவில், ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் கிருஷ்ண உணர்வுக் கருத்தை விரிவாக விளக்குகிறார். கடவுளின் தரிசனம் அன்னியோன்யமான, வியக்கத்தக்க முறையில் அதில் நமக்குக் கிடைக்கிறது.)
ஸ்ரீமதியரே, ஸ்ரீமான்களே,
நீங்கள் அன்புடன் இந்தக் கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் பங்கு பெறுவதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நியூயார்க்கில் இந்தச் சங்கம் 1966ல் பதிவு செய்யப்பட்ட போது, கடவுள் உணர்வு சங்கமென்று இதற்குப் பெயர் சூட்டலாமென்று ஒரு நண்பர் யோசனை கூறினார். கிருஷ்ணா என்ற பெயர் ஒரு குறிப்பிடத்தக்க மதப்பிரிவைச் சார்ந்ததென்று அவர் எண்ணினார். சொல்லகராதியிலும் கிருஷ்ணர் என்பது ஒரு இந்துக் கடவுளின் பெயர் என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கடவுளை ஏதாவது ஒரு பெயரால் குறிப்பிடலாமானால், அது ‘கிருஷ்ணா’ என்ற பெயரே.
உண்மையில் கடவுளுக்குக் குறிப்பான பெயரெதுவும் இல்லை. அவருக்குப் பெயரில்லை என்று சொல்லும் போது அவருக்கு எத்தனை பெயர்கள் உள்ளனவென்பதை யாரும் அறியார் என்பதைக் குறிப்பிடுகிறோம். கடவுள் எல்லையற்றவராகையால் அவருடைய நாமங்களும் எல்லையற்றவையாகவே இருக்க வேண்டும். எனவே, ஒரு பெயர் போதுமென்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, சில சமயங்களில் கிருஷ்ணர் யசோத-நந்தன (அன்னை யசோதாவின் மைந்தன்), அல்லது தேவகி-நந்தன (தேவகியின் மைந்தன்) அல்லது வசுதேவ-நந்தன (வசுதேவரின் மகன்), அல்லது நந்த-நந்தன (நந்தனின் மகன்) என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். சில வேளைகளில் பார்த்தசாரதி-பார்த்தன் என்றழைக்கப்படும் அர்ஜுனனுக்குத் தேரோட்டியவர் என்று குறிப்பிடப்படுகிறார்.
கடவுள் தனது பல பக்தர்களோடு பல காரியங்களில் ஈடுபடுவதால், அதையொட்டி அவருக்குச் சில நாமங்கள் அமைகின்றன. அவருக்கு எண்ணற்ற பக்தர்களும், அவர்களோடான எண்ணற்ற உறவுகளும் இருப்பதால் அவருக்கு எண்ணற்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. எனவே, குறிப்பிட்ட ஒரு பெயரை மட்டும் எடுத்துக் கொள்வதற்கில்லை. ஆனால், கிருஷ்ணர் என்ற பெயருக்கு ‘எல்லா வசீகரங்களும் நிறைந்தவர்’ என்று பொருள். கடவுள் எல்லோரையும் வசீகரிக்கிறார். கடவுளுக்கு அதுவே இலக்கணம். கிருஷ்ணரின் பல படங்களை நாம் பாத்த்திருக்கிறோம். பசுக்கள், கன்றுகள், பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகள் மற்றும் பிருந்தாவனத்தின் தண்ணீரும் கூட அவரால் வசீகரிக்கப்படுவதைக் காண்கிறோம். பசு மேய்க்கும் சிறுவர்களும், கோபியருக்கும், நந்த மகாராஜாவுக்கும், பாண்டவர்களுக்கும் மனித சமுதாயம் முழுமைக்கும், அவர் வசீகரம் மிக்கவராகத் தோன்றுகிறார். எனவே, கடவுளுக்குக் குறிப்பான பெயர் ஒன்று சூட்டவேண்டுமானால் அது கிருஷ்ணர் என்றே இருக்கும்.
மகா முனிவரும் வேதங்களைத் தொகுத்த வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவர் கடவுளை இவ்வாறு விவரிக்கிறார்.
இவையெல்லாம் வசீகரமான தன்மைகள், இகவுலகில் செல்வம் மிக்கவனுக்கு வசீகரமிருப்பதை நாம் அறிகிறோம். உதாரணமாக அமெரிக்காவில் ராக்ஃபெல்லரும் ஃபோர்டும் பெரும் செல்வந்தர்களாகவிருப்பதால் பலர் அவர்களால் கவரப்படுகிறார்கள். அவர்களிடம் உலகின் எல்லாச் செல்வங்களும் இல்லாவிட்டாலும் கூட மக்களின் கவனத்தைக் கவரக்கூடியவர்களாயிருக்கிறார்கள். அப்படியானால் எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான கடவுள் எவ்வளவு கவர்ச்சியுடையவராக இருப்பார்!
அது போலவே, கிருஷ்ணர் அளவற்ற பலம் படைத்தவர். அவர் பிறந்த கணத்திலிருந்தே பலமுள்ளவராக விளங்கினார். அவர் பிறந்த மூன்று மாதங்களுக்குள், பூதனா எனும் அரக்கி அவரைக் கொல்ல முயன்றாள். அனால் அவரால் கொல்லப்பட்டாள். அது கடவுள். கடவுள் எப்போதுமே கடவுளாயிருக்கிறார். தியான பலத்தாலோ, வேறு வகையான சித்திகளின் உதவியாலோ அவர் கடவுளாகவில்லை. கிருஷ்ணர் அந்த வகையைச் சார்ந்த கடவுளல்ல. தொடத்திலிருந்தே கிருஷ்ணர் கடவுளாக விளங்கினார்.
கிருஷ்ணரின் புகழும் எல்லையற்றது. நாம் கிருஷ்ணரின் பக்தர்களாகையால் அவரை அறிகிறோம், போற்றுகிறோம் ஆனால் நம்மைத் தவிர கோடிக்கணக்கானவர்கள் பகவத் கீதையின் மகிமையை அறிவார்கள். உலகம் முழுவதிலும் எல்லாநாடுகளிலும் தத்துவஞானிகளும், மனோவிஞ்ஞானிகளும், மர வல்லுநர்களும் பகவத் கீதையைப் படிக்கிறார்கள். நாங்கள் பதிப்பித்துள்ள பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலும் நன்கு விற்பனையாகின்றது. பொருள் சுத்தத் தங்கமாக இருப்பது இதற்குக் காரணம். பகவத் கீதையின் பல பதிப்புக்கள் உள்ளன. ஆனால் அவை சுத்தமானவையல்ல; பகவத் கீதையை அதன் உண்மையுருவில் வழங்குவதால் எங்கள் பதிப்பு அதிகமாக விற்பனையாகிறது. பகவத் கீதையின் புகழ் கிருஷ்ணரின் புகழேயாகும்.
மற்றொரு செல்வமான அழகு கிருஷ்ணரிடம் அபரிமிதமாக உள்ளது. கிருஷ்ணர் மிகவும் அழகானவர் – அவரைச் சார்ந்தவர்களும் அப்படியே. முந்தைய வாழ்வில் நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருந்தவர்கள் இந்த பௌதிக உலகில் நல்ல குடும்பங்களிலும் நல்ல நாடுகளிலும் பிறக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அமெரிக்க மக்கள் செல்வந்தர்கள், அழகானவர்கள், இந்தச் சிறப்புக்கள் நற்செயல்களின் விளைவால் ஏற்பட்டவை. அமெரிக்க மக்கள் விஞ்ஞான அறிவிலும், செல்வங்களிலும், அழகிலும் மேலும் பல அம்சங்களிலும் சிறந்து விளங்குவதால் உலக மக்கள் அனைவரும் அவர்களால் கவரப்படுகிறார்கள். பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது இந்த பூமி ஒரு பொருட்டல்ல. ஆனால், அதற்குள் அமைந்திருக்கும் ஒரு நாடான அமெரிக்கா இத்தனை வசீகரமான அங்கங்களைக் கொண்டிருக்கிறதென்றால், பிரபஞ்சத் தோற்றம் முழுவதையும் படைத்துள்ள கடவுள் எத்தனை வசீகரங்களைக் கொண்டிருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம். அழகைப் படைத்துள்ள அவரே எவ்வளவு அழகாயிருப்பார்!
எனவே, கடவுள் தனது செயல்களுக்கேற்பப் பல நாமங்களைக் கொண்டுள்ளார். அவருக்கு அளவிலா செல்வங்களிருப்பதாலும் அதன் காரணமாக அவர் எல்லோரையும் வசிகரிப்பதாலும் அவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறார். கடவுளுக்குப் பல நாமங்கள் உண்டென்றாலும் அவரது பிரதானமான பெயர் ‘கிருஷ்ணா’ என்று வேத இலக்கியம் வலியுறுத்துகிறது.
ஸ்ரீல பிரபுபாதர் / தன்னையறியும் விஞ்ஞானம் 1.2
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே