பானிஹாட்டி சிடா-தஹி திருவிழா
( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் கொண்டு ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ரகுநாதரின் மீது திருப்தியுற்று நித்யானந்தர் கருணையைப் பொழிய, அக்கருணையினால் குறுகிய காலத்திலேயே ரகுநாதரால் ஸ்ரீ சைதன்யருடன் இணைய முடிந்தது.
ரகுநாதர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையினால் ஸ்ரீ சைதன்யரை அடைந்தார் என்பதை நினைவுகொள் வதற்காகவும் நாமும் அக்கருணையின் சிறு துளியைப் பருகுவதற்காகவும் ஆண்டுதோறும் அந்த பானிஹாட்டி சிடா–தஹி திருவிழா (அவல், தயிர் திருவிழா) விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜுன் மாதம் 23 தேதியன்று உலகமேங்கும் கொண்டாடபடுகிறது.
(நித்யானந்த பிரபுவின் கட்டளையைப் பெற்றவுடன்) ரகுநாத தாஸர் உடனடியாகத் தனது ஆட்களை எல்லாவிதமான உணவு பதார்த்தங்களையும் வாங்கி வரும்படி கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். (52)
அவல், தயிர், பால், இனிப்புகள், சர்க்கரை, வாழைப் பழம் மற்றும் இதர உணவுப் பொருள்களை வாங்கி வந்த ரகுநாத தாஸர் அவற்றினை எல்லாவிடங்களிலும் பரப்பி வைத்தார். (53)
திருவிழா நடைபெறவிருப்பதைக் கேள்விப்பட்டு, எல்லா வகையான பிராமணர்களும் இதர கனவான்களும் அங்கு வரத் தொடங்கினர். எண்ணிலடங்காத மக்கள் அங்கே கூடினர். (54)
கூட்டம் அதிகரிப்பதைக் கண்டு ரகுநாத தாஸர் இதர கிராமங்களிலிருந்து மேலும் உணவுப் பொருள்களை எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்தார். அவர் இருநூறு, நானூறு பெரிய மண்பானைகளையும் கொண்டு வந்தார். (55)
ஓரிடத்தில், அவலானது பெரிய பானைகள் ஒவ்வொன்றிலும் சூடான பாலில் ஊற வைக்கப்பட்டது. அதன் பின்னர் பாதி அவலானது தயிர், சர்க்கரை, மற்றும் வாழைப் பழங்களுடன் சேர்க்கப்பட்டது. (57)
மீதி பாதியானது கெட்டியான பாலுடன் கலக்கப்பட்டு சாங்பா–கலா என்னும் ஒரு வகையான வாழைப் பழத்துடன் கலக்கப்பட்டது. அதனுடன் சர்க்கரையும் நெய்யும் கற்பூரமும் சேர்க்கப்பட்டது. (58)
நித்யானந்த பிரபு தனது துணியினை மாற்றி புத்தாடையினை உடுத்திக் கொண்ட பின்னர், உயர்ந்த திட்டில் அமர்ந்தார், அவருக்கு முன்பாக ஏழு பெரிய பாத்திரங்களை பிராமணர் கொண்டு வந்தார். (59)
அந்த திட்டில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் முக்கியமான ஸங்கத்தினர்கள் அனைவரும் இருந்தனர், இதர முக்கியமான நபர்களும் அங்கு பிரபுவை சுற்றி வட்டமாக அமர்ந்தனர். (60)
திருவிழாவினைப் பற்றிக் கேள்விப்பட்டு, எல்லா வகையான பண்டிதர்களும் பிராமணர்களும் பூஜாரிகளும் அங்கு சென்றனர். பகவான் நித்யானந்த பிரபு அவர்களுக்கு மரியாதையளித்து அவர்களைத் தன்னுடன் உயர்ந்த திட்டில் அமரச் செய்தார். (64)
ஒவ்வொருவருக்கும் இரண்டு மண்பானைகள் வழங்கப்பட்டன. ஒன்றில் கெட்டியான பாலுடன் இருந்த அவலும், மற்றொன்றில் தயிருடன் இருந்த அவலும் வழங்கப்பட்டது. (65)
மற்ற மக்கள் அனைவரும் குழுக்களாக தரையில் அமர்ந்திருந்தனர். எவ்வளவு மக்கள் அங்கிருந்தனர் என்பதை யாராலும் எண்ண முடியவில்லை. (66)
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மண்பானைகள் வழங்கப்பட்டனஶீஒன்றில் தயிரில் ஊற வைக்கப்பட்ட அவலும், மற்றொன்றில் கெட்டியான பாலில் ஊற வைக்கப்பட்ட அவலும் இருந்தது. (67)
திட்டில் இடம் கிடைக்காத சில பிராமணர்கள் தங்களுடைய இரண்டு மண்பானைகளுடன் கங்கைக் கரைக்குச் சென்று தங்களுடைய அவலை அங்கே ஊற வைத்தனர். (68)
கங்கைக் கரையில்கூட இடம் கிடைக்காத மற்றவர்கள் நீரினுள் இறங்கி தங்களுடைய இருவகையான அவலை உண்ணத் தொடங்கினர். (69)
இவ்வாறாக, சிலர் திட்டில் அமர்ந்திருந்தனர், சிலர் திட்டுக்கு கீழே தளத்தில் அமர்ந்திருந்தனர், வேறுசிலர் கங்கைக் கரையில் இருந்தனர்; இருபது ஆட்களின் மூலமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பானைகள் வழங்கப்பட்டன. (70)
ஒவ்வொருவருக்கும் அவல் பரிமாறப்பட்டபோது, பகவான் நித்யானந்த பிரபு தனது தியானத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அங்கு வரவழைத்தார். (77)

