ஒருமுறை, சிவபெருமானும் பார்வதி தேவியும் தங்களின் ரிஷப வாகனத்தில் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தவம் பொருந்திய திருமழிசை ஆழ்வாரைப் பார்வதி தேவி காண நேரிட்டது. பக்தி நெறியில் திளைத்திருந்த அவர், ஓர் ஆஸ்ரமத்தின் அருகே மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்ட தேவி, “பிரபு! நாம் இவருக்குக் காட்சியளித்து, நமது திருவருளைப் புரிவோம்” என்று சிவபெருமானிடம் கூறினாள்.
அதற்குச் சிவபெருமான், “தேவி! இவர் அகில உலக நாயகனான பகவான் ஶ்ரீமன் நாராயணனிடம் அனன்னிய பக்தி (கலப்பற்ற தூய பக்தி) பூண்டவர். பரமபுருஷ பகவானின் திவ்ய லீலைகளையும், பாகவத அனுபவங்களையும் சுவைப்பதிலேயே இவர் எப்போதும் லயித்திருக்கிறார். அவரைத் தவிர வேறு எதையும் அவர் விரும்ப மாட்டார்; நம்மை அவர் கவனிக்கவும் மாட்டார்” என்று கூறினார். ஆயினும், “அவரைக் கண்டு செல்வதே தங்களின் பெருந்தன்மைக்கு உகந்தது” என்று தேவி வற்புறுத்தவே, இருவரும் திருமழிசையாழ்வாரின் முன்னே எழுந்தருளினர்.
திருமழிசையாழ்வாரோ தன் பகவத் சிந்தனையாகிய ஆன்மீகக் கைங்கரியத்திலேயே கண்ணாயிருந்தார். அதனை உணர்ந்த சிவபெருமான், கண்டும் காணாதவர் போல் அமர்ந்திருந்த ஆழ்வாரின் அருகில் சென்று, “உமக்கு நற்கதி அருளவே யாம் இங்கு வந்தோம். எம்மை இவ்வாறு அலட்சியம் செய்யலாமா?” என்று வினவினார்.
அதற்கு ஆழ்வார், “உங்களால் எனக்கு ஆக வேண்டிய ஆன்மீகப் பயன் என்ன? அதனால்தான் நான் மௌனமாக இருக்கிறேன்” என்றார். உடனே சிவபெருமான், “உமக்கு வேண்டிய வரத்தைக் கேளும், தருகிறோம்!” என்றார்.
“எனக்கு உங்களிடமிருந்து வேண்டுவதற்கு ஒன்றும் இல்லை” என்று திருமழிசையாழ்வார் மறுத்துரைத்தார்.
“இருப்பினும், நம்முடைய வருகை வீணாகக் கூடாது அல்லவா? ஏதாவது ஒரு வரத்தைக் கேளும்!” என்று சிவபெருமான் புன்னகையோடு மீண்டும் கூறினார்.
திருமழிசையாழ்வாரும் புன்னகைத்தவாறே, “உம்மால் எனக்குப் பரமபதமாகிய வைகுந்த லோகத்தை அருள முடிந்தால், அதையே வரமாகத் தாருங்கள்” என்று கேட்டார்.
அதற்குச் சிவபெருமான், “பரமபதத்தை அருளக்கூடிய பரம அதிகாரம் கொண்டவர் பரந்தாமனான வைகுந்த நாதன் ஒருவரே! ஜீவன்களுக்கு முக்தி அளிக்கும் ஆற்றல் பகவான் ஶ்ரீமன் நாராயணனுக்கே உரியது. ஆகையால், என்னால் தரக் கூடிய வேறு ஏதாவது உலகியல் வரத்தைக் கேளும்” என்றார்.
“அப்படியென்றால், பரமபதம் அடைவதற்குக் காரணமான பகவத் பக்தியை வளர்த்துக் கொள்ள எனக்கு அதிக ஆயுள் தேவை. எனவே, இன்று மரணமடைய வேண்டியவர்களை நாளை மரணமடையும்படி மாற்ற உம்மால் முடியுமா?” என்று கேட்டார் திருமழிசையாழ்வார்.
”அது ஜீவன்களின் பூர்வ கர்ம வினைப்படி நடப்பதாகும், அதில் என்னால் தலையிட முடியாது” என்றார் சிவபெருமான். இதைக் கேட்டதும் புன்னகைத்த வண்ணம், அதுவரை கந்தல் துணியைத் தைத்துக் கொண்டிருந்த திருமழிசையாழ்வார், தன் கையில் இருந்த ஊசியைக் காட்டி, “இந்த ஊசியின் பின்னே நூல் நுழைகிறபடியாவது உம்மால் செய்ய முடியுமா? (இதற்காவது உமக்குச் சுதந்திரம் உள்ளதா?)” என்று வினவினார்.
இந்த எள்ளல் வார்த்தையைக் கேட்டதும் சிவபெருமான் சினமுற்றார். முக்கண்ணனாகிய அவர், தம் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அடுத்த கணம், அதிலிருந்து பிரளய காலப் பெருநெருப்பு எழுந்து மூவுலகையும் சூழ்ந்தது. ஆனால், அந்தத் தீயினால் பரம ஏகாந்த பக்தரான திருமழிசையாழ்வாரைச் சிறிதும் பாதிக்க முடியவில்லை; ஏனெனில், பகவானின் தூய பக்தர்கள் எப்போதும் பகவானின் அந்தரங்க சக்தியினால் பாதுகாப்படைபவர்கள்.
பதிலுக்குத் திருமழிசையாழ்வார், தன் ஆன்மீக யோக வலிமையால், தன் வலது திருவடியின் கட்டைவிரலில் இருந்த கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஊழித்தீயைக் காட்டிலும் கொடிய நெருப்புப் பொங்கி எழுந்தது. அது மூவுலகையும் தாக்கித் தகித்ததுடன், கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானையும் சூழ்ந்துகொண்டது. இதனால் அஞ்சிய இந்திரன் முதலான தேவர்கள், உடனடியாக வைகுந்த லோகத்திற்கு விரைந்து, பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமபுருஷ பகவான் ஶ்ரீமன் நாராயணனைச் சரணடைந்து, ‘பிரபு! இந்நெருப்பிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தனர்.
பகவான் ஶ்ரீமன் நாராயணன் தேவர்களை நோக்கி, “தேவர்களே! கவலையை விடுங்கள்; நாம் புஷ்கலாவர்த்தம் என்னும் மேகங்களை ஏவி, அப்பெரு நெருப்பை அடக்குகிறோம்” என்று அபயமளித்தார். அவ்வாறே பகவானின் ஆணையால் வந்த மேகங்கள் பெருமழையைப் பெய்வித்து, அந்தத் தீயை அணைத்தன. பெருமழையினால் பிரளய வெள்ளம் போல் பூமியெங்கும் நீர் நிறைந்தது. ஆயினும், எதற்கும் அஞ்சாதவராகத் திருமழிசையாழ்வார், பரமபுருஷ பகவானைத் தன் இதயத்தில் தியானித்தவாறு, அந்தப் பெருவெள்ளத்தின் நடுவிலும் அசைவற்று வீற்றிருந்தார்.
பகவானைச் சரணடைந்த தூய பக்தரின் இத்தகைய அசைக்க முடியாத ஆன்மீக வலிமையைக் கண்டு வியந்து மகிழ்ந்த சிவபெருமான், அவருடைய உன்னத பக்தித் திறத்தைப் போற்றிப் புகழ்ந்து, அவருக்கு “பக்திசாரர்” (பக்தியின் சாரமாக விளங்குபவர்) என்னும் பட்டத்தை அளித்து கௌரவித்தார். பின்னர், பார்வதி தேவியோடு தன் இருப்பிடமான கயிலாயத்திற்குத் திரும்பினார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆