மருத மரங்களின் சாப விமோசனம்
(ஆதாரம்: ஶ்ரீமத் பாகவதம் – பத்தாம் காண்டம், அத்தியாயம் 10)
நளகூவரனும் மணிக்ரீவனும் சிவபெருமானின் சிறந்த பக்தர்களாவர். ஆனால், பௌதிக ஐஶ்வரியத்தின் காரணத்தால் அவர்கள் அறிவற்றவர்களாகவும், கட்டுப்பாட்டில் அடங்காதவர்களாகவும் நடந்துகொண்டனர். இவ்வாறாக, ஒருநாள் நிர்வாணமான பெண்களுடன் ஓர் ஏரியில் சுகபோகத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள், வெட்கமின்றி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று நாரத முனிவர் அவ்வழியாக வந்தார். ஆனால், செல்வச் செருக்கினாலும் பொய்க் கௌரவத்தினாலும் நிதானத்தை அறவே இழந்த அவர்கள், நாரதர் அங்கு வந்திருப்பதைக் கண்ட பின்னரும், நிர்வாணமாக இருந்ததற்காக வெட்கப்படவும் இல்லை. அதாவது, செல்வச் சிறப்பினாலும் பொய்க் கௌரவத்தினாலும் அவர்கள் சாதாரண ஒழுக்க முறையைக்கூட இழந்தனர்.
ஒருவன் செல்வத்திலும் கௌரவமான ஓர் அந்தஸ்திலும் உயரும்பொழுது, அவன் நாரதரைப் போன்ற ஒரு முனிவர் உட்பட, யாரைப் பற்றியும் கவலைப்படாமல், பொதுவான மரியாதையைக் கைவிடுகிறான். பௌதிக குணங்களின் இயற்கையே இதற்குக் காரணம். குறிப்பாக, பக்தர்களை ஏளனம் செய்யும் இத்தகைய புத்தி பேதலித்துப்போன மனிதர்களுக்கு (அஹங்கார-விமூடாத்மா), மீண்டும் ஏழ்மையில் உழல்வதே தகுந்த தண்டனையாகும். யம, நியம முதலியவற்றைப் பயில்வதன் மூலம் (தபஸா ப்ரஹ்மசர்யேண சமேன ச தமேன ச), பொய்க் கௌரவத்தை அடக்குவது எப்படி என்பதை வேத விதிமுறைகள் நிர்ணயித்துள்ளன. இவ்வுலகில் செல்வச் சிறப்பெனும் கௌரவம் நிலையற்றது என்று ஒரு ஏழையை எளிதில் நம்பச் செய்துவிடலாம். ஆனால், ஒரு செல்வந்தனை அவ்வாறு செய்ய முடியாது. எனவே, நளகூவரனையும் மணிக்ரீவனையும் மந்தமான, உணர்வற்ற மரங்களாகும்படி சபித்ததன் மூலம், நாரத முனிவர் ஓர் உதாரணத்தை ஸ்தாபித்துள்ளார். இது தகுந்த தண்டனையாகும். ஆனால், கிருஷ்ணர் எப்பொழுதும் கருணையுடையவராக இருப்பதால், அவர்கள் தண்டிக்கப்பட்ட போதிலும், பரமபுருஷரை நேருக்கு நேராகக் காணும் பாக்கியத்தைப் பெற்றனர். எனவே, வைஷ்ணவர்களால் அளிக்கப்படும் தண்டனை உண்மையில் தண்டனையே அல்ல; மாறாக, அது வேறொரு வகையான கருணையாகும்.
தேவரிஷியின் சாபத்தினால் இரட்டை மருத மரங்களாகப் பிறந்த நளகூவரனும் மணிக்ரீவனும், நந்த மகாராஜனின் வீட்டு முற்றத்தில் நின்றபடி, கிருஷ்ணரை நேரடியாகக் காணும் வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். தமது பக்தரின் விருப்பத்தின்படி, பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் இந்த இரட்டை மருத மரங்களை வேருடன் பிடுங்கியெறிந்தார். இவ்வாறு நூறு தேவ ஆண்டுகளுக்குப் பின், கிருஷ்ணரால் நளகூவரனுக்கும் மணிக்ரீவனுக்கும் முக்தி அளிக்கப்பட்டபொழுது, பழைய உணர்வைத் திரும்பப் பெற்ற அவர்கள், தேவர்கள் செய்யத்தகுந்த பொருத்தமான பிரார்த்தனைகளை கிருஷ்ணரிடம் செய்தனர். இவ்வாறு கிருஷ்ணரை நேருக்கு நேராகக் காணும் வாய்ப்பைப் பெற்ற அவர்கள், நாரதர் எவ்வளவு கருணை மிக்கவர் என்பதைப் புரிந்துகொண்டனர். எனவே, அவரிடம் தாங்கள் பட்ட நன்றிக்கடனை வெளிப்படுத்தி, அவருக்கு நன்றி கூறினர். பிறகு, பரமபுருஷரான ஶ்ரீ கிருஷ்ணரை வலம் வந்தபின், அவரவர் வசிப்பிடங்களுக்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆