தாய் யசோதை ஶ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டுதல்
(ஆதாரம்: ஶ்ரீமத் பாகவதம் – பத்தாம் காண்டம், அத்தியாயம் 9)
ஒருநாள், வேலைக்காரிகள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், தாய் யசோதை தானே தயிரைக் கடைவதில் ஈடுபட்டிருந்தாள். இதற்கிடையில், கிருஷ்ணர் வந்து தமக்குப் பால் வேண்டுமென்று கேட்க, தாய் யசோதையும் உடனே அவருக்குத் தன் முலைப்பாலை ஊட்டினாள். இவ்வாறு கிருஷ்ணருக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கி வழிவதைக் கண்ட யசோதை, குழந்தைக்குப் பாலூட்டுவதை உடனே நிறுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள். தாய்ப்பால் குடிப்பதில் இடையூறு ஏற்பட்டதால், கடுங்கோபமடைந்த கிருஷ்ணர், ஒரு கல்லை எடுத்து தயிர்ச் சட்டியை உடைத்துவிட்டு, ஓர் அறைக்குள் புகுந்தார். அங்கிருந்த புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெயை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். அடுப்படியிலிருந்து திரும்பிய தாய் யசோதை, தயிர்ச் சட்டி உடைந்து கிடப்பதைக் கண்டு, இது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்றெண்ணி, அவரைத் தேடிச் சென்றாள். அறைக்குள் புகுந்த அவள், கிருஷ்ணர் பெரிய உரலொன்றைக் குப்புறக் கவிழ்த்து, அதன்மேல் நின்றுகொண்டு, உறியில் தொங்கிய வெண்ணெயைத் திருடிக் குரங்குகளுக்குக் கொடுப்பதைக் கண்டாள்.
தம் தாய் வந்துவிட்டதைக் கண்ட கிருஷ்ணர் உடனே ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார். தாய் யசோதையும் அவரைப் பின்தொடர்ந்தாள். இவ்வாறு சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்றபின், அவளது பிடியில் கிருஷ்ணர் சிக்கிக்கொண்டார். தாம் செய்த குற்றத்தை எண்ணி கிருஷ்ணர் அழத் தொடங்கினார். மீண்டும் இப்படிச் செய்தால் தண்டிக்கப் போவதாகப் பயமுறுத்திய தாய் யசோதை, அவரைக் கயிற்றால் கட்டிப்போட முடிவு செய்தாள். துரதிர்ஷ்டவசமாக, கயிற்றில் முடிச்சுப் போடும் சமயம் வந்ததும், கயிற்றின் நீளம் இரு விரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதைக் கண்டாள். அதனுடன் மற்றொரு கயிற்றைச் சேர்த்துக் கட்டினாள். ஆனால், மீண்டும் அக்கயிற்றின் நீளம் இரு விரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதைக் கண்டாள். இவ்வாறு மீண்டும் மீண்டும் முயற்சித்த அவள், ஒவ்வொரு முறையும் கயிறு இரண்டு விரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதை உணர்ந்தாள். இவ்வாறு தம் பாசமுள்ள தாய் மிகவும் களைத்துப் போய்விட்டதைக் கண்ட கிருஷ்ணர், அவளால் கட்டப்பட உடன்பட்டார். இப்போது, அவளிடம் கொண்ட இரக்கத்தினால், தம் எல்லையற்ற சக்தியை அவளிடம் அவர் காட்டவில்லை.
தாய் யசோதையும் கிருஷ்ணரை உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டு, மற்ற வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அதன்பிறகு, முற்றத்தில் இரு மருத மரங்கள் நிற்பதை கிருஷ்ணர் கண்டார். அம்மரங்கள் உண்மையில் குபேரனின் இரு மகன்களான நளகூவரனும் மணிக்ரீவனும் ஆவர். இவர்கள் நாரத முனிவரால் மரங்களாகும்படி சபிக்கப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் தமது கருணையால், நாரத முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, அந்த மரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆