ஶ்ரீ கிருஷ்ணரின் முதன்மை சக்தியாகவும், அவரது சிறந்த பக்தையாகவும் இருப்பவர் ஶ்ரீமதி ராதாரணி. இவர் நாம் கிருஷ்ணரின் திருவடிகளை அடைவதற்கு உதவி செய்கிறார்.
ராதா, ராதிகா என்றும் அழைக்கப்படும் ஶ்ரீமதி ராதாரணி, கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்தபோது, ராதாரணியும் விருஷபானு மஹாராஜர் – கீர்த்திதா தம்பதியரின் மகளாகத் தோன்றினார்.
ஶ்ரீமதி ராதாரணியின் பிறப்பு
விருஷபானு, மதுராவிற்கு அருகில் உள்ள ராவல் என்ற ஊரின் மன்னராக இருந்தார். அவர் இடைகுலத்தின் தலைவராக திகழ்ந்தார். ஆயிரக்கணக்கான பசுக்களும் தானியங்களும் அவர்களிடம் இருந்ததால், அவர் மிகுந்த செல்வத்துடன் வாழ்ந்தார். கோகுலத்தின் மன்னரான நந்த மஹாராஜர் இவருக்கு நல்ல நண்பர்.
ஒருநாள், விருஷபானு மஹாராஜர் நண்பகலில் யமுனை நதியில் குளிக்கச் சென்றார். அங்கே ஆயிரம் சூரியன்களைப் போல பிரகாசித்த ஒரு தங்க தாமரை மலரைக் கண்டார். மன்னர் நீரில் இறங்கி அந்த தாமரையைப் பிடித்தார். அதன் மீது ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மன்னர் சிந்தனை செய்தபோது, பிரம்மதேவர் அங்கே தோன்றி கூறினார்: “அன்புள்ள விருஷபானுவே, இந்த திவ்யமான குழந்தையைப் பார்க்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவர் இந்த உலகத்திற்கே மூலமுதல் தாய். முந்தைய பிறவியில் நீங்களும் உங்கள் மனைவியும் செய்த கடுமையான தவத்திற்கு பலனாக, கிருஷ்ணரே இந்த லக்ஷ்மி தேவியை உங்களுக்கு மகளாகக் கொடுத்துள்ளார்.”
பிறகு, பிரம்மதேவர் குழந்தையை விருஷபானுவிடம் கொடுத்து, கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்.
மன்னர் மகிழ்ச்சியோடு குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு வந்தார். அரசியும் குழந்தையைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். இந்த செய்தி விரைவில் எல்லா ஊர்களுக்கும் பரவியது.
நாரத முனியின் வருகை
சில நாட்களுக்குப் பிறகு, பெற்றோர் குழந்தையை தொட்டிலில் இட்டனர். ஆனால், குழந்தை கண்ணைத் திறக்கவில்லை, அழவும் இல்லை. நாட்கள் கடந்தன. குழந்தை பார்வையற்றதாகவும் காது கேளாததாகவும் இருக்குமோ என்று மன்னரும் அரசியும் கவலைப்பட்டனர்.
அவர்கள் வருந்தியபோது, நாரத முனிவர் அங்கே வந்து ஆறுதல் கூறினார். குழந்தைப் பிறந்ததை பெரிய விழாவாகக் கொண்டாடும்படியும், எல்லோரையும் அழைக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
ஶ்ரீ கிருஷ்ணரும் ராதாரணியும் முதல்முறை சந்தித்தல்
நாரத முனியின் ஆலோசனையின்படி, விருஷபானு மஹாராஜர் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து, தனது ஆருயிர் நண்பரான நந்த மஹாராஜர் உட்பட அனைவரையும் அழைத்தார்.
நந்த மஹாராஜர் தனது மனைவி யசோதா, ரோஹிணி மற்றும் மகன்கள் கிருஷ்ணர், பலராமருடன் விருஷபானுவின் அரண்மனைக்கு வந்தடைந்தார். அப்போது குழந்தை கிருஷ்ணருக்கு ஒரு வயது.
விருஷபானு, நந்த மஹாராஜர் மற்றும் அவர்களின் தேவியர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில், சிறுவன் கிருஷ்ணர் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருந்தார். அவர் மெல்லத் தவழ்ந்து சென்று, இறுதியாக ராதாரணியின் தொட்டிலை அடைந்தார்.
அவர் தொட்டிலைப் பிடித்துக்கொண்டு எழும்பி நின்று, உள்ளே எட்டிப்பார்த்தார். குழந்தை ராதா, கிருஷ்ணரின் திவ்யமான நறுமணத்தை நுகர்ந்த கணத்திலேயே தனது கண்களைத் திறந்தார். இவ்வாறாக, ராதாரணி முதன்முதலில் தன் கண்களைத் திறந்தபோது, தன் இதயத்திற்குரிய கிருஷ்ணரையே தரிசித்தார். அதே கணத்தில், அவர் மழலைச் குரலில் அழவும் தொடங்கினார். இதைக் கண்ட அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
ராதாரணி பர்சானாவிற்குச் செல்லுதல்
ராதாரணி பிறந்த பிறகு தனது முதல் ஐந்து ஆண்டுகளை ராவலில் கழித்தார். பின்னர், அவர்கள் பர்சானா என்ற எழில்மிக்க மலைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
அதே காலகட்டத்தில், கம்சனால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் நந்த மஹாராஜரும் கோகுலத்திலிருந்து நந்தகிராமத்திற்கு மாற நேரிட்டது. கம்சனின் ஏவலாளர்களான பல அசுரர்கள், கிருஷ்ணரைக் கொல்வதற்காக வெவ்வேறு வடிவங்களில் கோகுலத்திற்கு வந்தனர்; ஆனால் கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் சம்ஹாரம் செய்தார். அதன்பின், நந்த மஹாராஜர் தனது மூத்த சகோதரர் உபநந்தர் மற்றும் கோகுலத்துப் பெரியவர்களுடன் கலந்தாலோசித்து, கோகுலம் இனியும் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் அல்ல என்று முடிவெடுத்து, நந்தகிராமத்திற்குச் சென்றார்.
‘ராதா’ என்ற பெயர் எவ்வாறு வந்தது?
ஶ்ரீமத் பாகவதத்தில், ஶ்ரீல சுகதேவ கோஸ்வாமி ஶ்ரீமதி ராதாரணியைக் கிருஷ்ணரின் மிகச்சிறந்த வழிபாட்டாளர் (அனயாராதிதே) என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ‘ராதா’ என்ற திருநாமம் ‘ஆராதிதே’ என்ற சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ‘வழிபடுதல்’ என்று பொருள்.
மற்றொரு காரணம், பத்ரபத மாதத்தின் வளர்பிறை அஷ்டமி திதியில் ராதாரணி அவதரித்தார். அவரது அவதார நட்சத்திரம் அனுராதா என்பதால், அதிலிருந்தும் ‘ராதா’ என்ற பெயர் அமைந்தது.
ஶ்ரீ கிருஷ்ணர் தனது ஆனந்தத்தை எவ்வாறு அனுபவிக்கிறார்?
மகிழ்ச்சியைத் தேடுவது அனைத்து உயிரினங்களின் இயல்பான குணமும் ஆகும். நாம் அனைவரும் பிறவிதோறும் பல்வேறு வடிவங்களில் ஆனந்தத்தைத் தேடி அலைகிறோம். ஆனால், இன்பம் பெற நாம் வெளிப்பொருட்களையும் பிற காரணிகளையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனினும், முழுமுதற்கடவுளான ஶ்ரீ கிருஷ்ணர் தன்னிறைவு பெற்றவர்.
அவர் தனது ஆனந்தத்திற்காக எந்தவொரு வெளிப்பொருளையும் சார்ந்திருப்பதில்லை; ஜடவுலக இன்பங்களால் ஈர்க்கப்படுவதும் இல்லை. அவர் அனைத்து சக்திகளுக்கும் அதிபதி. அவர் ஆனந்தமடைய விரும்பும்போது, அவருக்கு திவ்யமான ஆனந்தத்தை அளிக்க அவரது சொந்த ‘ஹ்லாதினி சக்தி’ (ஆன்மீக ஆனந்த சக்தி) ஶ்ரீமதி ராதாரணியின் வடிவில் தோன்றுகிறது.
சக்தியும் சக்திமானும்
ஶ்ரீ கிருஷ்ணர் சக்திமான் ஆவார்; அவர் தனக்குத் தொண்டு செய்யும் அனைத்து சக்திகளையும் தன்னுள் கொண்டவர்.
ராதாரணி அவரது உச்சகட்ட சக்தி ஆவார். அவர் ‘ஸர்வ-லக்ஷ்மி’ என்று அழைக்கப்படுகிறார்; அதாவது அனைத்து லக்ஷ்மிதேவிகளுக்கும் மூல முதற்காரணமானவர். அவர் அனைவராலும் வழிபடப்பட வேண்டிய பரமேஸ்வரி. ஆன்மீக உலகத்தில், ஶ்ரீ கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான லக்ஷ்மிதேவிகள் தொண்டு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஶ்ரீமதி ராதாரணியின் விரிவங்கங்களே ஆவர்.
அந்த லக்ஷ்மிதேவியரிடமிருந்தே துர்க்கா தேவி தோன்றுகிறார். இவர் இந்த உலகத்தில் உள்ள ஜீவன்களைப் பராமரித்து, அவர்களைத் திருத்தி, கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ‘ஸர்வ-லக்ஷ்மி’ என்பது, கிருஷ்ணரின் ஆறு ஐஸ்வர்யங்களான பலம், புகழ், செல்வம், ஞானம், அழகு, துறவு ஆகியவற்றை ராதாரணி முழுமையாகப் பிரதிபலிக்கிறார் என்பதையும் குறிக்கிறது. எனவே, அவரே ஶ்ரீ கிருஷ்ணரின் இணையற்ற உச்சகட்ட சக்தி ஆவார்.
ராதா-கிருஷ்ணரின் திவ்யமான உறவு
ராதா-கிருஷ்ணரின் உறவு என்பது இந்த உலகத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சாதாரணமான லௌகீக அன்பு என்று சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஆன்மீக நிலையில் அமைந்த தூய்மையான, திவ்யமான அன்பின் வடிவமாகும். இந்த ஜடவுலகில் நாம் காணும் அன்பு என்பது, ஆன்மீக உலகின் தூய்மையான அன்பின் தலைகீழ் பிரதிபலிப்பே ஆகும். உண்மையான, கலங்கமற்ற அன்பு என்பது ராதா-கிருஷ்ணரின் திவ்ய உறவிலேயே நிலைபெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆத்மாவும் ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐந்து வகையான முதன்மை உறவுகளைக் கொண்டிருக்க முடியும்:
சாந்தம்
தாஸ்யம்
ஸாக்யம்
வாத்ஸல்யம்
மாதுர்யம்
ஜடவுலகில் நாம் அனுபவிக்கும் இந்த உறவுகள் அனைத்தும், பகவானுடன் நமக்கு இருக்கும் ஆன்மீக உறவின் நிழல் பிரதிபலிப்புகளே ஆகும்.
இவ்வைந்து உறவுகளிலும், மாதுர்ய பாவம் (காதல் அன்பு) மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. ஶ்ரீமதி ராதாரணி இந்த ஒப்பற்ற உயர்ந்த உறவின் மூலமாகவே கிருஷ்ணருக்குச் சேவை செய்கிறார்.
ராதாரணி – ஶ்ரீ கிருஷ்ணரின் உயர்ந்த பக்தை
ஶ்ரீ கிருஷ்ணர் ‘அனைவரையும் கவர்பவர்’ (ஸர்வ ஆகர்ஷகன்) ஆவார். தனது அழகிய திருமேனி, திவ்ய குணங்கள் மற்றும் லீலைகளின் மூலம் அவர் அனைத்து ஜீவன்களையும் ஈர்க்கிறார். இருப்பினும், ஶ்ரீமதி ராதாரணியின் தூய்மையான அன்பும் உயர்ந்த பக்தியும் எவ்வளவு மேன்மையானவை என்றால், அவை கிருஷ்ணரையே கட்டிப்போட்டு ஈர்க்கின்றன!
ஶ்ரீமதி ராதாரணி அனைத்து கோபிகளுக்கும் தலைவி ஆவார். கிருஷ்ணர் மீது அவர் கொண்டுள்ள பக்திக்கு இணையே இல்லை. அவர் எப்போதும் கிருஷ்ணரையே தியானித்து, அவரிலேயே மூழ்கியிருக்கிறார்.
ராதாரணியின் வழியில் கிருஷ்ணரை அடைதல்
ஶ்ரீமதி ராதாரணியால் மட்டுமே நமக்கு கிருஷ்ணர் மீதான தூய்மையான பக்தியை வழங்க முடியும். அவரது கருணையின்றி கிருஷ்ணருடனான நமது ஆன்மீக உறவைப் புதுப்பிக்க முடியாது; அவரது பரிந்துரை இல்லாமல் கிருஷ்ணரின் கோலோக பிருந்தாவனத்தை நாம் அடையவும் முடியாது.
எனவேதான், ராதா-கிருஷ்ணரின் திவ்ய லீலைகள் நடந்த புனித பிருந்தாவனத்தில், பக்தர்கள் அனைவரும் ராதாரணியை மிகுந்த பக்தியோடு வழிபட்டுப் போற்றுகிறார்கள். அவர்கள் “ஜய ராதே!” என்றும், “ராதே, ராதே!” என்றும் அவரது திருநாமங்களை அலை அலையாக ஜபிக்கிறார்கள்.
ஶ்ரீமதி ராதாரணி அனைத்து ஜீவன்களிடமும் எல்லையற்ற கருணை கொண்டவர். கிருஷ்ணரை நேரடியாக அணுகுவதை விட, தாயான ராதாரணியின் புகலிடத்தைப் பெறுவதன் மூலம் கிருஷ்ணரை மிக எளிதாக அடையலாம். ராதாரணியை மகிழ்வித்துவிட்டால், கிருஷ்ணரின் நித்ய சேவையை நாம் சுலபமாகப் பெற்றுவிட முடியும்.
ஶ்ரீமதி ராதாரணியை எவ்வாறு மகிழ்விப்பது?
ஶ்ரீமதி ராதாரணியை மகிழ்வித்து, அவர் மூலமாக கிருஷ்ணரை அடையும் மிகச் சிறந்த வழி “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரத்தை இடைவிடாது ஜபிப்பதே ஆகும். இம்மந்திரத்தில் ஹரே, கிருஷ்ண, ராம என்ற திருநாமங்கள் மிகச் சரியான ஆன்மீக வரிசையில் அமைந்துள்ளன:
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
‘ஹரே’ என்பது ‘ஹரா’ என்ற சொல்லின் விளிச்சொல்லாகும். இது ராதாரணியின் மற்றொரு ஆன்மீகப் பெயரைக் குறிக்கும். ‘ஹரே’ என்று ஜபிப்பதன் மூலம், “தாயே! எங்களை உங்களது கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்தியருளுங்கள்” என்று நாம் ராதாரணியிடம் பிரார்த்திக்கிறோம்.
‘ஹரே’ என்ற திருநாமம் கிருஷ்ண மற்றும் ராம திருநாமங்களுக்கு முன்பாகவே வருகிறது. இவ்வாறாக, நாம் முதலில் அன்னையான ராதாரணியையும், பிறகு பகவானையும் அழைத்து, ராதாரணியின் பரிந்துரை மூலமாகப் பகவானை அடைகிறோம்.
ஶ்ரீமதி ராதாரணி அவதரித்த நன்னாளான ஶ்ரீ ராதாஷ்டமி திருநாளில், நாம் அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை மனமொன்றி ஜபிப்போம்! ஶ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் நமக்குத் தூய்மையான, மாறாத பக்தியை அருள்மாறு ஶ்ரீமதி ராதாரணியின் பொற்பாதங்களில் சரணடைந்து பிரார்த்திப்போம்!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆