ஶ்ரீல பிரபுபாதரின் வியாஸ பூஜை
வியாஸ பூஜை என்பது தகுதிவாய்ந்த ஆன்மீகக் குருவின் அவதார திருநாளைக் கொண்டாடும் ஒரு புனிதமான நிகழ்வாகும். வேத இலக்கியங்களை முதன்முதலில் எழுத்து வடிவில் தொகுத்தவர், பகவானின் இலக்கிய அவதாரமான ஶ்ரீல வியாஸதேவர் ஆவார். குறிப்பாக, இந்த கலியுகத்தில் வாழும் மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக அவர் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றைத் தொகுத்தளித்தார்.
ஆன்மீகக் குருவானவர் ஶ்ரீல வியாஸதேவரின் உண்மைப் பிரதிநிதியாவார். எனவே, சீடர்கள் அவருடைய அவதார திருநாளை ‘வியாஸ பூஜை’ அல்லது ‘வியாஸ ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) நிறுவன-ஆச்சார்யரான ஶ்ரீல பிரபுபாதர் நந்தோற்சவ நாளன்று அவதரித்தார். அவருடைய சீடர்கள் ஆண்டுதோறும் இந்நாளில் வியாஸ பூஜை விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
நாம் ஏன் வியாஸ பூஜை கொண்டாடுகிறோம்: பொருளும் முக்கியத்துவமும்
வேதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அனைத்துப் பக்தர்களுக்கும் வியாஸ பூஜை கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில், இது ஆன்மீகக் குருவின் அவதார திருநாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வழிபாடாகும். அறியாமை எனும் இருளில் அடைபட்ட கண்களை ஞானம் என்னும் ஜோதியால் திறந்து, சீடனுக்கு அவனது உண்மையான ஆன்மீக நிலையைப் பற்றி அறியச் செய்பவரே ஆன்மீகக் குரு என்று சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.
அவர் ஶ்ரீல வியாஸதேவரின் தகுதிவாய்ந்த பிரதிநிதியாகவும், திவ்யமான ஞானத்தைப் பரப்பும் ஒளிபுகும் தூய ஊடகமாகவும் விளங்குகிறார். ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பும் எவருக்கும் அவருடைய திவ்ய அருள் மிகவும் அவசியமானதாகும். அவருடைய அவதார திருநாளில் வியாஸ பூஜை செய்வதன் மூலம், அவருடைய கருணைமிக்க ஆசிகளையும், ஆத்ம ஞானத்தின் உயர்நிலையையும் பெற முடியும்.
ஶ்ரீல பிரபுபாதரின் தனித்துவமான நிலையும் பங்களிப்புகளும்
ஶ்ரீல பிரபுபாதர், பிரம்மாவிடம் இருந்து தொடங்கும் ஆன்மீக ஞானத்தின் சீடப் பரம்பரையான பிரம்ம-மாத்வ-கௌடீய சம்பிரதாய வரிசையின் 32-வது ஆச்சார்யர் ஆவார். ஶ்ரீல பிரபுபாதர் 1896-ஆம் ஆண்டில் ஶ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாளான நந்தோற்சவ நாளில் அவதரித்தார். தனது கல்வி மற்றும் ஆன்மீக தீட்சைக்குப் பிறகு, அவர் படிப்படியாகச் சந்நியாசம் ஏற்று, ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதத்திற்கு உரை எழுதினார்.
தமது குருவான ஶ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாக்குர் மஹாராஜின் கட்டளைப்படி, அவர் 1965-இல் அமெரிக்காவிற்குச் சென்று இஸ்கான் இயக்கத்தையும், உலகம் முழுவதிலும் 108-க்கும் மேற்பட்ட ஶ்ரீ கிருஷ்ணரின் கோயில்களையும் நிறுவினார். இருப்பினும், அவருடைய மிகப்பெரிய பங்களிப்பு அவருடைய நூல்களாகும்; அவற்றின் அதிகாரப்பூர்வமான தன்மை, ஆழ்ந்த ஞானம் மற்றும் தெளிவுக்காக அறிஞர்களால் அவை பெரிதும் மதிக்கப்படுகின்றன. சீடர்கள் அவருடைய அவதார திருநாளை வியாஸ பூஜையாக மிகுந்த மரியாதையுடனும் அளவற்ற மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறார்கள்.
ஶ்ரீல பிரபுபாதரின் அவதார லீலை
ஶ்ரீல பிரபுபாதர் 1896-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி இந்தியாவின் கொல்கத்தாவில், துணி வியாபாரியான கௌர் மோகன் டே என்பவருக்கும் ரஜனி என்பவருக்கும் மகனாக அவதரித்தார். வங்காளப் பாரம்பரிய வழக்கப்படி, பெற்றோர் அக்குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பதற்காக ஒரு ஜோதிடரை வரவழைத்தனர். அந்த ஜோதிடர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு தனித்துவமான குறிப்பைக் கூறினார்: “இக்குழந்தை எழுபது வயதில் கடலைக் கடந்து சென்று தர்மத்தைப் பெருமளவில் பிரசாரம் செய்யும்; உலகெங்கிலும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு 108 கோயில்களைத் திறக்கும்” என்று கூறினார். பின்னர், மற்றொரு ரேகை ஜோதிடரும், ஶ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதும் வாழ்வதற்கான ஒரு வீட்டைக் கட்டுவார் என்று குறிப்பிட்டார்.
ஶ்ரீல பிரபுபாதருக்குக் குழந்தைப் பருவத்தில் ‘அபய்’ என்று பெயரிடப்பட்டது. அவர் நந்தோற்சவ நாளில் பிறந்ததால், அன்புடன் ‘நந்து’ என்றும் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தை ஒரு தூய பக்தர்; அவர் எப்போதும் சாதுக்களைத் தனது வீட்டிற்கு அழைத்து, அக்குழந்தை ஶ்ரீமதி ராதாராணியின் பக்தனாக மாற வேண்டும் என்று ஆசீர்வதிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பார். அவர் உள்ளூர் ஶ்ரீ ராதா-கோவிந்தர் விக்கிரகத்தின் முன் நீண்ட நேரம் பிரார்த்தனைகளைச் செலுத்துவார்; மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து ஆண்டுதோறும் ரத யாத்திரையை ஏற்பாடு செய்வார். அது தற்போது உலகம் தழுவிய விழாவாக விரிவடைந்துள்ளது.
ஶ்ரீல பிரபுபாதர் 1922-ஆம் ஆண்டில் தனது ஆன்மீகக் குருவான ஶ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாக்குர் மகாராஜரைச் சந்தித்து, 1932-ஆம் ஆண்டில் அவருடைய முறைப்படி தீட்சை பெற்ற சீடரானார். அவர் 1966-இல் இஸ்கான் இயக்கத்தைப் பதிவு செய்து, ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீ சைதன்ய சரிதாமிர்தம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். ஶ்ரீல பிரபுபாதர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி ஆவார்; அவர் கிருஷ்ண உணர்வு குறித்து 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து இஸ்கான் கோயில்களும் ஶ்ரீல பிரபுபாதரின் அவதார திருநாளை மிக நேர்த்தியான மற்றும் வண்ணமயமான விழாக்களுடன் கொண்டாடுகின்றன. இந்நாள், நந்த மகாராஜரால் கொண்டாடப்பட்ட பகவான் கிருஷ்ணரின் அவதார திருவிழாவான நந்தோற்சவத்துடனும் இணைந்தே அனுசரிக்கப்படுகிறது.
வியாஸ பூஜை விழாவில், ஹரே கிருஷ்ண கீர்த்தனம் மற்றும் பக்தர்களின் நடனத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, மேலும், ஶ்ரீல பிரபுபாதருக்குப் பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், பழச்சாறுகள் மற்றும் நறுமணமிக்க வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சில இஸ்கான் கோயில்களில் ஶ்ரீல பிரபுபாதரின் பல்லாக்கு ஊர்வலம் நடைபெறுகிறது; அவருக்கு நைவேத்திய சமர்ப்பணமும் குரு ஆரத்தியும் செய்யப்படுகின்றன. மேலும், சீடர்கள் அவருடைய மகிழ்ச்சிக்காகத் தங்களது வியாஸ பூஜை நிவேதனங்களைப் படிக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஶ்ரீல பிரபுபாதரின் ஆசிகளாக சுவையான பிரசாதம் விநியோகிக்கப்படுவதோடு இவ்விழா நிறைவடைகிறது.
வியாஸ பூஜை சமர்ப்பணம்: ஒரு சீடனின் கடமையும் நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடும்
ஆன்மீகக் குருவை போற்றி புகழ்தல்
வியாஸ பூஜை சமர்ப்பணங்கள் என்பது, ஆன்மீகக் குருவின் திவ்ய அவதார திருநாளில் அவருடைய தாமரைத் திருவடிகளில் ஒரு சீடன் பணிவுடன் சமர்ப்பிக்கும் குருவின் கருணையைப் பற்றிய உணர்தலாகும். ஆன்மீக வாழ்வில் முதன்மையான தத்துவமே ஆன்மீகக் குருவை மகிழ்விப்பதாகும்.
ஒரு சீடன் தனது ஆன்மீகக் குருவின் திவ்யமான அருளுக்காக அவருக்கு நித்தியக் கடன்பட்டிருக்கிறான்; அதை அவன் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது. இருப்பினும், பக்தியையும் இதயப்பூர்வமான நன்றியையும் பணிவுடன் சமர்ப்பிப்பது ஆன்மீகக் குருவுக்கு எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகும்.
வியாஸ பூஜை சமர்ப்பணங்கள் மூலம் ஆன்மீகக் குருவை போற்றி புகழ்தல்
ஆன்மீகக் குருவின் கருணையையும் திவ்யமான அருளையும் மகிமைப்படுத்துவதற்காக இந்தச் சமர்ப்பணங்கள் எழுதப்படுகின்றன. ஆன்மீகக் குருவுக்கு நன்றியினைச் சமர்ப்பிப்பது ஒரு சீடனின் முக்கியமான கடமையாகும்; மேலும் இந்த வியாஸ பூஜையின் சுப முகூர்த்தத்தில், ஒருவர் ஶ்ரீல பிரபுபாதருக்குத் தனது வணக்கங்களை எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர் இயற்றிய நூல்கள் மூலமாகவும் சீடர்கள் மூலமாகவும் ஒருவரது கிருஷ்ண உணர்வு வாழ்வில் ஶ்ரீல பிரபுபாதர் அளித்த வழிகாட்டுதல்கள், மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் ஆகியவற்றின் மேற்கோள்களுடன் ஶ்ரீல பிரபுபாதரை போற்றி புகழ்தல் போன்றவை இந்தச் சமர்ப்பணத்தில் அடங்கும்.
ஶ்ரீல பிரபுபாதரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தல்
ஒரே சிந்தனையுள்ள பக்தர்களுடன் இணைந்து பயிற்சி செய்வதன் மூலம் அனைவரும் பக்தி வாழ்க்கையின் தத்துவங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், ஶ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வுப் பண்பாட்டை ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பாக மாற்றினார்.
அனைவரும் தினமும் 16 மாலைகள் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைச் ஜபம் செய்ய வேண்டும் என்பதே அவருடைய முதன்மையான விருப்பமாகும். தனது மாணவர்கள் ‘எளிமையான வாழ்வும் உயர்வான சிந்தனையும்’ கொண்ட தத்துவத்தைக் கடைப்பிடித்து, உலகெங்கிலும் கிருஷ்ண உணர்வு இயக்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் விரும்பினார். பரஸ்பர ஒத்துழைப்புடன் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவது அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றியைக் கொண்டுவரும் என்பதையும், இந்த பக்தர்களின் சமூகத்தில் அனைவரும் தூய்மையடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் அவர் தனது சீடர்களுக்கு எழுதிய பல்வேறு கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீல பிரபுபாதரை எவ்வாறு மகிழ்விப்பது:
வியாஸ பூஜை திருவிழா என்பது நமது எளிய சேவைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஶ்ரீல பிரபுபாதரை மகிழ்விப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபம் செய்தல், கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் கிருஷ்ண உணர்வை அனைவருக்கும் பிரசாரம் செய்ய முயற்சித்தல் ஆகிய அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் ஆன்மீகக் குருவை மகிழ்விக்க முடியும் என்பதை ஶ்ரீல பிரபுபாதர் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறார்.
இந்த வியாஸ பூஜையின் சுப முகூர்த்தத்தில், ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பரப்புவதற்கு தாராளமாகப் பங்களித்து, உங்கள் வாழ்வில் ஶ்ரீல பிரபுபாதரின் திவ்யமான அருளைப் பெறுங்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁