பொதுவாகவே தற்காலத்தில் மதத்தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் கடவுளைப் பற்றிய கருத்தற்றவர்களே. இருந்தும் அவர்கள் மதத்தைப் பற்றி உபதேசிக்கிறார்கள். அத்தகைய மதத்தினால் பயன்தான் என்ன? மக்கள் தவறாகவே வழிகாட்டப்படுகிறார்கள். கடவுளின் கட்டளையே உண்மையான மதமாகும்; தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம். கடவுளைப் பற்றிய எண்ணமே இல்லாதபோது மதமென்ற கேள்விக்கிடமேது? இப்பாசாங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்? நிச்சயமாக அழிந்தே தீரும். கடவுளைப் பற்றிய அறியாமையே தற்போதைய சீரழிவுக்குக் காரணம்.
சட்டமென்பது அரசாங்கத்தின் கட்டளையென்பது போல, மதம் கடவுளின் கட்டளையாகும். ஆனால் சமுதாயத்தில் அரசாங்கமே இல்லாதபொழுது அரசாங்கத்தின் சட்டத்திற்கு இடமேது? ஒவ்வொருவரும் சொந்தச் சட்டங்களையே உற்பத்தி செய்வார்கள். அதுவே இன்றைய மதங்களின் நிலையாகும். கடவுளே இல்லை என்பதால், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களுமில்லை.
ஆனால், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள் கடவுள் பற்றிய தெளிவான சிந்தனையுடையவர்கள். இதோ பரமபுருஷரான கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர். அவர் கட்டளையிடுகிறார். அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆகையால் இது தெளிவான மதமாகிறது. ஆனால், கடவுளின் சிந்தனையே இல்லையெனில், கடவுளின் கட்டளைகளுமில்லை. எனவே, மதம் என்ற பேச்சுக்குமிடமில்லை. பிறமதத்தவரிடம், கடவுளின் உருவத்தைப் பற்றி அவர்கள் எண்ணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். அவர்களால் தெளிவாகப் பதில் சொல்ல முடியாது. ஆனால் கிருஷ்ண பக்தர்களாகிய நாம் உடனடியாகக் கூற முடியும்:
வேணும் க்வணந்தம் அரவிந்த – தளாயதாக்ஷம்
பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத – ஸுந்தராங்கம்
கந்தர்ப – கோடி – கமநீய – விசேஷ – ஸோபம்
கோவிந்தம் ஆதி – புருஷம் தம் அஹம் பஜாமி
ஓ கோவிந்தா! ஆதி பகவானே, குழலிசைப்பதில் திறமை வாய்ந்தவரே, மயிலிறகால் கிரீடத்தை அணிந்திருப்பவரே! கோடி மன்மதர்களை வசீகரிக்கும் அழகுடையவரே! நான் உம்மை வணங்குகிறேன். (பிரம்ம-ஸம்ஹிதா 5.30)