புன்-நாம்னோ நரகாத் யஸ்மாத் பிதரம் த்ராயதே ஸுத:
தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயம் ஏவ ஸ்வயம்புவா
மொழிபெயர்ப்பு & பொருளுரை
“புத்” என்ற நரகத்தில் தந்தை தண்டனை பெறுவதிலிருந்து மகன் அவரை விடுவிக்கிறான்; இதன் காரணமாகவே அவன் “புத்திரன்” என்று அழைக்கப்படுகிறான். இந்த ஆன்மீக நியதியின்படி, தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படும் பொழுது, புத்திரனானவன் தன் தந்தையைத்தான் நரகத்திலிருந்து விடுதலை செய்கிறானேயொழிய தாயை அல்ல.
இவ்வாறாக வேத இலக்கியங்களின்படி, திருமண வாழ்வில் “விவாகரத்து” என்ற ஒன்றே கிடையாது. ஒரு மனைவி தன் கணவனிடம் எப்பொழுதும் விசுவாசமும், பதிபக்தியும் கொண்டிருக்குமாறு ஆன்மீக ரீதியாகப் பயிற்சி அளிக்கப்படுகிறாள். ஏனெனில், எந்தவொரு வெறுக்கத்தக்க பௌதிகச் சூழ்நிலையிலிருந்தும் அவள் ஆன்மீக விடுதலை அடைவதற்கு இந்த உன்னதக் குணமே அவளுக்குத் துணையாக இருக்கும்.
“புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத்” என்று இச்சுலோகம் தெளிவாகக் கூறுவது போல, “புத்திரன் யமராஜனின் காவலிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறான்”. அது ஒருபோதும், “புத்ரோ நயதி மாதரம்” அதாவது, “புத்திரன் தன் தாயைக் காப்பாற்றுகிறான்” என்று கூறவில்லை. ஏனெனில், விதையளிக்கும் தந்தைதான் மகனால் விடுவிக்கப்படுகிறார்; அந்த விதையைத் தாங்கும் கிடங்கின் அதிகாரியான தாய் அல்ல.
ஆகவே, கணவனும் மனைவியும் எந்தவொரு பௌதிகச் சூழ்நிலையிலும் பிரிந்துவிடக் கூடாது. தங்களுக்குப் பிறக்கும் புத்திரனை அவர்கள் ஒரு உன்னத வைஷ்ணவனாக (பக்தனாக) வளர்த்து வருவார்களானால், அத்தகைய தகுதியுடைய ஒரு மகனால், தன் பெற்றோர்கள் இருவரையுமே யமராஜனின் காவலிலிருந்தும், நரக வாழ்வின் கடுமையான தண்டனைகளிலிருந்தும் நிச்சயம் காப்பாற்ற முடியும்.
(ஶ்ரீமத்-பாகவதம் காண்டம் 9 / அத்தியாயம் 20 / பதம் 22 / பொருளுரை வழங்கியவர்: ஶ்ரீல பிரபுபாதர்)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆