ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடல் விவரிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார், “ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து ஏப்ரல்/மே மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளைப் பற்றியும் எனக்கு விளக்குங்கள்.”
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், “தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்குப் பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளைக் குறைத்துக்கொண்டு, நிரந்தரமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்குப் பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று, பிறப்பு இறப்பு என்ற சுழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தித் தொண்டை அடைகின்றனர்.
இந்த ஏகாதசி விரதத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து மாந்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியைக் கடைப்பிடித்து முக்தி பெற்றனர். பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார்.
சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தைத் தானமாகக் கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியைக் கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார். மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையைத் தானமளிப்பதை விட ஒரு யானையைத் தானமளிப்பது சிறந்தது. யானையைத் தானமளிப்பதை விட நிலத்தைத் தானமளிப்பது சிறந்தது. நிலத்தைத் தானமளிப்பதை விட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தை விடப் பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தை விட உணவு தானிய தானம் உயர்ந்தது.
உணவு தானிய தானத்தை விட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ மன்னர்களில் சிறந்தோனே, உணவு தானியங்களைத் தானமளிப்பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்திப்படுத்த முடியும். ஒருவர் தன் மகளைத் தாரைவார்த்துக் கொடுப்பது உணவு தானியங்களைத் தானமளிப்பதற்குச் சமம் எனக் கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு தானிய தானத்தையும் பசு தானத்தையும் முழுமுதற் கடவுளே சமப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியைக் கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானங்களின் பலனையும் அடைவார். தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தைச் செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளைத் தாரைவார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது.”
ஓ மன்னர்களின் மன்னனே! ஒரு குடும்பஸ்தர் பேராசையின் காரணமாகச் செல்வத்திற்காகத் தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதால் அடையும் புண்ணியத்தை எமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.
இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கலப் பாத்திரத்தில் உண்ணுதல், மாமிசம் உண்ணுதல், கீரை மற்றும் தேன் போன்றவற்றை உட்கொள்ளுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சூதாட்டம், பகல் உறக்கம், வெற்றிலை பாக்குச் சுவைத்தல், மற்றவர்களைக் குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது மற்றும் பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். மேலும், ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.
ஏகாதசிக்கு மறுநாள் வெண்கலத் தட்டில் உண்ணுதல், மாமிசம் மற்றும் தேனை உட்கொள்ளுதல், உடலுறவு, முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல், உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது மற்றும் மற்றவர்களால் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல், சில விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளை இந்த மூன்று நாட்கள் மட்டுமின்றி எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டுக் கடைப்பிடிப்பதன் மூலம், அவரின் எல்லாப் பாவ விளைவுகளும் அழிந்துவிடும்; அவர் மிக உயர்ந்த இலக்கை அடைகிறார். ஒருவர் ஏகாதசியன்று விழித்திருந்து பகவான் ஜனார்தனனை வழிபட்டால், தன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைகிறார். யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ, அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததின் பலனை அடைவார்; மேலும் தன் எல்லாப் பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆