ப்ரஸங்கம் அஜரம் பாசம் ஆத்மன: கவயோ விது:
ஸ ஏவ ஸாதுஷூ க்ருதோ மோக்ஷ த்வாரம் அபாவ்ருதம்
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு படித்த மனிதனும் ஜடப்பொருளின் மீது கொண்டுள்ள பற்றானது, ஆன்மாவுக்கு எதிரான மிகப்பெரிய சிக்கல் ஆகும் என்று நன்கு அறிந்திருக்கிறான். ஆனால், அதே பற்று தன்னை அறிந்த பக்தர்களிடம் இருக்கும் பொழுது, அது வீடுபேற்றுக்கான கதவைத் திறக்கிறது.
பொருளுரை
ஒருவர் ஒரு பொருள் மீது கொண்ட பற்றே கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் பந்தத்திற்கு காரணம் ஆகும். அதே பற்றை பிறவற்றின் மேல் செலுத்தினால், அது வீடுபேற்றுக்கு வழிவகுக்கிறது என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பற்று கொல்லப்பட இயலாதது; அது மாற்றப்பட வேண்டியதாகும். ஜடவுலகப் பொருளுக்கான பற்று உலகியல் உணர்வு நிலை என்றும், கிருஷ்ணர் அல்லது அவர் பக்தருக்கான பற்று கிருஷ்ண உணர்வு நிலை என்றும் அழைக்கப்படும். அதனால் உணர்வு நிலை பற்றுதலின் தளமாகும். நாம் உலக உணர்விலிருந்து கிருஷ்ண உணர்வு நிலைக்கு, உணர்வு நிலையைத் தூய்மைப்படுத்தும் பொழுது, விடுதலை அடைகிறோம் என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவர் பற்றை விட்டுவிட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பினும், ஆசையின்மை என்பது உயிர்களுக்கு சாத்தியமானது அல்ல. உயிரினம், அமைப்பினால் சிலவற்றைச் சார்ந்து இருக்கும் மனப்பாங்கு உடையது. சிலருக்குப் பற்றுக் கொள்ள பொருள் இல்லை என்றால், அவருக்குக் குழந்தைகள் இல்லையென்றால், அவர் தன் பற்றை பூனை, நாய்களிடம் மாற்றுவார். இது பற்றுக்கான மனப்பாங்கு நிறுத்தப்பட இயலாதது என்பதைக் குறிக்கிறது; அது சிறந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஜடவுலகப் பொருளுக்கான நம் பற்று, நம் கட்டுப்பட்ட நிலையை நீடிக்கச் செய்கிறது. ஆனால் அதே பற்று, பரம புருஷ பகவானிடம் அல்லது அவர் பக்தரிடம் மாற்றப்படும் பொழுது, அது வீடுபேற்றிற்குரிய ஆதாரம் ஆகும்.
பற்று தன்னையறிந்த பக்தர்களாகிய ஸாதுக்களிடம் மாற்றப்பட வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஸாது என்பவர் யார்? ஸாது என்பவர் காவி உடை அல்லது நீண்ட தாடி கொண்ட சாதாரண மனிதர் இல்லை. ஸாது என்பவர் தயக்கமின்றி பக்தித் தொண்டில் ஈடுபடுவர் என்று பகவத் கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பக்தித் தொண்டின் விதிகள், ஒழுங்குமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றாமல் இருந்தாலும், அவர் தயக்கமின்றி பரமனாகிய கிருஷ்ணரிடம் முழு நம்பிக்கை வைத்தால், அவர் ஸாது என்று புரிந்துகொள்ளப்படுகிறார். ஸாது ஏவ ஸ மந்தவ்ய: ஸாது என்பவர் பக்தித் தொண்டைக் கண்டிப்புடன் பின்பற்றுபவர். ஒருவர் பிரம்மன் அல்லது ஆன்மீகத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள விரும்பினால், அவருடைய பற்று ஸாதுவிடம் அல்லது பக்தரிடம் மாற்றப்பட வேண்டும் என்பது இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. பகவான் சைதன்யரும் இதை உறுதிப்படுத்தினார். லவ மாத்ர ஸாது ஸங்கே ஸர்வ ஸித்தி ஹய: ஸாதுவுடன் ஒரு கணநேரத் தொடர்புகொள்வதால், ஒருவர் முழுமை அடைய முடியும்.
மஹாத்மா என்பது ஸாதுவின் ஒரு பொருட் பன்மொழி ஆகும். மஹாத்மாவிடம் அல்லது பகவானின் உயர்ந்த பக்தரிடம் செய்யும் தொண்டு, த்வாரம் ஆஹுர் விமுக்தே: விடுதலைக்கான ராஜ வழியாகும் என்று கூறப்படுகிறது. மஹத் ஸேவாம் த்வாரம் ஆஹுர் விமுக்தேஸ் தமோ த்வாரம் யோஷிதாம் ஸங்கி ஸங்கம் (பாக. 5.5.2), ஜடவுலகத்தாருக்குச் செய்யும் தொண்டு எதிர் விளைவைத் தரும். யாரேனும் ஒரு முழுமையான ஜடவுலகத்தாருக்கு அல்லது புலன் இன்பத்தில் ஈடுபட்டவருக்குத் தொண்டு செய்தால், பின்னர் அம்மாதிரியானவருடன் கொள்ளும் தொடர்பால், நரகத்தின் கதவு திறக்கப்படுகிறது. அதே கொள்கை இங்கு உறுதி செய்யப்படுகிறது.
பக்தரிடம் உள்ள பற்று, பகவானின் தொண்டிற்கான பற்றாகும். ஏனெனில், ஒருவர் ஸாதுவிடம் தொடர்புகொண்டால், முடிவு என்னவெனில், ஸாது அவருக்கு எவ்வாறு பகவானின் பக்தராக, வழிபாடு செய்பவராக, உண்மை ஊழியராக ஆகலாம் என்று கற்றுத் தருவார். இவையே ஸாதுவின் பரிசுகளாகும். நாம் ஸாதுவுடன் தொடர்புகொள்ள விரும்பினால், அவர் நம் ஜடவுலக நிலையை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்று அறிவுரை தருவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, ஆனால் ஜடவுலகக் கவர்ச்சியாகிற மாசின் முடிச்சை எவ்வாறு அறுக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் தருவார். அதுவே ஸாதுவுடன் கொள்ளும் தொடர்பின் விளைவு ஆகும். முதலில் கபில முனிவர், வீடுபேற்றுக்கான வழி அத்தகைய தொடர்புடன் தொடங்குகிறது என்று அறிவுறுத்துகிறார்.
( ஶ்ரீமத் பாகவதம் 3.25.20 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆