பிறப்பும் இளமைப் பருவமும்
ரூப கோஸ்வாமி மற்றும் ஸனாதன கோஸ்வாமியின் சகோதரரான அனுபமரின் பிள்ளயே பின்னாளில் ஜீவ கோஸ்வாமி என்று உலகப் புகழ்பெற்றார். ஜீவரின் தந்தை அனுபமர் மிக இளம் வயதிலேயே கங்கைக்கரையில் உடல் துறந்தார் என்பதைத் தவிர, ஜீவரின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ஜீவர் வளர வளர, அவரது திருமேனியில் ஒரு மகாபுருஷருக்கான அனைத்து லட்சணங்களும் தென்பட்டன. அகன்ற தாமரை மலர் போன்ற கண்கள், கூரிய நாசி, பரந்த நெற்றி, சங்கு போன்ற கழுத்து, விரிந்த தோள்கள் மற்றும் மார்பு, முழங்கால் வரை நீளும் கரங்கள், அத்துடன் தெய்வீக ஒளியும் பெற்று அவர் விளங்கினார்.
கல்வி பயிலும் காலத்தில், அளப்பரிய உற்சாகத்துடன் சாஸ்திரங்களைக் கற்ற அவர்; தர்க்கம், காவியம் மற்றும் வியாகரணம் (இலக்கணம்) ஆகியவற்றில் பெரும் தேர்ச்சி பெற்றார். அக்காலகட்டத்தில், ஜீவர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமரின் விக்கிரகங்களை ஆராதித்து வந்தார். இந்தியாவில் அப்போது நேரில் பிரசன்னமாகியிருந்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும், நித்யானந்த பிரபுவும் அவ்விக்ரகங்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை அவர் பூரணமாக உணர்ந்திருந்தார்.
நவதீப யாத்திரையும் நித்யானந்த பிரபுவின் அருளும்
ஜீவரின் தாயார் காலமானபோது அவருக்கு வயது இருபது மட்டுமே. தாயாரின் மறைவு தந்த துயரம் அவரை உலக வாழ்க்கையிலிருந்து விலகச் செய்தது. தன் சிற்றப்பாக்களான ரூபர் மற்றும் ஸனாதனரின் வழியைப் பின்பற்ற அவர் முடிவெடுத்தார். அவர்கள் இருவரும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் கட்டளைக்கு இணங்க, பிருந்தாவனத்திற்குச் சென்று எளிய துறவிகளாக வாழ்ந்து வந்தனர்.
பிருந்தாவனத்திற்குச் செல்வதற்கு முன், ஜீவ கோஸ்வாமி நித்யானந்த பிரபுவின் கருணையைப் பெறுவதற்காக முதன்முதலில் நவதீபத்திற்கு விஜயம் செய்தார். நித்யானந்தரின் திவ்யமான அழகிய வடிவத்தைக் கண்டவுடன், ஜீவர் அவரது தாமரைப் பாதங்களில் பணிவாகப் பிரார்த்தித்தார்:
“நீங்களே பலராமன்; எல்லையற்றவரான உங்களது குணங்களை என்னால் முழுமையாக விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்—நீங்களே எனது நித்தியமான அடைக்கலம், நான் உங்களது தாசன். உங்களது கருணையினால் மட்டுமே ஒருவரால் ஸ்ரீ சைதன்யரின் அருளைப் பெற முடியும்; அதன் மூலம் பகவத் பிரேமை என்னும் அமிர்தக் கடலில் மூழ்க முடியும். உங்களது கருணையின்றி, ஒருவர் நூறு ஜென்மங்கள் ஆராதித்தாலும் ஸ்ரீ சைதன்யரின் அருளைப் பெற முடியாது. எனவே, உங்களது கருணைக் கடாட்சத்தை வேண்டுகிறேன்.”
இதனால் மகிழ்ச்சியடைந்த நித்யானந்த பிரபு, ஜீவரை நவதீபத்தின் ஒன்பது தீவுகளுக்கும் அழைத்துச் சென்றார். அங்கு வாழ்ந்த அனைத்து மகத்தான பக்தர்களையும், ஸ்ரீ சைதன்யர் வசித்த புனித இல்லத்தையும் அவர்கள் தரிசித்தனர்.
காசியில் உயர் கல்வியும் பிருந்தாவனப் பயணமும்
நவதீப யாத்திரை நிறைவுற்றதும், நித்யானந்தர் ஜீவரிடம், “நீ காசிக்குச் சென்று உனது படிப்பை முடித்துவிட்டு, பின்னர் பிருந்தாவனத்திற்குப் புறப்படு” என்று அறிவுறுத்தினார்.
அதன்படியே ஜீவர் காசிக்குச் சென்று, அங்குள்ள முதன்மை வேதாந்தப் பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். தத்துவ சாஸ்திரத்தில் தனது சிறந்த புலமையால் பெரும் புகழ்பெற்றார். படிப்பை முடித்ததும், நித்யானந்த பிரபுவின் கட்டளையை நினைவுகூர்ந்து பிருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.
ரூப கோஸ்வாமியிடம் தீக்ஷை பெறுதல்
பிருந்தாவனம் வந்து சேர்ந்த ஜீவரை, அவரது சிற்றப்பாக்களான ரூபர், ஸனாதனர் மற்றும் ஏனைய கோஸ்வாமிகளும் பிற முக்கிய பக்தர்களும் மிகுந்த அன்போடு வரவேற்றனர். அவர் அங்கு நிலைபெற்ற பிறகு, ஸனாதனரிடம் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். ஆனால், ஸனாதனர் தனது அடக்கத்தின் காரணமாக அவரை ரூபரை அணுகுமாறு அறிவுறுத்தினார்.
ரூபர் முதலில் ஜீவரைச் சோதிக்க விரும்பியதால், அவருக்குப் பல எளிய தொண்டுகளை வழங்கினார். ஜீவர் பிச்சை ஏற்று உணவு சேகரித்தார்; உணவு சமைத்தார்; எழுதுவதற்காகப் பனை ஓலைகளைச் சேகரித்து வந்தார். மேலும் விக்கிரக ஆராதனைக்கான பொருள்களை ஆயத்தம் செய்து, ரூபரின் பாதங்களை இதமாக வருடி பணிவிடை செய்தார்.
ஜீவரின் இத்தகைய தன்னலமற்ற சேவை மனப்பான்மையையும், “தான் வெறும் ஒரு கருவியே” என்னும் பணிவான அர்ப்பணிப்பையும் கண்டு ரூபர் மிகவும் திருப்தியடைந்தார். அவரை ஸ்ரீ சைதன்யரின் ஆன்மீகப் பாரம்பரியத்தில் முறைப்படி தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
திக்கவிஜயி ரூபநாராயணனின் அகந்தை
காலப்போக்கில், ரூபநாராயணன் எனும் புகழ்பெற்ற பண்டிதர் ஒருவர் பிருந்தாவனத்திற்கு வந்தார். அகந்தை மிகுந்த அவர், “நாற்புறமும் வெற்றி கொள்பவர்” என்று பொருள்படும் திக்கவிஜயி எனும் பட்டத்தைச் சுமந்திருந்தார். தான் செல்லும் இடமெல்லாம் அங்கிருக்கும் முதன்மை அறிஞர்களுக்குச் சவால் விடுப்பதையும், அவர்களுடன் தர்க்கம் செய்து தோற்கடித்து, தனது வெற்றியை உறுதிப்படுத்தும் சான்றிதழில் அவர்களிடம் கையெழுத்து வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வட இந்தியாவில் ரூப கோஸ்வாமியும் ஸனாதன கோஸ்வாமியும் மிகச் சிறந்த சாஸ்திர பண்டிதர்கள் என்பதை ரூபநாராயணன் கேள்விப்பட்டிருந்தார். “நான் அவர்களைத் தோற்கடித்துவிட்டால், பாரத வர்ஷத்திலேயே மிகச்சிறந்த பண்டிதராகப் போற்றப்படுவேன்” என்று எண்ணி, அவர்களைச் சந்தித்துச் சவால் விடுத்தார்.
ஆனால், கோஸ்வாமி சகோதரர்கள் இருவரும் அத்தகைய வீண் பெருமை பேசும் நபருடன் பேசித் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, நயம்பட, “ஓ ரூபநாராயணரே, நீர் ஒப்பற்ற வெற்றிவீரன்; அளப்பரிய பண்டிதர். நாங்கள் உங்களது அறிவுக்கு ஈடாக முடியாது. எங்கள் நண்பர்கள் எங்கள் கல்வியைப் பற்றி உயர்வாகப் பேசலாம், ஆனால் உங்களைப் போன்ற ஒருவருடன் எங்களை ஒப்பிட முடியாது” என்று கூறினர்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட ரூபநாராயணன் பூரிப்படைந்து அப்படியானால், நீங்கள் உங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு சான்றிதழில் கையெழுத்திட வேண்டும்” என்று வற்புறுத்தினார். சகோதரர்கள் இருவரும் உடனடியாகக் கையெழுத்திட்டு, வீண் விவாதத்தைத் தவிர்த்த மகிழ்ச்சியில் அவரை வழியனுப்பினர்.
குருவின் புகழைக் காத்த தர்க்க யுத்தம்
ரூபநாராயணன் பண்டிதர் உடனடியாகப் பிருந்தாவனத்தை விட்டு வெளியேறவில்லை; ஏனெனில் ஜீவ கோஸ்வாமியின் புகழும் அவரது காதுகளை எட்டியிருந்தது. வாலிப வயதினரான ஜீவரைச் சந்தித்த அப்பண்டிதர், அவரது சிற்றப்பாக்கள் கையெழுத்திட்ட சான்றிதழைக் காட்டி, தர்க்கமே இன்றி தான் அவர்களை எவ்வாறு தோற்கடித்தேன் என்று தற்பெருமை பேசினார்.
ரூபரையும் ஸனாதனரையும் ரூபநாராயணன் இழிவுபடுத்திப் பேசியதைக் கேட்டு ஜீவர் கோபக் கனலானார். தன் குருமார்களின் கீர்த்தியை மீண்டும் நிலைநாட்ட உறுதிபூண்ட ஜீவர், “ஆம், நான் நிச்சயமாக உம்முடன் தர்க்கத்தில் ஈடுபடுவேன்” என்று சவாலை ஏற்றார்.
யமுனை நதிக்கரையில் ஏழு நாட்களாக இருவரும் வாதாடினர். இறுதிநாளில் ஜீவர் மகத்தான வெற்றியாளராக உருவெடுத்தார். அகந்தை கொண்ட “ரூபநாராயணன் பெரும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தார்.. இனி தன்னால் ‘திக்கவிஜயி’ என்று உரிமை கோர முடியாது என்பதை உணர்ந்து, மிகுந்த அவமானத்துடன் அங்கிருந்து அவசரமாக வெளியேறினார். இவ்வாறாக ஜீவ கோஸ்வாமி நெருப்பைப் போலச் செயல்பட்டு ரூபர் மற்றும் ஸனாதனரின் நற்பெயரைக் காத்தருளினார்.
திருக்கோயில் நிர்மாணம்
ஜீவரின் புகழ் திசையெங்கும் பரவி அக்பர் சக்கரவர்த்தியின் கவனத்தையும் ஈர்த்தது. மாமன்னர் அக்பர் ஒருமுறை பிருந்தாவனத்திற்கு வருகை தந்தபோது, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். அச்சந்திப்பு அவரது மனதிற்குள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது, அக்பருக்குப் பிருந்தாவனத்தின் புனிதமும் மகிமையும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஜீவ கோஸ்வாமியின் வழிகாட்டுதலின்படி, அக்பரும் அவரது அமைச்சர்களும் தளபதிகளும் இணைந்து, பிருந்தாவனத்தை ஒரு சிறந்த புனித யாத்திரைத்தலமாக மேம்படுத்தும் பணியில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டனர். மேலும், பிருந்தாவனத்தின் நான்கு மூலத் திருக்கோயில்களான மதன்-மோகன், கோவிந்ததேவ், கோபிநாத் மற்றும் யுகல்-கிஷோர் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு ஜீவருக்கு உதவத் தீர்மானித்தார்.
மேலும், ஜீவ கோஸ்வாமி ராதாதாமோதர மந்திரின் கட்டுமானப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். அதன் முற்றத்தில் (வளாகத்தின் முன்பகுதியில்), சாதுக்கள் தங்குவதற்கான அறைகள் இன்றும் உள்ளன. இங்குதான் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நிறுவன ஆச்சார்யர் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1965-இல் அமெரிக்காவிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார். இப்புனித இடத்தில் வசித்தபோதுதான் அவர் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் மூன்று பாகங்களை எழுதி அருளினார்கள் .
நூல் விநியோகம்
காலப்போக்கில், ஜீவ கோஸ்வாமி பலரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டார். மேலும் பிற கோஸ்வாமிகள் எழுதிய ஆயிரக்கணக்கான பனை ஓலைச் சுவடிகளின் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். இப்புனித சாஸ்திர நூல்களின் மிகப் பெரிய நூலகத்தை அவர் சேகரித்து, தனது முதன்மைச் சீடர்கள் மூலம் ஒரிசா மற்றும் வங்காளத்திற்கு எடுத்துச் செல்லப் பணித்தார். அங்குள்ள பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்நூல்களைப் பிரதியெடுத்துப் படித்தனர். இவ்வாறாக, ஜீவ கோஸ்வாமி முதல் பக்தித் தொண்டு சார்ந்த நூல் விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.
மிகச்சிறந்த தத்துவஞானி
ஜீவ கோஸ்வாமி தனிப்பட்ட முறையில் 4,00,000-க்கும் மேற்பட்ட சாஸ்திர ஸ்லோகங்களை இயற்றிய பெருமைக்குரியவர். காசி இந்து பல்கலைக்கழகம் (Benares Hindu University) இவரது படைப்புகளை மட்டுமே விரிவாகப் பயிற்றுவிப்பதற்காகத் தனித் துறையையே ஒதுக்கியுள்ளது.
பாரத வரலாற்றிலேயே மிகச்சிறந்த தத்துவஞானியாக இவர் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். ஸ்ரீல பிரபுபாதா, “வைஷ்ணவர்களே உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், அவர்களிலும் தலையாயவர் ஜீவ கோஸ்வாமி” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
அவரது இலக்கியப் பங்களிப்பு (இலக்கியக் கொடை)
ஜீவ கோஸ்வாமி இயற்றிய புகழ்பெற்ற நூல்களில் குறிப்பிடத்தக்கவை:
தத்துவ சந்தர்ப்பம்
பகவத் சந்தர்ப்பம்
பரமாத்ம சந்தர்ப்பம்
கிருஷ்ண சந்தர்ப்பம்
பக்தி சந்தர்ப்பம்
பரீதி சந்தர்ப்பம்
இவை தவிர, கௌடீய வைஷ்ணவத்தின் தத்துவ மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தை வளப்படுத்தும் கோபால சாம்பு , ஹரி-நாமாமிருத-வியாகரணம் , கிரம சந்தர்ப்பம் போன்ற பல முக்கிய நூல்களையும் அவர் இயற்றியுள்ளார்.
அவரது புலமை அளப்பரியது; ஆனால் அதன் நோக்கம் மிகவும் எளிமையானது:
பக்தியின் உண்மையை உலகிற்கு எடுத்துரைத்து, ஜீவாத்மாக்களை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்வதே ஆகும்.
ஜீவ கோஸ்வாமியின் சமாதி
ஜீவ கோஸ்வாமியின் சமாதி ராதா தாமோதர திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ண லீலையில் இவர் ‘விலாச-மஞ்சரி’ ஆவர்.
ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி கி ஜெய்!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆