பதம் 1
நிகில-சுருதி-மௌலி-ரத்ன-மாலா-
த்யுதி-நிராஜித-பாத-பங்கஜாந்த
அயி முख्त-குலைர் உபாஸ்யமானம்
பரிதஸ் த்வாம் ஹரி-நாம ஸம்ஸ்ரயாமி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தங்களுடைய தாமரை மலர்ப்பாதங்களின் விரல் நுனி, நவரத்தினங்களால் தொடுக்கப்பட்ட மாலையின் தேஜஸைப் போலுள்ள உபநிஷதங்களால் வணங்கப்படுகிறது. தாங்கள் அனைத்து வேதங்களின் கிரீடம். தாங்கள் நாரதர், சுகதேவர் போன்ற முக்தி அடைந்த ஆத்மாக்களால் எப்போதும் போற்றப்படுகிறீர்கள். ஓ ஹரி நாமமே! நான் தங்களிடம் முழுமையாகத் தஞ்சமடைகிறேன்.
பதம் 2
ஜய நாமதேய முனி-வ்ருந்த-ஜேய ஹே
ஜன-ரஞ்சனாய பரம-அக்ஷராக்ருதே
த்வம் அநாதராத அபி மநாக் உதீரிதம்
நிகிலோக்ர-தாப-பதலிம் விலும்பஸி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! சாதுக்களால் போற்றப்படுபவரே! ஜயமுண்டாகட்டும். தங்களுடைய நாமம் பக்தர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுகிறது. தங்களுடைய நாமத்தை ஒருவர் ஒரு முறை அலட்சியமாக உச்சரித்தால் கூட, அதன் முழுப் பலனையும் தருபவரே! யாரேனும் உங்களது நாமத்தை விமர்சிப்பதற்காக (கேலியாக)ப் பயன்படுத்தினாலும் கூட, அவர்களின் கொடிய துன்பத்தைப் போக்குபவரே! தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
பதம் 3
யத்-ஆபாஸோ அபி உதயன் கவலித-பவ-த்வாந்த-விபவோ
த்ருஸாம் த்வாந்தானாம் அபி திஸதி பக்திம் ப்ரணயினீம்
ஜனஸ் தாஸ்யோதாத்தம் ஜகதி பகவன்-நாம-தரணே
க்ருதீ தே நிர்வக்தும் க இஹ மஹிமானம் ப்ரபவதி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமத்தின் பேரொளியே! விடியற்காலைப் பொழுதில் உதிக்கும் சூரியனைப் போலுள்ள “நாமாபாஸா” (நாமத்தின் நிழல் ஒளி), பௌதிக உலகின் இருட்டில் தவிக்கும் மக்களுக்கு, “பகவான் க்ருஷ்ணருடைய பக்தித் தொண்டு” என்ற ஆன்மீக ஒளியை வழங்குகிறது. ஓ பகவந் நாமம் என்னும் சூரியனே! தங்களுடைய திவ்யமான மகிமைகளை, இந்த உலகில் தலைசிறந்த பண்டிதராலும் கூட முழுமையாக விளக்க முடியாது.
பதம் 4
யத்-ப்ரம்ம-ஸாக்ஷாத்க்ருதி-நிஷ்டயாபி
விநாஸம் ஆயாதி விநா ந போகை:
அபைதி நாம ஸ்புரணேன தத் தே
ப்ராரப்த-கர்ம இதி விப்ருதி வேத:
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! வேதங்கள் ஒன்றை தெளிவுபடுத்துகின்றன – கடுமையான தியானமோ அல்லது அருவ பிரம்மனின் வழிபாடோ ஒரு ஆத்மாவின் பிராரப்த கர்மங்களை (அனுபவித்துத் தீர்க்க வேண்டிய கர்மவினை) அழிப்பதில்லை, அவற்றை அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆனால், யாரொருவர் தங்களுடைய நாமத்தை நாவில் உச்சரிக்கிறாரோ, அவருடைய பிராரப்த கர்மங்கள் அனைத்தும் உடனே நீங்கி விடுகின்றன.
பதம் 5
அகதமன-யஸோதாநந்தநௌ நந்தஸூனோ
கமலநயன-கோபீசந்த்ர-வ்ருந்தாவனேந்த்ர
ப்ரணத-கருண-க்ருஷ்ணௌ இதி அநேக-ஸ்வரூபே
த்வயி மம ரதிர் உச்சைர் வர்ததாம் நாமதேய
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தங்களுடைய பல திவ்ய நாமங்களான – அகதமன (அகாசுரனைக் கொன்றவர்), யஸோதாநந்தன (யசோதையின் புதல்வர்), நந்தஸூனு (நந்த மஹாராஜரின் புதல்வர்), கமலநயன (தாமரைக் கண்கள் உடையவர்), கோபீசந்த்ர (கோபியர்களின் சந்திரன்), வ்ருந்தாவனேந்த்ர (விருந்தாவனத்தின் அரசர்), பிரணதகருண (தஞ்சமடைந்த ஆத்மாக்களுக்குக் கருணை காண்பிப்பவரே) மற்றும் க்ருஷ்ணா – ஆகிய இந்தத் திருநாமங்களின் மீது எனக்கு அன்பும் பக்தியும் (ரதி) எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பதம் 6
வாச்யம் வாசகம் இதி உதேதி பகவதோ நாம்ந: ஸ்வரூப-த்வயம்
பூர்வஸ்மாத் பரமேவ ஹந்த கருணாம் தத்ராபி ஜானீமஹே
யஸ் தஸ்மின் விஹிதாபராத-நிவஹ: ப்ராணீ ஸமந்தாத் பவேத்
ஆஸ்யேநாத் உபாஸ்ய ஸோ அபி ஹி ஸதானந்தாம்புதௌ மஜ்ஜதி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தாங்கள் இரு விதமாகத் தோன்றுகிறீர்கள் – வாச்யம் (ஹரி நாமத்தின் வடிவமான முழுமுதற் கடவுள்) மற்றும் வாசகம் (ஹரி நாமத்தின் ஒலி அதிர்வு). இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முதலாவதைக் காட்டிலும் இரண்டாவது (ஒலி வடிவம்) மிகவும் கருணை வாய்ந்தது என்று நாங்கள் அறிகிறோம். ஏனெனில், முழுமுதற் கடவுளின் வடிவிற்கு அபராதம் (குற்றம்) செய்தவன் கூட, தனது நாவினால் ஹரி நாமத்தின் ஒலி அதிர்வை முறைப்படி உபாஸனை செய்தால், அவனும் நிச்சயம் நித்திய பேரானந்தக் கடலில் மூழ்குவான்.
பதம் 7
ஸூதிதாஶ்ரித-ஜனார்த்தி-ராஸயே
ரம்ய-சித்-கன-ஸுக-ஸ்வரூபிணே
நாம கோகுல-மஹோத்ஸவாய தே
க்ருஷ்ண பூர்ண-வபுஸே நமோ நம:
மொழிபெயர்ப்பு
ஓ பூரண வடிவமான க்ருஷ்ண நாமமே! தீவிரமான ஆன்மீகப் பேரானந்தத்தின் (சித்-கன-ஸுக) இருப்பிடம் தாங்கள். தங்களிடம் தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை முற்றிலும் நீக்குபவர் தாங்கள். கோகுலத்திற்குத் தாங்கள் என்றென்றும் ஒரு பேரொளி மிக்க திருவிழாவின் ஆனந்தம். அத்தகைய தங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
பதம் 8
நாரத-வீணோஜ்ஜீவன
ஸுதோர்மி-நிர்யாஸ-மாதுரீ-பூர
த்வம் க்ருஷ்ண-நாம காமம்
ஸபுர மே ரஸநே ரஸேன ஸதா
மொழிபெயர்ப்பு
ஓ க்ருஷ்ணரின் திருநாமமே! நாரத முனிவருடைய வீணையின் உயிர்நாடியே! அமிர்த அலைகளின் உன்னதச் சுவை நிரம்பியவரே! தாங்கள் என் மீது கருணை கொண்டு, பரம ஆன்மீக ரஸத்துடன் என்னுடைய நாவில் எப்போதும் தோன்றிப் பிரகாசிப்பீராக!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆