ஏதஸ்மின் ஸம்ஸாராத்வனி நானா – க்லேஸோபஸர்க – பாதித ஆபன்ன – விபன்னோ யத்ர யஸ் தம் உ ஹ வாவேதரஸ் தத்ர விஸ்ருஜ்ய ஜாதம் உபாதயா ஸோசன் முஹ்யன் பிப்யத் – விவதன் க்ரந்தன் ஸம்ஹ்ருஷ்யன் காயன் நஹ்யமான ஸாது – வர்ஜிதோ நைவாவர்ததே (அ)த்யாபி யத ஆரம்த ஏஷ நர – லோக – ஸார்தோ யம் அத்வன பாரம் உபதிஸந்தி.
மொழிபெயர்ப்பு
பௌதிக உலகின் பாதையானது துன்பங்கள் நிறைந்ததாகும். பல்வேறு வகையான துயரங்கள் பந்தப்பட்ட ஆத்மாவைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன. சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான்; சிலசமயம் இலாபமடைகிறான். ஆனால், இந்த இரண்டு நிலைகளிலும் பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது. சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா, மரணத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ தன் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுகிறான். அப்படிப் பிரிந்து வந்தவுடன், அவன் படிப்படியாகத் தன் குழந்தைகள் போன்ற பிற நபர்களிடம் பற்றுடையவனாகிறான். இவ்வாறாகப் பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான்; சிலசமயம் பயத்தினால் கூக்குரலிட்டு அழுகிறான். சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதில் மகிழ்ச்சியடைகிறான். இம்மகிழ்ச்சி அதிகரிக்கும் பொழுது சிலசமயம் இனிமையாகப் பாடுகிறான். இவ்வாறு காலாகாலமாக முழுமுதற் கடவுளுடன் தனக்கிருந்த உறவினை மறந்து அவன் பௌதிகப் பொறியில் சிக்கிக் கொள்கிறான். இத்தகைய ஆபத்து நிறைந்த பௌதிக வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யும் அவன், எப்போதும் உண்மையான மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. ஆபத்து நிறைந்த இப்பௌதிக வாழ்க்கைப் பாதையிலிருந்து வெளிவர உணர்வு பெற்றோர் முழுமுதற் கடவுளைச் சரணடைய வேண்டும். ஏனெனில், பக்தித் தொண்டின்றி இந்த பௌதிக வாழ்க்கையின் பிடியிலிருந்து ஒருபோதும் மீள முடியாது. பௌதிக வாழ்க்கையில் ஒருவன் கூட உண்மையாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதே இதன் முடிவாகும். எனவே, ஒவ்வொருவனும் கிருஷ்ண உணர்விற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
பொருளுரை
பௌதிக வாழ்க்கை முறையை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகு, புத்திசுவாதீனமுடைய ஒருவன் இவ்வுலகில் துளியளவு இன்பம் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வான். ஆயினும், காலாகாலமாக இந்த ஆபத்தான பாதையில் பயணம் செய்வதினாலும், தெய்வீக மகான்களின் தொடர்பு கிடைக்காததினாலும், பந்தப்பட்ட ஆத்மா தன் மாயையினால் இப்பௌதிக உலகினை அனுபவித்து மகிழ விரும்புகிறான். அவ்வாறு முயன்ற போதிலும், பந்தப்பட்ட ஆத்மா ஜட இயற்கையினால் நித்தியமாகத் தண்டிக்கப்படுகிறான். அதனால்தான், “தண்ட்ய ஜனே ராஜா யேன நதீதே சுபாய” (சை.ச. மத்ய 20.118) என்று கூறப்படுகிறது.
பௌதிக வாழ்க்கை என்பதற்குப் பொருளே ‘தொடர்ந்து துக்கித்தல்’ என்பதுதான். ஆயினும், துன்பங்களுக்கு இடையே சிலசமயம் தற்காலிகமாகத் தோன்றும் இடைவெளிகளை நாம் மகிழ்ச்சி என்று தவறாக ஏற்றுக் கொள்கிறோம். தண்டனைக்குரிய ஒருவன், தண்ணீருக்குள் அமிழ்த்தி அமிழ்த்தி வெளியே எடுக்கப்படுவதைப் போன்றதே இது. உண்மையில் அவன் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படுவதும் ஒரு கொடுமையான தண்டனைதான்; ஆயினும் அவன் தண்ணீரிலிருந்து சிறிது தூக்கப்படும் போது, அந்தச் சில நொடிகள் சுகத்தை அனுபவிப்பதாக உணர்கிறான். பந்தப்பட்ட ஆத்மாவின் நிலையும் இதே போன்றதாகும். அதனால்தான் அனைத்துச் சாத்திரங்களும் ஒருவன் தூய பக்தர்களுடனும், தெய்வீக மகான்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.
‘ஸாது – ஸங்க’, ‘ஸாது – ஸங்க’ ஸர்வ – ஸாஸ்த்ரே கய
லவ – மாத்ர ஸாது – ஸங்கே ஸர்வ – ஸித்தி ஹய (சை.ச. மத்ய 22.54)
பக்தர்களுடன் கொள்ளும் ஒரு சிறிய (ஒரு விநாடி) தொடர்பினால் கூட, பந்தப்பட்ட ஆத்மாவினால் துன்பம் நிறைந்த இந்த பௌதிக நிலையிலிருந்து எளிதாக வெளியேற முடியும். இந்த கிருஷ்ணபக்தி இயக்கம், ஒவ்வொரு மனிதனும் தெய்வீக மகான்களுடன் தொடர்பு கொள்வதற்கான உன்னத முயற்சியினை அதனால்தான் மேற்கொண்டிருக்கின்றது. ஆகையினால், கிருஷ்ண பக்தி இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு ஆன்மீக வாய்ப்பினை வழங்குவதற்காகத் தாங்களே தகுதியுடைய சாதுக்களாக வாழ்தல் வேண்டும். இதுவே மனித சமுதாயத்திற்குச் செய்யப்படும் மிகச்சிறந்த மனிதநலச் சேவையாகும்.
(ஶ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14.38 / பொருளுரை வழங்கியவர்: ஶ்ரீல பிரபுபாதர்)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆