அப்யாஸ-யோக-யுக்தேன
சேதஸா நான்ய-காமினா
பரமம் புருஷம் திவ்யம்
யாதி பார்த்தானுசிந்தயன்
மொழிபெயர்ப்பு
பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான்.
பொருளுரை
இப்பதத்தில் தன்னை நினைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். ஹரே கிருஷ்ண மகா மந்திர உச்சாடனத்தின் மூலம் ஶ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய நினைவு மீண்டும் எழுப்பப்படுகிறது. பரம புருஷரின் ஒலி அதிர்வினைக் கேட்பதும் உச்சரிப்பதுவுமான இந்த வழிமுறையில் காது, நாக்கு மற்றும் மனமும் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த உன்னதமான தியான முறையினைப் பயிற்சி செய்வது மிகவும் எளிதானதாகும். மேலும், இவ்வழிமுறை பரம புருஷரை அடைய உதவுகின்றது.
புருஷம் என்றால் அனுபவிப்பாளர். உயிர்வாழிகள் இறைவனின் நடுநிலைச் சக்தியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பௌதிகக் களங்கத்தில் உள்ளனர். தங்களை அனுபவிப்பாளராக எண்ணிக்கொண்டுள்ள போதிலும், அவர்கள் பரம அனுபவிப்பாளர் அல்ல. நாராயணர், வாஸுதேவர் போன்ற பல்வேறு தோற்றங்களாகவும் விரிவுகளாகவும் விளங்கும் பரம புருஷ பகவானே பரம அனுபவிப்பாளர் என்பது இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்தன், வந்தனைக்கு உரியவரான பரம புருஷரை அவரது எந்த ரூபத்திலும் — நாராயணர், ஶ்ரீ கிருஷ்ணர், ஶ்ரீ ராமர் போன்ற எந்த ரூபத்திலும் — ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் இடையறாது நினைவிற்கொள்ள முடியும். இப்பயிற்சி அவனைத் தூய்மையப்படுத்தும்; மேலும், தனது இடையறாத உச்சாடனத்தின் விளைவால், வாழ்வின் இறுதியில் அவன் இறைவனின் திருநாட்டிற்கு மாற்றப்படுகிறான்.
யோகப் பயிற்சி என்பது உள்ளிருக்கும் பரமாத்மாவின் மீது தியானிப்பதாகும்; அதுபோலவே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் ஒருவன் எப்போதும் தனது மனதை பரம புருஷரின் மீது நிலைநிறுத்துகிறான். மனம் சஞ்சலமானது என்பதால், ஶ்ரீ கிருஷ்ணரை நினைப்பதற்கு அதனை வற்புறுத்துவது அவசியமாகும்.
இவ்விஷயத்தில் அடிக்கடி கொடுக்கப்படும் ஓர் உதாரணம், பட்டுப்பூச்சி ஆக வேண்டுமென்ற விருப்பத்தினால் ஒரே வாழ்வில் பட்டுப்பூச்சியாக மாற்றம்பெறும் கம்பளிப்பூச்சியாகும். அதுபோலவே, நாம் ஶ்ரீ கிருஷ்ணரை இடையறாது நினைத்தால், வாழ்வின் இறுதியில் நாம் அவரைப் போன்ற உடலமைப்பைப் பெறுவது உறுதி.
(ஶ்ரீமத் பகவத் கீதை 8.8)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆