வைசாக மாதத்தின் வளர்பிறை திரிதியை திதி, “அட்சய திரிதியை” என்று போற்றப்படுகிறது. ‘அட்சய’ என்றால் குறையாதது அல்லது அழியாதது என்று பொருள். ஜட உலக லாபங்களுக்காகத் தங்கம் வாங்கும் நாளாக இன்று பலரால் இது பார்க்கப்பட்டாலும், உண்மையில் இது பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் கருணையும் பக்தர்களின் பக்தியும் ஒன்றிணைந்த மங்கலகரமான நாள். கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, இந்த நாள் பகவானின் பல்வேறு அவதாரங்களோடும், அவரது உன்னதமான பக்தர்களின் லீலைகளோடும் நெருங்கிய தொடர்புடையது. அழியாத ஆன்மீகச் செல்வத்தை வாரி வழங்கும் இந்த நன்னாளின் சிறப்புகளைக் காண்போம்.
தகவல்கள்
🌾1. பரசுராமர் அவதரித்த திருநாள்.
🌾2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்.
🌾3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.
🌾4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்.
🌾5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.
🌾6. திரேதாயுகம் தொடங்கிய நாள்.
🌾7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.
🌾8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.
🌾9. அன்னபூரணி தேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
🌾10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.
🌾11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்.
🌾12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஶ்ரீ ராதா மாதவர், பகவான் ஶ்ரீ நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.
🌾13. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஶ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.
🌾14. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்).
🌾15. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கப்படும்.
இவ்வாறு பல புண்ணிய நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்ட அட்சய திரிதியை, வெறும் உலகியல் லாபங்களுக்கானது மட்டுமல்ல; இது பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான ஆழமான உறவை உணர்த்தும் உன்னத நாள். சுதாமரின் ஒரு பிடி அவலுக்கு பகவான் அளவற்ற செல்வத்தை வழங்கியதும், திரௌபதியின் அட்சய பாத்திரத்தில் எஞ்சிய ஒரு பருக்கையை உண்டு உலகையே பசியாரச் செய்ததும் இந்த நன்னாளில்தான். எனவே, இந்த சுபதினத்தில் நாமும் பகவானின் திருநாமத்தை உச்சரித்து, அவருக்குச் சந்தனக் காப்பு போன்ற சேவைகளைச் செய்து, அழிவில்லாத கிருஷ்ண பக்தியைப் பெறுவதே உண்மையான ‘அட்சய’ பலனாகும்.
ஹரே கிருஷ்ண!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆