ஆன்மீக உலகில் உயர்ந்த இடமாகக் கருதப்படும் திவ்யமான வைகுண்ட தாமத்தைக் காட்டிலும், பகவான் கிருஷ்ணர் மனித வடிவில் அவதரித்த மதுராவின் புனிதப் பூமி மிக மேன்மையானதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அந்த மதுரையை விடவும் பகவான் தனது பிரேமை நிறைந்த ராசலீலையைப் புரிந்த ஶ்ரீ பிருந்தாவனம் உயர்ந்தது. அந்த பிருந்தாவனத்தை விடவும், பகவான் கிருஷ்ணர் தனது கரங்களால் தூக்கிப்பிடித்து பல பிரேம லீலைகளைப் புரிந்த கோவர்தன மலை மிகவும் மேன்மையானது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து ஆன்மீகத் தலங்களிலும் மிகவும் உன்னதமான இடமாகக் திகழ்வது ஶ்ரீ ராதா குண்டம் மட்டுமே! ஏனெனில், இது பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் தூய அன்பு எனும் அமிர்தத்தால் நிரம்பியுள்ளது. கோவர்தன மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அற்புத ராதா குண்டத்திற்குப் பக்தித் தொண்டு செய்து ஆன்மீக ஆனந்தம் அடைய யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?
அரிஷ்டாசுர வதம்
ஒருமுறை கம்சன் அனுப்பிய அரிஷ்டாசுரன் என்னும் அசுரன், பிரம்மாண்டமான காளை உருவத்தில் பிருந்தாவனத்திற்கு வந்து பெரும் அழிவை ஏற்படுத்தினான். கிருஷ்ணரைக் கண்டதும் ஆக்ரோஷமாக அவரை நோக்கிப் பாய்ந்து வந்தான். ஜகதீஸ்வரனான ஶ்ரீ கிருஷ்ணர், சிறிதும் அச்சமின்றி அந்த அசுரனின் கொம்பைப் பற்றித் தரையில் சுழற்றி எறிந்தார். களைப்பும் வியர்வையும் அவனது உடலை வாட்டியபோதும், அவன் மீண்டும் பெருந்தடைகளுடன் எதிர்த்துப் போராடினான். இம்முறையோ, பகவான் அவனது கொம்புகளைப் பிடித்துத் தரையோடு தரையாக மோதி அந்த அசுரனை வதம் செய்தார்.
அரிஷ்டாசுரனை வதம் செய்த பிறகு, பகவான் கிருஷ்ணர் கோபியர்களைச் சந்திப்பதற்காகக் கோவர்தன மலைக்குச் சென்றார்.
ஷ்யாம குண்டம் உருவாதல்
அங்கே ஶ்ரீமதி ராதாராணியும் கோபியர்களும் பகவானிடம் விளையாட்டுத்தனமாக, “கிருஷ்ணா! காளை என்பது தர்மத்தின் வடிவம். நீ ஒரு காளையைக் கொன்றதால் உனக்குக் கோஹத்தி பாவம் (காளையைக் கொன்ற பாவம்) வந்துவிட்டது. இனி நாங்கள் உன்னோடு இருக்க முடியாது; மீறி வந்தால் அந்தப் பாவம் எங்களையும் தொற்றிவிடும்! நீ இந்த உலகத்திலிருக்கும் அனைத்துப் புனித நதிகளிலும் நீராடி வந்தால் மட்டுமே உன்னுடைய பாவம் நீங்கும்” என்று கூறினர்.
தனது அன்பான பக்தர்களின் சொல்லை ரசித்த பகவான், “நான் எங்குமே செல்லத் தேவையில்லை, அனைத்துப் புனித நதிகளையும் இங்கேயே வரவழைக்கிறேன்” என்று கூறினார்.
பகவானின் சங்கல்ப மாத்திரத்தில், அகிலத்தின் அனைத்துப் புனித நதிகளும் அங்கே நேரில் தோன்றி அவருக்குச் சேவை செய்ய ஆயத்தமாயின. பகவான் தனது குதிங்காலால் தரையில் ஒரு சிறிய பள்ளத்தை உண்டாக்கியதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி போன்ற நதிகள் வந்து அதில் நிரம்பின. அதற்கு ஷ்யாம குண்டம் என்று பெயர்.
பகவான் அதில் நீராடிவிட்டு, “நான் நீராடித் தூய்மையடைந்து விட்டேன். ஆனால் நீங்கள் அந்த அசுரனுக்கு ஆதரவாகப் பேசியதால் உங்களுக்கும் பாவம் தொற்றிவிட்டது. நீங்களும் இதில் நீராடுங்கள்” என்றார்.
அதற்கு கோபியர்கள், “நீ காளையைக் கொன்ற பாவத்தோடு இதில் நீராடியதால் இந்த நீர் சுத்தமாக இல்லை. எனவே நாங்கள் இதில் இறங்க மாட்டோம். நாங்களே தனியாக ஒரு பொய்கையை உருவாக்கி அதில் நீராடுகிறோம்” என்று கூறினர்.
ஶ்ரீமதி ராதாராணியின் பேரன்பும் ராதா குண்டத்தின் தோற்றமும்
உடனே ஶ்ரீமதி ராதாராணியும் மற்ற கோபியர்கள் அனைவரும் தங்களுடைய கை வளையல்களாலேயே ஒரு பள்ளத்தைத் தோண்டத் தொடங்கினர். அது ஒரு அழகான பொய்கையின் வடிவத்தைப் பெற்றதும், கோபியர்கள் அனைவரும் ஒரு நீண்ட வரிசையாக நின்று, மானஸ கங்கையிலிருந்து குடங்களை முகந்து கொண்டு வந்து அதில் ஊற்றத் தொடங்கினர்.
தனது பிரியமான ராதாராணியும் கோபியர்களும் இத்தகைய கடினமான வேலையைச் செய்வதைக் கண்டு பகவான் கிருஷ்ணரின் மனம் உருகியது. அவர் உடனே அனைத்துப் புனித நதிகளையும் அழைத்து, ஶ்ரீமதி ராதாராணியிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அவ்வாறே புனித நதிகள் அனைத்தும் ராதாராணியின் முன் தோன்றி, “தாயே! எங்கள் நீரைக் கொண்டு இந்தப் பொய்கையை நிரப்ப அருள் புரிய வேண்டும்” என்று வேண்டின. ராதாராணியும் கருணையோடு அதற்குச் சம்மதிக்க, ஷ்யாம குண்டத்திலிருந்து நீர் பொங்கி வந்து இந்தப் பொய்கையில் நிரம்பியது. இவ்வாறாக, உலகிலேயே மிகப் பரிசுத்தமான ஶ்ரீ ராதா குண்டம் அவதரித்தது.
ஶ்ரீல பிரபுபாதர், தனது ஶ்ரீ உபதேசாம்ருதம் நூலில், ஶ்ரீமதி ராதாராணி பகவான் கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பரம பக்தை என்பதால், அவருடைய குண்டமான ஶ்ரீ ராதா குண்டமே அனைத்து ஆன்மீகத் தலங்களிலும் தலைசிறந்தது என்று விளக்குகிறார்.
லகு பாகவதாம்ருதம் நூலிலும் இது இவ்வாறு போற்றப்படுகிறது:
யதா ராதா ப்ரியா விஷ்ணோஃ
தஸ்யாஃ குண்டம் ப்ரியம் ததா
ஸர்வ கோபிஷு ஸைவைகா
விஷ்ணோர் அத்யந்த வல்லபா
பொருள்: ஶ்ரீமதி ராதாராணி பகவான் கிருஷ்ணருக்கு எந்த அளவிற்குப் பிரியமானவரோ, அதேபோல அவர் நீராடும் ராதா குண்டமும் பகவானுக்குச் சமமாகப் பிரியமானது. அனைத்துக் கோபியர்களிலும் ராதாராணியே பகவானின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.
பகவான் கிருஷ்ணரும் ஶ்ரீமதி ராதாராணியும் தங்களின் திவ்ய லீலைகளை முடித்துக்கொண்டு பிருந்தாவனத்தை விட்டு அகன்றபோது, அவர்களின் விருப்பப்படி இந்த ராதா குண்டமும் ஷ்யாம குண்டமும் சாமானிய மக்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. ஆனால், பக்தர்களின் தூய நம்பிக்கையில் அவைகள் இன்றும் அழியாமல் நிலைத்திருக்கின்றன.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆