பஹுலாவனம் – சத்தியம், தர்மம், தாயன்பின் மகிமை
பகவான் ஶ்ரீகிருஷ்ணரும் ஶ்ரீமதி ராதாராணியும் தங்களுடைய திவ்ய லீலைகளை நிகழ்த்திய வ்ரஜபூமியில் பன்னிரண்டு பிரதான வனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான பஹுலாவனம், ஒரு மகத்தான லீலையால் புகழ்பெற்றது. சத்தியத்தைக் காப்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்யத் துணிந்த ஒரு தாய்ப்பசு, தாயின் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்க முன்வந்த அதன் கன்றுக்குட்டி, இருவரையும் பிரிய மனமில்லாமல் அவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கத் தயாரான கோபாலன் என இவர்களுடைய அன்பும் தியாகமும் நிறைந்த செயல்களைக் கண்டு, ஒரு கொடிய புலியின் மனம்கூட இளகி மாறியது. சத்தியம், தர்மம், தாயன்பு ஆகியவற்றின் மேன்மையை எடுத்துரைக்கும் இந்த அற்புதமான லீலையின் காரணமாகவே அந்த வனம் பஹுலாவனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த லீலையின் பின்னணியை அறிந்துகொள்வதற்கு நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
பஹுலாவின் சத்தியநிஷ்டை
பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் லீலாபூமியான பிருந்தாவனத்தின் அழகிய கோசாலையில், பகவத் சிந்தனையில் திளைத்த ‘பஹுலா’ என்னும் தெய்விகப் பசு வாழ்ந்து வந்தது.
ஒருமுறை, அது ஏகாதசி விரதமிருந்த பின், துவாதசி அதிகாலையில் ஓர் அழகிய கன்றை ஈன்றெடுத்தது. தாகம் மேலிட, “சற்று நீர் அருந்திவிட்டுத் திரும்பலாம்” என்றெண்ணி அடர்ந்த காட்டிற்குள்ச் சென்றபோது, அதன்முன் ஒரு கொடூரமான புலி சீறிப் பாய்ந்தது!
மரண பய சூழ்நிலையிலும், பஹுலா பதற்றமின்றி பணிவுடன் வேண்டியது:
“காட்டின் இறைவனே! இப்போதுதான் என் கன்று பிறந்துள்ளது; அதற்குப் பால் கூடத் தராமல் தாகம் தீர்க்க இங்கு வந்தேன். தயவுசெய்து என்னை அனுப்பு; என் கன்றுக்கு அமுதளித்துவிட்டு நிச்சயம் உனக்கு இரையாகத் திரும்பி வருவேன்… இது சத்தியம்!”
தன் கூற்று உண்மை என உறுதியளிக்க, தன் திருவடிகளை உயர்த்தி சத்தியம் செய்தது அத்தெய்விகப் பசு.
பஹுலாவின் தியாக உணர்வையும் சத்தியத்தின் மீதிருந்த மாறா உறுதியையும் கண்ட அப்புலி வியந்து உறைந்தது. அதன் நெஞ்சில் கருணை அரும்ப, அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. “சரி! சென்று உன் கன்றின் பசி தீர்த்து அமுதளித்து வா. ஆனால் உரைத்த சொல் தவறாமல் திரும்ப வேண்டும்; வந்தபின் உன்னை என் உணவாக்கிக் கொள்வேன்!” என்று கூறி, அத்தெய்விகப் பசுவின் வருகைக்காக அப்புலி அங்கேயே ஆவலுடன் காத்திருந்தது.
தாயன்பும் கன்றின் தியாகமும்
புலியிடம் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பஹுலா, கன்றைப் பிரியப்போகும் துயரத்தில் கண்ணீர் மல்க நின்றது. அதைக் கண்ட கன்றுக்குட்டி, தாயின் சோகத்திற்குக் காரணம் கேட்டுத் திடுக்கிட்டது. “உங்களுக்குப் பதிலாக நான் அந்தப் புலியிடம் செல்கிறேன்; உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியாது!” என்று கதறி அழுதது. ஆனால் பஹுலாவோ, “உனக்கு இன்னும் வாழ்விருக்கிறது, உன்னை உன் கோபாலன் காப்பான்; வாக்கை மீறுவது தர்மமல்ல” என்று கூறி மறுத்துவிட்டது. இருவருமே ஒருவருக்கொருவர் உயிரைத் தியாகம் செய்யத் துடித்தனர்.
அப்போது அங்கே வந்த பசுவின் உரிமையாளன் கோபாலன், நடந்ததை அறிந்து கண்ணீருடன், “உங்களுக்குப் பதிலாக நானே அந்தப் புலியிடம் செல்கிறேன்; உங்களை இழந்து நான் வாழ மாட்டேன்” என்றான். அவனையும் தாய் பஹுலாவும் கன்றும் தடுத்தன. இறுதியில், பிரிவைத் தாங்க முடியாத தாய், கன்று மற்றும் கோபாலன் மூவருமாகச் சேர்ந்து அந்தப் புலியை நோக்கிப் புறப்பட்டனர்.
புலியின் மனமாற்றமும் பகவானின் தோற்றமும்
தனியாக வரும் என்று எதிர்பார்த்த பஹுலாவுடன் கன்றும் கோபாலனும் சேர்ந்து வந்து, ஒருவருக்காக ஒருவர் தன்னுயிரைத் தியாகம் செய்யத் துடிப்பதைக் கண்ட புலியின் கொடூர மனம் உருகி, பேரன்பும் கருணையும் மலர்ந்தது. அந்நாழிகையில் சாட்சாத் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் குழலூதி அங்கு தோன்றினார்; அனைத்தும் அவரது திவ்ய லீலையே என யாவரும் உணர்ந்தனர். பஹுலாவின் மாறா சத்தியநிஷ்டையை மெச்சிய பகவான், அவ்வனத்திற்கு ‘பஹுலாவனம்’ எனப் பெயரிட்டு, அப்புனித நாளை ‘பஹுலாஷ்டமி’ என அருளினார். ஶ்ரீராதாகுண்டத்திற்கு அருகிலுள்ள பஹுலாவனத்தில் இன்றும் இவர்களின் திவ்ய விக்கிரகங்கள் இத்தியாக லீலையைப் பறைசாற்றுகின்றன
கந்தர்வர்களின் சாபமும் பஹுலாவனத்தின் பின்னணியும்
பஹுலாவனத்தில் நிகழ்ந்த இந்த லீலையின் பின்னணியில் இன்னொரு பழமையான சம்பவமும் உள்ளது. அதனை அறிந்துகொண்டால், இந்த லீலையுடன் தொடர்புடையவர்களின் முற்பிறவியைப் பற்றியும் புரிந்துகொள்ளலாம்.
ஹுஹூ, ஹாஹா என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தனர். ஒருமுறை அவர்கள் தேவர்கள் அனைவரும் கூடியிருந்த சபையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது, நாரதமுனியும் பிபலாயன ரிஷியும் அங்கு வந்தனர். அந்த இரண்டு முனிவர்களும் சபைக்குள் நுழைந்ததும், அங்கிருந்த தேவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் ஹுஹூவும் ஹாஹாவும் மட்டும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து நிற்கவில்லை. இதைக் கண்ட பிபலாயன ரிஷிக்குக் கடும் கோபம் ஏற்பட்டதால், “அகங்காரம் கொண்ட கந்தர்வர்களே! குருமார்களையும் முனிவர்களையும் மதிக்காத நீங்கள் பூமியில் விலங்குகளாகப் பிறக்கக் கடவது!” என்று சபித்தார்.
ரிஷியின் சாபத்தைக் கேட்ட இரு கந்தர்வர்களும் பணிவுடன் அவரிடம் வேண்டிக்கொண்டனர். “முனிவரே! தாங்கள் சிறந்த யோகி. எங்கள் உள்ளங்களைத் தங்கள் யோக சக்தியால் அறிந்துகொள்ளுங்கள். நாங்கள் மனதளவில் தங்களுக்கு மரியாதை செலுத்தினோமா இல்லையா என்பது அப்போது தங்களுக்குப் புரியும்” என்றனர். உடனே பிபலாயன ரிஷி யோகநிலையில் ஆழ்ந்து, தமது திவ்ய திருஷ்டியால் அவர்களின் உள்ளங்களை ஆராய்ந்தார். அப்போதுதான், வெளிப்படையாக எழுந்து நிற்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் உள்ளத்தால் தமக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்ததை உணர்ந்தார்.
தான் அவசரப்பட்டுத் தவறாகச் சபித்துவிட்டதை உணர்ந்த ரிஷி மிகவும் வருந்தினார். பின்னர் அவர், “நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். எனது இந்தத் தவற்றின் காரணமாக பூமிதேவியும் ஒரு பசுவாகப் பிறக்க வேண்டியிருக்கும். ஹுஹூ ஒரு புலியாக மாறுவான். இந்தச் சாபம் நிகழ்வதைத் தடுக்காத நாரதமுனியும் ஒரு கோபாலனாகப் பிறக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார். இவ்வாறு அந்தச் சாபத்தின் காரணமாக ஹுஹூ புலியாகவும், பிபலாயன ரிஷி பஹுலா என்ற பசுவாகவும், நாரதமுனி அந்தப் பசுவின் கோபாலனாகவும் பிறந்தனர். முற்பிறவியில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே, பின்னாளில் பிருந்தாவனத்தில் ராதாகுண்டத்திற்கு அருகிலுள்ள பஹுலாவனத்தில் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் முன்னிலையில் இந்த அற்புதமான லீலை நிகழ்ந்தது.
இன்றைய பஹுலாவனம்
இன்றும் பஹுலாவனத்திற்குச் சென்று இந்தப் புனித லீலையுடன் தொடர்புடைய இடங்களைத் தரிசிக்கலாம். அங்கு மிகவும் அழகிய சங்கர்ஷணகுண்டம் அமைந்துள்ளது; அந்தக் குண்டத்தின் அருகில் ஒரு சிறிய கோயிலும் உள்ளது. அக்கோயிலுக்குள் பகவானின் திவ்ய விக்கிரகத்துடன் பஹுலா, அதன் கன்றுக்குட்டி, கோபாலன் மற்றும் புலி ஆகியோரின் விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். அவற்றைக் காணும்போது, பல காலங்களுக்கு முன்பு அங்கே நிகழ்ந்த அந்தத் திவ்ய லீலை நம் கண்முன்னே விரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
பஹுலாவின் சத்தியநிஷ்டை, கன்றுக்குட்டியின் தாயன்பு, கோபாலனின் பாசம், புலியின் மனமாற்றம் என இந்த லீலை நமக்குப் பல உயர்ந்த பண்புகளை உணர்த்துகிறது. தர்மம் என்பது நமக்குச் சாதகமான சூழ்நிலையில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; உயிருக்கு ஆபத்து வந்தாலும் கொடுத்த வாக்கைக் காப்பதும், உண்மையைக் கைவிடாமல் இருப்பதுமே உண்மையான தர்மத்தின் அடையாளம். அதேபோல், உண்மையான அன்பு என்பது தனக்காக எதையும் எதிர்பார்க்காமல், பிறருடைய நலனுக்காகத் தன்னையே தியாகம் செய்யவும் தயங்காது.
பஹுலாவின் இந்தத் திவ்ய லீலை, சத்தியம், தர்மம், தாயன்பு, தியாகம் ஆகிய உயர்ந்த பண்புகளின் மகிமையை நமக்கு எடுத்துரைப்பதோடு, இத்தகைய பண்புகளுடன் வாழ்வதே பகவானுக்கு மிகவும் பிரியமானது என்பதையும் நம் இதயத்தில் ஆழமாகப் பதியச் செய்கிறது.
வழங்கியவர் – தீன பந்து தாஸ்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆