ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவத புராணம் / எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 6
பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்துவிடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார்.
சுக்ராசாரியரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். அறம், பொருள், இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்கு அளித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்துகொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தைப் பூமித்தாயாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால், பொய் பேசுவதினால் ஏற்படும் பாவ விளைவுகளில் ஒருவன் அச்சம்கொள்ள வேண்டும். ஒரு பேரரசின் அல்லது சாம்ராஜ்யத்தின் பெருக்கம் தற்காலிகமானதே; அதனால் பாமர மக்களுக்கு நன்மையில்லை எனில், அத்தகைய பெருக்கத்தில் மதிப்பில்லை. முற்காலத்தில், பேரரசர்களும் சக்கரவர்த்திகளும் தங்களது சாம்ராஜ்யங்களைப் பொதுஜனங்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு விரிவடையச் செய்தனர். உண்மையில், பொதுமக்களின் நன்மைக்குரிய அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில், முதல்தரமான மனிதர்கள் சில சமயங்களில் தங்களது உயிரையும்கூட தியாகம் செய்துள்ளனர். பெருமை வாய்ந்த செயல்களைச் செய்துள்ள ஒருவர் ஒருபோதும் மடிவதில்லை; அவர் நிரந்தரமாக வாழ்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, புகழே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். நற்புகழ் அடையும் பொருட்டு ஒருவர் மிகவும் ஏழ்மையானவராக ஆகிவிட நேர்ந்தாலும், அது ஓர் இழப்பல்ல. பிரம்மச்சாரியான இந்த வாமனதேவர் பகவான் விஷ்ணுவாகவே இருந்தபோதிலும், தான் அளிக்கப்போகும் தானத்தை ஏற்றுக்கொண்டபின் தன்னை அவர் கைது செய்தாலும், அவரிடம் தான் பகைமை பாராட்டப்போவதில்லை என்று பலி மகாராஜன் எண்ணினார். இவ்வெல்லா விஷயங்களைப் பற்றியும் நன்கு யோசித்த பலி மகாராஜன், முடிவில் தம்மிடமிருந்த அனைத்தையும் தானமாகக் கொடுத்துவிட்டார்.
பிறகு பகவான் வாமனதேவர் உடனே தம்மை விஸ்வரூபமாக விரிவடையச் செய்தார். பகவான் சர்வவியாபகம் உள்ளவர் என்பதையும், அனைத்தும் அவரது உடலுக்குள் அடங்கியுள்ளன என்பதையும், வாமனதேவரின் கருணையின் மூலமாகப் பலி மகாராஜனால் காண முடிந்தது. அந்த ரூபத்தில் பகவான் விஷ்ணு ஒரு கிரீடம், மஞ்சள் நிற ஆடைகள், ஶ்ரீவத்ஸ அடையாளம், கௌஸ்துப மணி, ஒரு மலர் மாலை ஆகியவற்றை அணிந்து, அவரது உடல் முழுவதும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகக் காணப்பட்டார். இந்த ரூபத்தில் தோன்றிய வாமனதேவரை பரம விஷ்ணுவாகவே பலி மகாராஜனால் காண முடிந்தது. பகவான் படிப்படியாக விரிவடைந்து உலகம் முழுவதையும் மூடிவிட்டார். அவரது உடலை விரிவடையச் செய்து ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டார். அவரது கரங்களைக் கொண்டு எல்லாத் திசைகளையும் அவர் நிரப்பிவிட்டார். மேலும் அவரது இரண்டாவது அடியால் உயர்கிரக அமைப்பு முழுவதையும் ஆக்கிரமித்தார். ஆகவே மூன்றாவது அடியை வைப்பதற்குக் காலியான இடம் இருக்கவில்லை.
(ஶ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 20)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆