யுதிஷ்டிர மகாராஜன், “அஜித” அல்லது தவறாதவரான பகவானின் பாதுகாப்பில் இருப்பதால், மேலே குறிப்பிட்டிருப்பதுபோல், பகவானின் செல்வங்களான, நதிகள், சமுத்திரங்கள், மலைகள், காடுகள் முதலான அனைத்தும் திருப்தியடைந்து, அதன் உற்பத்திப் பொருட்களை வரியாக அரசருக்கு அளித்து வந்தன. பரம புருஷரின் பாதுகாப்பின் கீழ் புகலிடம் தேடுவதுதான் வெற்றியின் இரகசியமாகும். அவரது அனுமதியின்றி எதுவும் சாத்தியமாகாது. கருவி மற்றும் இயந்திரங்களின் பலத்தைக் கொண்டு நமது சொந்த முயற்சியால் பொருளாதாரத்தை உயர்த்துவது அனைத்தும் ஆகிவிடாது. பரம புருஷரின் அனுமதி இருக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு கருவிகளின் உதவி இருந்தபோதிலும், அனைத்தும் தோல்வியாகவே முடியும். வெற்றிக்கு முடிவான காரணமாக இருப்பவர் “தைவ”, பரம புருஷராவார். பரம புருஷரின் பிரதிநிதியாக இருந்து, பொதுமக்களின் நலனை கவனித்துக் கொள்ள வேண்டியது அரசரின் கடமை என்பதை யுதிஷ்டிர மகாராஜனைப் போன்ற அரசர்கள் நன்கறிவர். உண்மையில் நாடு பரம புருஷருக்குச் சொந்தமாகும். நதிகள், சமுத்திரங்கள், காடுகள், மலைகள் மற்றும் மூலிகைகள் போன்றவை மனிதனால் உண்டாக்கப்பட்டவை அல்ல. அவை பகவானின் படைப்புகளாகும். மேலும் பகவானுடைய அச்செல்வங்களை அவரது சேவைக்காக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். “அனைத்தும் மக்களுக்காகவே உள்ளன. எனவே அரசாங்கமும் மக்களுக்காகவே உள்ளது. மக்களாலேயே அது நடத்தப்படுகிறது” என்பது இன்றைய ஸ்லோகமாகும். கடவுள் சிந்தனை மற்றும் மனித வாழ்வின் பூரணத்துவம் ஆகியவை தெய்வீகமான பொதுவுடைமைக் கொள்கைகளாகும். ஆனால் இவற்றின் அடிப்படையில் புதியதொரு மனித வர்க்கத்தை இப்பொழுது உண்டாக்குவதற்கு, உலகம் மீண்டும் யுதிஷ்டிர மகாராஜனை அல்லது பரீட்சித்து மகாராஜனைப் போன்ற அரசர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். பகவானின் ஆணையால் அனைத்தும் போதுமான அளவு உள்ளன. மேலும் மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையிலோ அல்லது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலோ விரோதம் இல்லாமல் வசதியோடு வாழ, இப்பொருட்களை நம்மால் சரியாக உபயோகித்துக் கொள்ள முடியும். பகவானின் ஆட்சி எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. பகவான் திருப்தியடைந்தால், இயற்கையின் எல்லா பகுதிகளும் திருப்தியடையும். நதிகள் பெருக்கெடுத்தோடி நிலத்தை வளம்பெறச் செய்யும். சமுத்திரங்கள், போதுமான அளவு தாதுப் பொருட்களையும், முத்துக்களையும் மற்றும் மணிகளையும் வழங்கும்; காடு, போதுமான மரங்களையும், மூலிகைகளையும் மற்றும் காய்கறிகளையும் வழங்கும்; மேலும் பருவ காலங்கள், பழங்களையும், மலர்களையும் மிகுதியாக உற்பத்தி செய்ய நன்கு உதவும். தொழிற்சாலைகளையும், கருவிகளையும் நம்பியுள்ள செயற்கையான வாழ்வுமுறை, லட்சக்கணக்கான மக்களின் உழைப்பால், ஒரு சிலருக்கு மட்டும் பெயரளவிலான மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகும். பொதுமக்களின் சக்தி தொழிற்சாலை உற்பத்திகளில் ஈடுபடுத்தப்படுவதால், இயற்கையின் உற்பத்திகள் தடுக்கப்பட்டு விடுகின்றன. இதனால் பொதுமக்கள் திருப்தியடைய முடியாமல் போகிறது. நல்ல கல்வி புகட்டப்படாததால், பொதுமக்கள் சுயநலவாதிகளாக மாறி, இயற்கைச் சேமிப்புகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதனால் தனி மனிதர்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் தீவிரமான போட்டி ஏற்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பகவானுடைய பிரதிநிதிகளின் ஆட்சி இன்று இல்லை. இந்த ஒப்பீட்டு நோக்கம் முறையால் தற்கால நாகரிக வாழ்வின் குறைகளை ஆராய்ந்து, மனிதனை தூய்மைப்படுத்தவும், காலத்திற்குப் பொருந்தாதவைகளை துடைத்தொழிக்கவும், நாம் யுதிஷ்டிர மகாராஜனின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்ரீமத்-பாகவதம் 1.10.5 / பொருளுரை